Last Updated : 05 Feb, 2017 12:54 PM

 

Published : 05 Feb 2017 12:54 PM
Last Updated : 05 Feb 2017 12:54 PM

மொழியின் பெயர் பெண் - ஜீனா மோர்த்: கடவுளின் தழுவல்

இந்தத் தொடரில் முதல்முறையாக சமகாலத்துப் பெண்கவி ஒருவர்; அதுவும் இளம் கவிஞர். பெலாருஷிய மொழிக் கவிஞரான வல்ஜீனா மோர்த் (வயது 35)!

சோவியத் ரஷ்யாவிடமிருந்து 1991-ல் சுதந்திரம் பெற்ற பெலாரஸ் தேசத்தில் 1981-ல் பிறந்தார் வல்ஜீனா மோர்த். அவர்கள் வீட்டின் நூலகத்தின் காரணமாக சிறு வயதிலேயே வல்ஜீனாவுக்கு இலக்கியத்தின் மீது ஈடுபாடு ஏற்பட்டது. அவரது பாட்டி ஜனினா, வல்ஜீனாவின் மீது பெரும் தாக்கத்தைச் செலுத்தினார். கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டிலேயே தனது குழந்தைப் பருவத்தை வல்ஜீனா கழித்தார். பாட்டியுடனான நெருக்கம் இலக்கியத்துக்கும் ஊக்கம் தந்தது. பிற்காலத்தில் தனது பாட்டியைப் பற்றிச் சில கவிதைகளையும் வல்ஜீனா எழுதினார்.

இசைக் கலைஞர் ஆக முயன்று அதில் வெற்றி பெற முடியாமல் போனதால் கவிதை எழுதுவதில் முழு வீச்சில் ஈடுபட ஆரம்பித்தார். அவர் இருந்த பிரதேசத்தின் மொழியாக ரஷ்ய மொழி இருந்தாலும் வல்ஜீனா பெலாருஷிய மொழியிலேயே கவிதை எழுதினார். அவரைப் போல ரஷ்ய மொழியில் எழுத மறுத்து பெலாருஷிய மொழியில் எழுதியவர்களின் சிறு குழுவோடு வல்ஜீனா தன்னை இணைத்துக்கொண்டார். பெலாருஷிய மொழியை அழியாமல் காப்பதற்கான தொடர் செயல்பாடுகளில் இந்தக் குழுவினர் ஈடுபட்டனர். பிறப்பால் ரஷ்யரும் பெலாரஸின் தற்போதைய அதிபருமான அலெக்ஸாண்டர் லூகாஷென்கா பெலாருஷிய மொழியைப் புழக்கத்திலிருந்து ஒழிக்கும் முயற்சிகளை மேற்கொண்டபோது வல்ஜீனா கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

பெலாரஸின் தலைநகர் மின்ஸிக்கில் உள்ள மொழியியல் பல்கலைக்கழகத்தில் பயின்ற வல்ஜீனா ஆங்கில மொழியில் பட்டம் பெற்றார். 2000-லிருந்து பல்வேறு இதழ்களில் வல்ஜீனாவின் கவிதைகள் வெளிவர ஆரம்பித்தன. ஆங்கிலத்திலும் அவரது கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டன. கவிதைகளை நிகழ்த்துவதிலும் வல்ஜீனா விருப்பமுடையவராக இருந்தார். 2005-ல் அவரது முதல் கவிதைத் தொகுப்பு வெளியானது.

சில காலங்களுக்குப் பிறகு அமெரிக்காவில் குடியேறிய வல்ஜீனியா, அங்கே ஜோஸஃப் கார்த்தீஸ் என்பவரை மணம் புரிந்துகொண்டார். வல்ஜீனா தனது கவிதைகளை கவிஞர் ஃப்ரான்ஸ் ரைட், அவரது மனைவி எலிஸபெத் ரைட் ஆகியோரின் உதவியுடன் தொடர்ந்து மொழிபெயர்த்துவருகிறார். தனது கவிதைகளுக்காகப் பல்வேறு விருதுகளை வல்ஜீனா பெற்றிருக்கிறார். ‘பொயட்ஸ் அண்ட் ரைட்டர்ஸ்’ என்ற இலக்கிய இதழின் அட்டைப் படத்தை அலங்கரித்த இளம் பெண் எழுத்தாளர் என்ற பெருமை வல்ஜீனாவுக்கே உரியது.

பெலாருஷிய மொழியிலிருந்து தனது கவிதைகளை மொழிபெயர்த்துவந்த வல்ஜீனா 2011-ல் ‘தொகுக்கப்பட்ட உடல்’ என்ற தொகுப்பை நேரடியாக ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். கவிதை எழுதுதல், கவிதை நிகழ்த்துதல், பெலாருஷிய மொழியைக் காப்பதற்கான முயற்சிகள் என்று வல்ஜீனா தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். இந்த இளம் வயதுக்குள் அவர் உருவாக்கியிருக்கும் படைப்புகள் எதிர்காலத்திலும் அவர் மேலும் வலுவானதொரு கவிஞராக நிலைபெறுவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.

