Last Updated : 05 Mar, 2017 12:07 PM

 

Published : 05 Mar 2017 12:07 PM
Last Updated : 05 Mar 2017 12:07 PM

நடை உடை: பகட்டு உடைகள் வாடகைக்கு!

இன்றைய ஃபேஷன் மாறிவிட்டது. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் புதுப் புது வடிவமைப்பில் உடை, நகை என்று பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் ஒவ்வொரு விசேஷத்துக்கும் தங்க நகைகளையும் விலையுயர்ந்த உடைகளையும் எல்லோராலும் வாங்க முடியாது. அவர்களுக்காகவே ஃபேஷன் நகைகளையும் ஆடம்பர உடைகளையும் வாடகைக்கு விடும் தொழிலைச் செய்துவருகிறது லக்ஸ் பிக் நிறுவனம்.

கடை கடையாக ஏறி இறங்கி தனித்துவமான செயற்கை நகைகளையும் உடைகளையும் வாங்குபவர்கள், ஒன்றிரண்டு தடவைகளுக்கு மேல் அவற்றைப் பயன்படுத்த விரும்புவதில்லை. அந்த நகைகளுக்கும் உடைகளுக்கும் செலவு செய்த பணம் வீணாகிவிடும். பிறந்தநாள், கல்லூரி விழா, நிச்சயதார்த்தம், திருமணம், வளைகாப்பு, அலுவலக நிகழ்ச்சிகள் என அனைத்துக்கும் அணிந்துகொள்ளும் வகையிலான நவீன செயற்கை நகைகள், ஆடம்பர உடைகளை வாடகைக்கு எடுத்து அணிந்துகொண்டால் செலவும் மிச்சம், பணம் வீணாகும் என்ற கவலையும் இல்லை.

லக்ஸ் பிக் நிறுவனத்தின் இயக்குநர் மகேஷ், “எங்க வீட்டில் ஃபேஷன் நகைகளுக்கு அதிகம் செலவு செய்வாங்க. ரெண்டு, மூணு தடவைக்கு மேல் பயன்படுத்தமாட்டாங்க. பணமும் நஷ்டம், பொருளும் அலமாரிகளில் சும்மாவே கிடக்கும். அதைப் பார்த்துதான் ஃபேஷன் நகைகளையும் ஆடம்பர உடைகளையும் வாடகைக்கு விடும் எண்ணம் வந்தது. உடனே செயலில் இறங்கினோம். எங்க தொழிலுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துவருகிறது. நேரில் வர முடியாதவர்கள் ஆன்லைன் மூலம் பொருட்களை வாடகைக்கு எடுக்கும் வசதியும் உண்டு. வாடிக்கையாளர்களுக்கு உடனடியாகப் பொருட்களைச் சேர்த்துவிடுவோம். சென்னை, ஆந்திரா, தெலங்கானா, பெங்களூரு, கேரளா, புதுச்சேரியில் கடைகளை நடத்திவருகிறோம்”என்று சொல்கிறார்.

உடைக்குப் பொருத்தமான நகைகள்

உடைகளுக்குப் பொருத்தமான நிறங்களில் நகைகள் கிடைக்கின்றன. திருமண நிகழ்ச்சிகளுக்கு மட்டும் ஐம்பது வகையான நகைகளை வைத்திருக்கிறார்கள். உச்சி முதல் உள்ளங்கால்வரை நகைகளும் ஆடம்பரமான உடைகளும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இங்கே இருக்கின்றன. 45 ரூபாயில் இருந்து எண்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் வாடகைக்கு விடப்படுகின்றன. ஒரு நகையின் எம்.ஆர்.பி. விலையிலிருந்து பத்து சதவீதத்தை வாடகையாக வசூலிக்கிறார்கள்.

வாடிக்கையாளர்கள் கேட்கும் நாளுக்கு முதல் நாளே நகைகள் அவர்கள் கைகளுக்குப் போய் சேர்ந்துவிடும். அடுத்த மூன்று நாட்களுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். கெடு முடிந்தவுடன் லக்ஸ் பிக் நிறுவனத்துக்குத் தெரிவித்தால், ஊழியர்களே வாடிக்கையாளர்கள் இடத்துக்குச் சென்று, பொருட்களைப் பெற்றுக்கொள்கிறார்கள். வாடிக்கையாளர்களிடம் பெறப்பட்ட டெபாசிட் தொகை, பொருட்களைத் திருப்பிக் கொடுக்கும்போது அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. திருப்பிக் கொடுக்கும் நகைகளில் சேதாரம் இருந்தால், அதற்கான தொகையை டெபாசிட்டிலிருந்து கழித்துக் கொள்வார்கள்.

பெருகும் வாடிக்கையாளர்கள்

“இந்தத் தொழில் தொடங்கி குறிப்பிட்ட காலம் வரை நண்பர்கள், உறவினர்கள்தான் வாடிக்கையாளர்களாக இருந்தார்கள். அதனால் தொழிலில் புதிய உத்திகளைப் புகுத்தினோம். வாடகைக்குக் கொடுக்கும் உடையை நன்றாகத் துவைத்து, மறுபடியும் வாடகைக்குக் கொடுத்தால் ஏற்கெனவே வேறு ஒருவர் பயன்படுத்திய உடை என்ற எண்ணம் வாடிக்கையாளர்களிடம் இருந்ததை அறிந்துகொண்டோம்.

அதனால் ஒவ்வொரு துணியிலும் லைனிங் துணி சேர்த்தோம். வாடிக்கையாளர் பயன்படுத்திய பிறகு, லைனிங் துணியை மட்டும் அப்புறப்படுத்திவிட்டு வேறு லைனிங் துணியை வைத்து தைத்துவிடுவோம். இதனால் ஒரே துணியை எத்தனை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தினாலும் லைனிங் துணி மட்டும் மாறிக்கொண்டே யிருக்கும். இந்த முயற்சி எங்களுக்கு நல்ல பலனைத் தந்தது. தொழில் தொடங்கி இரண்டே ஆண்டுகளில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை பதினைந்தாயிரத்தைத் தாண்டியிருக்கிறது” என்று சொல்கிறார் மகேஷ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x