Published : 10 Jul 2016 04:04 PM
Last Updated : 10 Jul 2016 04:04 PM
பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளையும் கொலை வெறித் தாக்குதல்களையும்விட அச்சுறுத்துவதாக இருக்கின்றன அவர்களின் மரணத்துக்குப் பின்னால் விவாதிக்கப்படும் விஷயங்கள். பலர் பார்க்கவோ அல்லது யாருக்கும் தெரியாமலோ ஒரு பெண் கொலை செய்யப்படுகிறாள் என்றால் அந்தக் கொலைக்கான காரணம் காதல், குடும்ப உறவுகளில் சிக்கல், திருமணம் தாண்டிய உறவு இவற்றில் ஏதாவது ஒன்றாகத்தான் இருக்கும் அல்லது இருக்க வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் அவதானிப்பாகவும் விருப்பமாகவும் இருக்கிறது. உண்மையில் இவற்றில் எந்தக் காரணமும் இல்லையென்றாலும் ஏதோ ஒன்று அதில் மறைக்கப்படுவதாகத்தான் பலரும் நினைக்கிறார்கள்.
ஆணின் கொலையை, தொழில் பகை, பணத் தகராறு, தனிப்பட்ட விரோதம் என்ற காரணங்களோடு பொருத்திப் பார்க்கும் சமூகத்தின் பொதுப் புத்தி, ஒரு பெண்ணின் கொலையையும் ஒரு குற்ற நிகழ்வாக, சமூக அமைதிக்கு ஏற்பட்ட பங்கமாக, மலிந்திருக்கும் சமூகக் கொடுமைகளின் வெளிப்பாடாக ஏன் பார்க்க மறுக்கிறது? பெண்களின் கொலைகளை மட்டும் ஏன் எப்போதும் உறவு சார்ந்த சிக்கலின் ஒரு அங்கமாக மட்டுமே பார்க்கத் தோன்றுகிறது? ஏன் அந்தப் பெண்ணின் ஒழுக்கம் விவாதப் பொருளாகிறது?
காலங்காலமாக நம் சமூகத்தில் ஊறிக் கிடக்கும் பெண்ணடிமைத்தனம் நம் மக்களை வேறெப்படியும் சிந்திக்க விடுவதில்லை. கொலைக்கான காரணமாக அந்தப் பெண்ணின் ‘ஒழுக்கம்’ சுட்டிக்காட்டப்படுகிறது என்றால் என்ன அர்த்தம்? ‘எவ்வளவு ஒழுக்கமான பெண். அவளை இப்படிக் கொன்றுவிட்டார்களே’ என்று சொன்னால் அதற்கு என்ன பொருள்? ‘ஒழுக்கம்’ இல்லாத பெண் என்றால் அவளைக் கொன்றுவிடலாமா? அல்லது ‘அந்தப் பொண்ணுக்கு கேரக்டர் சரியில்லயாமே’ என்றால் என்ன அர்த்தம்? உறவு சார்ந்த விஷயங்களில் சமூகம் வகுத்துவைத்திருக்கும் கற்பிதங்களை ஒரு பெண் கடைப்பிடிக்கவில்லை என்றால் அவள் கொலைசெய்யப்படுவது குறித்த அனுதாபம் குறைந்துவிடுவது எதன் வெளிப்பாடு?
புறம் பேசும் பொதுப் புத்தி
ஒரு பெண் கொலைசெய்யப்பட்டது குறித்தோ, குற்றச் செயலில் ஈடுபட்டவர் தண்டனை பெறுவது குறித்தோ பலருக்கும் ஆர்வம் இருப்பதில்லை. கொலைக்கான பின்னணியில் பொதிந்திருக்கும் சுவாரசியங்களில் ஆழ்ந்துபோகவே பலரும் விரும்புகிறார்கள். அது தகாத ஒரு உறவாலோ அல்லது உறவு சார்ந்த சிக்கலாலோ விளைந்தது என்றால், அவர்களது கற்பனைத் திறன் திசைகளைக் கடந்து விரியும். கொலை செய்யப்படும் பெண்களிலும் வர்க்க வேறுபாடு பார்ப்பது இன்னொரு நோய்க் கூறு. குரல் கொடுப்பவர்களில் பலரும் கொல்லப்பட்டவரின் சாதி, மதம், இனம் ஆகியவற்றைப் பார்த்துக் குரல் கொடுக்கிறார்கள்.