வல்ஜீனாவின் கவிதைகளின் தனிச் சிறப்புகளுள் ஒன்று அவர் முற்றுப்புள்ளி, காற்புள்ளி, உணர்ச்சிக் குறி, கேள்விக் குறி போன்ற நிறுத்தற்குறிகளைப் பயன்படுத்துவதில்லை என்பது. இதனால் முதலில் சற்றுக் குழப்பத்தை ஏற்படுத்துவது போலத் தோன்றினாலும் நிதானமான வாசிப்பில் திறந்துகொண்டே செல்பவை அவரது கவிதைகள்.

பாட்டி

வலியறியாதவள் என் பாட்டி
பஞ்சமென்பது ஊட்டச்சத்து
வறுமைதான் செல்வம்
தாகம்தான் நீர் என்றெல்லாம்
நம்புபவள் அவள்
கைத்தடியைச் சுற்றிப் படரும்
திராட்சைக் கொடி போன்றது அவளுடல்
வெயில் திட்டுகள் போன்ற
மாத்திரைகளை விழுங்கிவிட்டு
இணையம் வழியாகவும் தொலைபேசி வழியாகவும்
அழைப்பு கொடுக்கிறாள் அமெரிக்காவுக்கு
ரோஜாவாய் மாறிய அவள் இதயம்
அதை முகர்ந்துபார்க்க மட்டுமே
முடியும் நம்மால்
நம் நெஞ்சோடு அணைத்துக்கொண்டு
வேறென்ன செய்ய முடியும் நம்மால்
ரோஜா அவ்வளவுதான்
நாரையின் கால்கள் போன்ற
அவள் கைகள்
சிவப்புக் குச்சிகள்
முழந்தாளிட்ட நான்
உனது கபாலத்தின் வெண்ணிலவைப் பார்த்து
ஓநாய்போல் ஓலமிட்டபடி
சொல்கிறேன் பாட்டி உன்னிடம்
இது வலியில்லை என்று
உன்னை முத்தமிடுகையில் உனக்குக் குத்தும்படி
சவரம் செய்யாத கன்னம் கொண்ட
சக்திமிக்க கடவுளொன்றின் தழுவல் என்று

ஆண்கள்

ஆண்கள் வருகிறார்கள்
நாள்காட்டியொன்றின் தேதிபோல
தவறாமல் வருகிறார்கள் மாதம் ஒரு முறை
ஆழமான புட்டிகளின்
அடியாழத்தைக் கண்டிருக்கும் ஆண்கள்
விண்ணுக்கும் மண்ணுக்கும் அரசர்கள்
அறுந்த அட்டிகையின் முத்துகளைப் போல
நடுங்குகிறேன் நான் அவர்களின் தொடுதலில்
அவர்தம் இதயத் துடிப்புகள் திறக்கின்றன கதவுகளை
கப்பல்கள் செவிமடுக்கின்றன அவர்தம் ஆணையொலிக்கு
அவர்களின் முகங்களை வெறிநாய் போல நக்கும் காற்று
அவர்களின் ரயிலுக்குப் பின்னே சாடிக் குதித்து ஓலமிடுகிறது
தம் ஆடைகளைக் களைவதைப் போல்
களைகிறார்கள் என் ஆடைகளை
கைகளில் ஏந்திக்கொள்கிறார்கள் என்னை
ஒரு சாக்ஸஃபோன் போல
மார்பகத்திலிருந்து கசியும் பால் போல
இந்த இசையே முடிவற்ற இந்த ப்ளூஸ் இசையே
மனிதச் செவிக்கெட்டா உச்சஸ்தாயியில் அந்த ஸ்வரங்கள்
கடவுளருக்கெட்டா கீழ்ஸ்தாயியில் அந்த ஸ்வரங்கள்
குழந்தைகளுக்குச் சிரிக்கக் கற்றுத்தரும் ஆண்கள்
காலத்துக்கு ஓடக் கற்றுத்தரும் ஆண்கள்
கிளப் கழிவறைகளில் மற்ற ஆண்கள் மீது
மையல்கொள்ளும் ஆண்கள்
மரண தேவதையின் கைகளிலேயே
முத்தமிட்டிருக்கும் ஆண்கள்
என்னை நாற்காலியில் கட்டிப்போட்ட
என் வெருட்டல்களையும் துர்கனவுகளையும் ஒருபோதும் கண்டுகொள்ளாத ஆண்கள்
எரிந்துகொண்டிருக்கும் விமானங்கள்போல்
அம்மா அவர்களின் உதடுகள் வீழ்கின்றன என் மேல்
அவர்கள் வலியவர்கள் பொறுமைசாலிகள்
கூட இவ்வுலகே இடிந்துவிழுகையில்
புகலிடம் தேடி எல்லோரும் ஓடுகையில்
ஆளுக்கொன்றாய் என் இமைமயிர் பிடுங்கிச் செல்ல
சற்றே நிற்கிறார்கள் அவர்கள்
அம்மா என்னுடைய அம்மாவாக இல்லையென்றாலும் பரவாயில்லை
யாருடைய அம்மாவாக இருந்தாலும் சரி
திரும்பி வா
மீட்டுச்செல் என்னை
தேடிக் கண்டுபிடி என்னை
இந்த விமான இடிபாடுகளிலிருந்து

கவிதைகள் மொழிபெயர்ப்பு: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x