Last Updated : 08 Jan, 2017 03:41 PM

 

Published : 08 Jan 2017 03:41 PM
Last Updated : 08 Jan 2017 03:41 PM

முகம் நூறு: கோடிகளில் கொடிகட்டும் தேன்மொழி

பள்ளிப் படிப்பை முடித்ததுமே திருமணம் செய்துவைக்கப்பட்ட தேன்மொழி, இன்று பல கோடிகள் புரளும் ஏற்றுமதித் தொழிலில் முத்திரை பதித்துவருகிறார்!

மதுரை செல்லூரில் பிறந்த இவர், பெண் குழந்தை பிறந்தாலே செலவு என்ற பொதுவான நம்பிக்கையிலிருந்து தப்பவில்லை. அடுத்தடுத்து ஐந்தும் பெண்களாகப் பிறந்ததில் தேன்மொழியின் அப்பா தனக்குப் பொறுப்பு கூடிப்போனதாக உணர்ந்தார். அதனால் நல்ல வரன் கிடைத்ததுமே பள்ளிப் படிப்பை முடித்திருந்த தேன்மொழியின் திருணத்தை நடத்திவைத்தார். ஆனால் தேன்மொழிக்கோ நிறைய நிறைய படிக்க வேண்டும், ஏதாவது சாதிக்க வேண்டும், தன்னை நான்கு பேர் வந்து பேட்டி எடுக்க வேண்டும் என்றெல்லாம் பல கனவுகள் இருந்தன.

அதில் ஒன்றைக்கூட தன்னால் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம் அவரது மனத்தை அரித்துக்கொண்டே இருந்தது. தன் தங்கைகள் நான்கு பேரும் கல்லூரியில் படித்தபோது அவரது எண்ணம் இன்னும் தீவிரமானது. கணவர், குழந்தை என்று நாட்கள் நகர்ந்தாலும் குடும்பத்துக்குத் தன்னால் ஆன பொருளாதாரத்தை ஈட்ட வேண்டும் என்ற விருப்பத்தை கணவரிடம் சொன்னார். அவரும் தேன்மொழியைப் புரிந்துகொண்டு ஊக்குவித்தார். அதுதான் தேன்மொழியின் வெற்றிக்கு ஆரம்பப் புள்ளி.

கைசேர்ந்த கனவு

2005-ம் ஆண்டு மதுரையில் மத்திய அரசு நடத்திய ‘வீட்டில் இருந்தே ஏற்றுமதியாளர்’ (எக்ஸ்போர்ட் ஃப்ரம் ஹோம்) கருத்தரங்கில் தேன்மொழி பங்கேற்றார். அந்தக் கருத்தரங்கில் பங்கேற்ற தாக்கத்தால், ஒரு ஏற்றுமதியாள ராகச் சாதிக்க வேண்டும் என்று முடிவுசெய்தார்.

“ஒருகாலத்தில் ஆடைத் தொழிலுக்குப் பெயர் போன செல்லூரில் பிறந்து வளர்ந்தால் இந்தத் தொழிலைத் துணிச்சலுடன் தேர்ந்தெடுத்தேன். கம்ப்யூட்டர் பயிற்சி பெற்றேன். எப்போதும் வீட்டு உபயோகப் பொருட்களின் தேவை இருக்கும் என்பதால் அதன் அடிப்படையிலேயே என் தேர்வு இருந்தது. வீட்டு வாசல், வரவேற்பு அறைகளில் பயன்படும் தரை விரிப்புக்கான ஆர்டர் கிடைத்தது” என்று சொல்லும் தேன்மொழி இதற்கான போதிய பயிற்சி இல்லாததால், ஈரோடு சென்று தயாரிப்பு முறையைக் கற்றுக்கொண்டேன்.

“முதலில் 30 ஆயிரம் ரூபாய்க்கு பிரான்ஸ் நாட்டில் இருந்து ஆர்டர் கிடைத்தது. நான் அனுப்பிய வண்ணத் தரைவிரிப்புகள் திருப்தியாக இருந்ததால், அடுத்து 5 லட்சம் ரூபாய்க்கான ஆர்டர் வந்தது. தொழில் மீது நம்பிக்கை பிறந்தது. தொழிலில் தீவிரம் காட்டினேன். வெளிநாடுகளுக்குச் சென்று தொழில், மார்க்கெட்டிங் நுணுக்கம் ஆகியவற்றைக் கற்றுக்கொண்டேன்” என்று சொல்லும் தேன்மொழி, படிப்படியாகத் தன் திறமைகளை மேம்படுத்திக் கொண்டார்.

வெளிநாடுகளில் சமையல், குளியல் அறைகள், மேஜைகளுக்குத் துண்டுகள் அதிகம் பயன்படுத்துவார்கள் என்பதால் அவற்றைப் பல டிசைன்களில் தயாரிக்க தேன்மொழி திட்டமிட்டார். சில மாதிரிகளை ஆன்லைன் மூலம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுப்ப, ஆர்டர் குவிந்தது. “அமெரிக்கா, துபாய், ஜெர்மனி, கனடா போன்ற நாடுகளில் எங்க தயாரிப்புக்கு நல்ல வரவேற்பு இருக்கு” என்று புன்னகைக்கிறார் தேன்மொழி.

உயர்வு தரும் புதிய முயற்சிகள்

ஒவ்வோர் ஆண்டும் புதுப் புது யோசனைகளைப் புகுத்திவருகிறார். இதனால் தேன்மொழியின் நிறுவனத்தில் தயாராகிற துண்டுகளுக்கும் விரிப்புகளுக்கும் எப்பொழுதும் வரவேற்பு இருந்துகொண்டே இருக்கிறது. கைக்குட்டைகள், துண்டுகள், மேஜை விரிப்புகள், கையுறைகள் என்று கிட்டத்தட்ட 50 வகையான பொருட்களை ஏற்றுமதி செய்கிறார். புகழ்பெற்ற நினைவுச் சின்னங்கள், இயற்கைப் பிரதேசங்கள், விலங்குகள், பறவைகள், ஓவியங்கள் போன்றவற்றைக் கைக்குட்டைகளிலும் துண்டுகளிலும் அச்சிட்டு அனுப்புகிறார்.

கனவு காணுங்கள்

“எந்தத் தொழிலிலும் மூன்று ஆண்டுகளைக் கஷ்டப்பட்டுக் கடந்துவிட்டால், பிறகு அந்தத் தொழில் நம்மை விடாது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் அதிகக் கொள்முதல் இருக்கும். 50 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரைக்குமான பொருட்களை ஏற்றுமதி செய்கிறோம். மாதம் ஒரு கோடி ரூபாய் என்ற அளவில் ஆண்டுக்கு 10 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்கிறோம். ஒவ்வொரு பெண்ணும் சொந்தக் காலில் நிற்க வேண்டும். வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்றால் கனவு காண வேண்டும். நான் கண்ட கனவால்தான் இன்று பலருக்கும் வேலை வாய்ப்புகளை அளித்திருக்கிறேன். அதிகம் படிக்காத என்னை, படித்தவர்கள் எல்லோரும் பாராட்டும் நிலையை அடைந்திருக்கிறேன். என் உழைப்புக்கு இதைவிட வேறு என்ன பரிசு வேண்டும்?” என்று களிப்போடு கேட்கும் தேன்மொழி, தொழில்முனைவோருக்கான பல விருகளைப் பெற்றிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x