Published : 17 Jul 2016 06:15 PM
Last Updated : 17 Jul 2016 06:15 PM

எதையும் சாதிக்கப் பாலினம் தடையில்லை! - கெளதமி நேர்காணல்

நடிகை, ஆடை வடிவமைப்பாளர் எனப் பல்வேறு தளங்களில் இயங்கிவருபவர் கெளதமி. தனது பிறந்த நாளை முன்னிட்டு ‘லைஃப் அகெய்ன்’ என்ற தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்திருக்கிறார். புற்றுநோயிடம் போராடி மீண்டவரின் ஒவ்வொரு வார்த்தையிலும் தன்னம்பிக்கை. யாரோ ஒருவர் நம்மை மீட்பார் என்று காத்துக்கொண்டிருப்பதைவிட நமக்கு நாமே உதவுவதுதான் இந்த நிறுவனத்தின் அடிப்படை என்று சொல்கிறார் கௌதமி.

‘லைஃப் அகெய்ன்’ தொண்டு நிறுவனத்தின் செயல்திட்டங்கள் என்ன?

நாம் எவ்வளவு உயரிய எண்ணத்தோடு இருந்தாலும், உடம்பில் ஒரு கோளாறு இருந்தால் மூளை செயல்படாது. உடம்பு ஒரு கோயில் எனப் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். யோகா, சாப்பிட வேண்டிய உணவு வகைகள், சாப்பிடும் முறை, வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது, நல்ல பழக்க வழக்கங்கள் எனப் பலவற்றைச் சொல்லிக்கொடுக்க இருக்கிறோம். வாழ்க்கையில் எல்லாவற்றையும் எல்லாருமே தெரிந்து கொள்ள முடியாது. விஷயங்களைச் சொல்லிக்கொண்டே வந்தால், ஏதோவொரு விஷயம் யாருக்காவது உதவி பண்ணுவது போல இருக்கும். அதுதான் எங்களுடைய நோக்கம்.

தடைகளைத் தாண்டி வந்து ஜெயித்தவர்கள், அவர்களுடன் இருந்தவர்கள், உதவி செய்தவர்கள் என சேகரித்து யூ-டியூப் வீடியோவாக வெளியிடப்போகிறோம். முதலில் புற்றுநோய் குறித்த வீடியோவைத் தயாரிக்கவிருக்கிறோம். இந்த வீடியோவைப் பார்க்கிறவர்களுக்கு பயம் நீங்கித் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நானும் இதைக் கடந்து வருவேன் என்ற உற்சாகம் பிறக்கும்.

புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டபோது உங்க ளுக்கு உறுதுணையாக இருந்தவர்கள் யார்?

உண்மையைச் சொன்னால் என்னுடைய அம்மா, அப்பா. இப்போ அவங்க உயிரோடு இல்லை. எனக்குப் புற்றுநோய் என்று தெரிந்ததும் அழுது புலம்பவில்லை. நானும் அப்படித்தான் உணர்ந்தேன். இதற்கு சிகிச்சை உண்டு என்ற தெளிவும் எனக்கு இருந்தது. எனக்குக் கிடைத்த மருத்துவர்கள் மிகவும் அற்புதமானவர்கள். முழு நம்பிக்கையுடன் அவர்கள் சொல்வதை ஒரு குழந்தையைப் போலக் கேட்டுக்கொண்டு அதன்படி நடந்தேன்.

என் மகள் எனக்கு வலிமையைக் கொடுத்தாள். என்னுடைய சித்தி நான் மருத்துவமனையில் இருக்கும்போது வீட்டைக் கவனித்துக்கொண்டார். நான் மருத்துவமனைக்குப் போகும்போது என் அத்தை கூடவே வந்து இருப்பார். இவர்களுடன் என் அண்ணன், அண்ணி என என்னைச் சுற்றி அவ்வளவு நல்ல மனிதர்கள் இருந்ததால் புற்றுநோயைக் கடந்துவர முடிந்தது.

மக்களிடம் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறதா?

மேல்தட்டு மக்களுக்கு ஏற்பட்டிருப்பதைப் போன்ற விழிப்புணர்வு அடித்தட்டு மக்களுக்கு இன்னும் ஏற்படவில்லை. அதனால் ‘லைஃப் அகெய்ன்’ நிறுவனத்தின் பயணம் அடித்தட்டு மக்களிலிருந்துதான் ஆரம்பிக்கும். நகரங்களை விட்டு வெளியே உள்ளவர்களிடமிருந்துதான் என்னுடைய பணியை ஆரம்பிக்க வேண்டும் எனத் திட்டமிட்டிருக்கிறேன்.

நீங்கள் ஆடை வடிவமைப்பு பற்றிப் படிக்கவில்லை. தசாவதாரம் படத்துக்கு ஆடை வடிவமைப்பு வாய்ப்பு வந்தபோது எப்படி உணர்ந்தீர்கள்?

அதை ஒரு சவாலாகக் கொடுத்தார்கள். நான் சினிமா சார்ந்த படிப்புகள் அனைத்தையும் படித்துத் தெரிந்துகொள்ளாமல் சினிமா துறையிலேயே கற்றுக்கொண்டேன். இன்ஜினீயரிங் படித்துக்கொண்டிருக்கும் போது திரையுலகில் நுழைந்தது ஒரு விபத்துபோல நடந்தது. திரையுலகில் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்றுகூடத் தெரியாது. ஆனால் அனைத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம், எனக்குப் பல விஷயங்களைக் கற்றுக்கொடுத்தது.