எப்படிச் செத்தால் நீதி கிடைக்கும்?
இந்தச் சமூகம் நீதி கேட்டுக் குரல் கொடுக்க வேண்டுமென்றால் ஒரு பெண் மூன்றாம் நபருக்குத் தெரியாமல் மரணித்திருக்கக் கூடாது. பட்டப் பகலிலோ, பொது இடத்திலோ கொலைசெய்யப்பட வேண்டும். குறைந்தபட்சம் பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்டு அவளுடைய உடல் சிதைக்கப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் நம் சமூகத்திலிருந்து நீதி கேட்டுக் குரல்கள் ஓங்கி ஒலிக்கும். சமூக வலைதளங்களிலும் காட்சி ஊடகங்களிலும் விவாதம் அனல் பறக்கும். சுவாதி கொலை வழக்கில் நீதி கேட்டு குரல் உயர்த்தியவர்களில் பலரும் சென்னை ராயப்பேட்டையில் கொலை செய்யப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பெண்களைப் பற்றிக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. அவர்களில் மூன்று பேர் இளம் பெண்கள். குற்றவாளி கைது செய்யப்பட்டுவிட்டார் என்பதால் யாரும் எதுவும் பேசவில்லை என்பதெல்லாம் சப்பைக்கட்டு. முதலில் நான்கு பேரும் பொது இடத்தில் வைத்துக் கொலைசெய்யப்படவில்லை. தவிர கொலைக்குக் காரணமாகச் சொல்லப்படுவது அந்த வீட்டுப் பெண்ணின் தகாத உறவு. இதில் இதற்கு மேல் விவாதிக்க என்ன இருக்கிறது என்ற மனப்போக்கு நியாயமானதா? அதேபோல் வழிப்பறி சம்பவத்தின் போது கொலை செய்யப்பட்ட நந்தினிக்கு நீதி கேட்கும் குரல்கள் வலுத்து எழுந்தனவா?
பெண்களைச் சுற்றியே நீளும் அவதூறு
சுவாதி கொலையில் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கப்போவதில்லை. ஆனால், குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரையும் நாம் ஒரே தராசில்தான் வைக்கிறோமா? சமூகத்தின் அடித்தட்டில் இருக்கிறவர் என்றால் அவரது பரம்பரைவரை தோண்டித் துருவி, காட்சிப் பொருளாக்குவது எதன் வெளிப்பாடு? சுவாதி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர் ராம்குமார். ‘என் அண்ணன் இந்தக் கொலையைச் செய்திருக்க மாட்டார்’ என்று சொன்னதாலேயே, அவருடைய தங்கையை மிகக் கீழ்த்தரமாக விமர்சிக்க வேண்டிய அவசியம் என்ன? பெண்களும் தரம்தாழ்ந்த வார்த்தைகளால் அந்தப் பெண்ணைச் சாடுவது நாம் நாகரிக சமூகத்தில்தான் வாழ்கிறோமா என்ற கேள்வியை எழுப்புகிறது.
குற்றம் சாட்டப்பட்டவர் ஆண் என்பதால் அவரைக் கொலை செய்ய வேண்டும் என்று கொதித்ததுடன் மட்டும் நிறுத்திக்கொண்ட பலரும் அவருடைய தங்கையை அவரது தோற்றத்தை வைத்தும் நடத்தையைக் கேள்விக்குள்ளாக்கியும் வலைதளங்களில் பதிவிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. அச்சிலேற்றவே முடியாத அருவருப்பான வார்த்தைகளால் அந்தப் பெண்ணைக் கூறுபோட்டவர்களை நோக்கி எந்த நடவடிக்கையும் பாயாதா? ஒரு பெண்ணின் கொலைக்கு இன்னொரு பெண்ணின் நடத்தையைக் கொலை செய்வதுதான் தீர்வா?