ஆடை வடிவமைப்பில் எனக்கு வலது கரமாக இருப்பவர் ரமணா. நான் நடிக்க வந்த புதிதில் எனது ஆடை வடிவமைப்பு உதவியாளராக இருந்தவர். நான் நடிப்பதை நிறுத்தியவுடன், அவர் ஆடை வடிவமைப்பாளராகிவிட்டார். நான் ஆடை வடிவமைப்பில் பணியாற்ற ஆரம்பித்தவுடன் அவரை அழைத்தேன். நான் பணியாற்றும் அனைத்துப் படங்களிலும் அவரது பங்களிப்பும் இருக்கும். உண்மையாக உழைப்பார். எந்தொரு வேலையையும் முடியாது என சொல்லவே மாட்டார். எப்பாடு பட்டாவது சொன்ன வேலையைச் செய்து முடிப்பார்.

‘சபாஷ் நாயுடு’ கேரக்டருக்காக கமல் சாருக்கு பேடிங் எல்லாம் போட்டு ஆடை ஒன்று தயார் செய்ய வேண்டியதிருந்தது. ஹாலிவுட்டில் சொல்லிக்கொள்ளலாம், ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று நினைத்திருந்தோம். எதற்கும் இருக்கட்டுமே என நாங்கள் இங்கிருந்து ஒன்றை வடிவமைத்து அனுப்பினோம். மிகப் பெரிய மேக்கப் குரு மைக்கேல் வெஸ்மோ அதை பார்த்துவிட்டு போன் செய்தார்.

“எதற்கு இங்கே பண்ண வேண்டும் என ஆசைப்படுகிறீர்கள்? நீங்கள் அங்கிருந்து அனுப்பியது இதைவிட அற்புதமாக இருக்கிறது. பல காட்சிகளில் நடிப்பதற்கு நீங்கள் வடிவமைத்த ஆடைதான் வசதியாக இருக்கும்” என்று சொன்னார். உடனே நான் ரமணாவைப் அழைத்துப் பாராட்டினேன். அதைத் தயார் செய்ய இருவரும் எவ்வளவு கஷ்டப்பட்டோம் என்பது எனக்குத் தெரியும். உலகின் பெரிய மேக்கப் ஜாம்பவான் எங்களுடைய பணியைப் பாராட்டியது எங்களுக்குப் பெரிய அங்கீகாரம்.

ஆடை வடிவமைப்பின் சவால் என்றால் எதைச் சொல்வீர்கள்?

எல்லாமே சவால்தான். ஏனென்றால் இயக்குநர் ஒரு கதாபாத்திரத்தை உருவாக்குகிறார். அதை நிஜமாக்குவது என்னுடைய பொறுப்பு. அந்தக் கதாபாத்திரம் சாதாரண உடை அல்லது ரொம்ப விலையுர்ந்த ஆடை அணியக்கூடியவராக இருக்கலாம். ஆனால், அந்த உடைக்கு ஏற்றவாறு தலை முடி, செருப்பு என அனைத்தையும் வடிவமைத்துக் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுப்பது என் பொறுப்பு.

‘பாபநாசம்’ படத்தைத் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்புகள் வந்திருக்குமே?

‘பாபநாசம்’ படத்தில் எனது கதாபாத்திரத்துக்கு மக்கள் அளித்த வரவேற்பை வார்த்தையால் சொல்ல முடியாது. என் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதை அப்போதுதான் தெரிந்துகொண்டேன். அந்த ஊக்கம், உற்சாகத்தில் மோகன்லாலுடன் ஒரு படம் பண்ணியிருக்கிறேன். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. தமிழில் ‘நமது’ என பெயரிட்டிருக்கிறார்கள். குடும்பக் கதை என்று சொல்லப்பட்டாலும் அது ஒரு சமூகத்தின் கதை. அந்தப் படத்தின் இயக்குநர் சந்திரசேகர் முதல் படத்துக்கே தேசிய விருது பெற்றவர்.

இன்று சமூகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழலில் உங்கள் மகளுக்கு ஒரு அம்மாவாக நீங்கள் கற்றுக் கொடுத்திருப்பது என்ன?

தைரியம்தான். நீ என்ன ஆக வேண்டும் என நினைக்கிறாயோ, சாதிக்க வேண்டும் என நினைக்கிறாயோ அதை உன்னால் செய்ய முடியும். எங்கள் வீட்டில் என்னையும் என் அண்ணனையும் வேற்றுமை பாராட்டாமல்தான் வளர்த்தார்கள். அதனால் எப்போதும் நான் ஒரு பெண், என்னால் இதைச் செய்ய முடியாது என்று நான் நினைத்ததில்லை. நான் ஒரு தனி மனிதன், என்னுடைய திறமைகள், என்னுடைய கனவுகள் என்பதை வைத்துத்தான் எனது வாழ்க்கையை நான் முடிவு செய்வனே தவிர என்னுடைய பாலினம் அதை முடிவு செய்யக் கூடாது.

அடுத்த திட்டம் என்ன?

சினிமா தயாரிப்பு. எனக்கு சினிமா தயாரிப்பில் ஆர்வம் அதிகம். என்ன படம், யாரெல்லாம் நடிகர்கள் என்பதை விரைவில் அறிவிப்போம்.

படம்: எல்.சீனிவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x