தவறு செய்கிறவர்களைத் தட்டிக் கேட்கவும் தண்டிக்கவும் காவல் துறையும் நீதிமன்றமும் இருக்க, நாட்டில் நிறைந்திருக்கிற கலாச்சார காவலர்கள் ஏன் எப்போதும் ஒரு பெண்ணின் உடலை, நடத்தையை, உறவு முறைகளைக் கண்காணித்தபடியும் விமர்சித்தபடியும் இருக்கிறார்கள்? ராம்குமாரின் தங்கையையும் அம்மாவையும் ஓடி ஓடிப் படம்பிடித்து, அதைச் சுடச்சுட அச்சிலேற்றி அவர்களைத் தரக்குறைவாகப் பேசுவதன் மூலம் சுவாதி கொலைக்கான நியாயம் கிடைத்துவிடுமா? இதுவே குற்றம்சாட்டப்பட்டவர் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவராக இருந்து பெரும் பொருளாதாரப் பின்னணியுடன் இருந்தால், இப்படியான அநாரிகச் செயல்களில் ஈடுபட யாருக்காவது துணிச்சல் வருமா?
கொலையிலோ, குற்றச் செயலிலோ ஓர் ஆண் சம்பந்தப்பட்டிருந்தால் அவர் செய்த குற்றத்தை மட்டுமே பார்க்கிற ஒவ்வொருவரும், அதே சம்பவங்களில் ஒரு பெண்ணுக்குத் தொடர்பிருந்தால் அந்தப் பெண்ணைக் குற்றவாளியாக மட்டுமே பார்ப்பதில்லை. அவளது வயது, தோற்றம், நிறம், குடும்பப் பின்னணி, நடத்தை என்று அனைத்துமே கேள்விக்குள்ளாக்கப் படுகின்றன. அவளுடைய எதிர்காலம் சிதைத்தொழிக்கப்படும். சாலையில் நடந்து சென்றவரை கார் ஏற்றிக் கொன்ற சென்னைப் பெண்ணை சமூக வலைதளப் போராளிகள் பலரும் தகாத வார்த்தைகளால் வசைபாடியது சமீபத்திய உதாரணம்.
சமூகம் மீதான நம்பிக்கையைச் சிதைக்கும் இப்படியான பக்குவமற்ற செயல்பாடுகள் சில உண்மைகளை உணர்த்துகின்றன: பெண்ணின் கொலையைவிடவும் அவளது ‘ஒழுக்கம்’ அதிகமாக விவாதிக்கப்படுகிறது. குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய ஆணைவிட அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மோசமாக விமர்சிக்கப்படுகிறார்கள். குற்றவாளி பெண் என்றால் இன்னும் வசதி. யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அவற்றைப் படித்துத் தங்கள் மன வக்கிரங்களுக்கு வடிகால் அமைத்துக்கொள்ளும் யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள்.
ஒழுக்கம் சார்ந்து மீண்டும் மீண்டும் எழுப்பப்படும் கேள்விகளால், இறந்த பிறகும் அந்தப் பெண்கள் பலமுறை கொல்லப்படுகிறார்கள். இந்தக் கொலைகளுக்கு என்ன தண்டனை?
தவறு செய்கிறவர்களைத் தட்டிக் கேட்கவும் தண்டிக்கவும் காவல்துறையும் நீதிமன்றமும் இருக்க, நாட்டில் நிறைந்திருக்கிற கலாச்சாரக் காவலர்கள் ஏன் எப்போதும் ஒரு பெண்ணின் உடலை, நடத்தையை, உறவு முறைகளைக் கண்காணித்தபடியும் விமர்சித்தபடியும் இருக்கிறார்கள்?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT