Published : 16 Apr 2017 01:15 PM
Last Updated : 16 Apr 2017 01:15 PM

களம் புதிது: தடையை மீறி எழும் பெண்களின் போராட்டம்!

பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மதுபானக் கடையை நிரந்தரமாக மூடக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களைக் காவல் துறையினர் தாக்கிய சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சமீபகாலங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம், பணமதிப்பு இழப்புக்கு எதிரான பள்ளிக்கரணை போராட்டம், தற்போது திருப்பூர் சாமளாபுரம் பகுதியில் நடந்துள்ள மதுக்கடையை மூடக் கோரி நடந்த போராட்டம் ஆகிய போராட்டங்களில் காவல் துறையினரின் அணுகுமுறை பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, போராட்டங்களில் கலந்துகொண்ட பெண்களிடம் காவல் துறையினர் நடந்துகொள்ளும் செயல் பல்வேறு தரப்பினரிடம் காவல் துறை மீதான நன்மதிப்பு இழக்கச் செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு நடத்தும் டாஸ்மாக் மதுபானக் கடைகளின் எண்ணிக்கை 5,672. இதில் 3,316 மதுபானக் கடைகள் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டி அமைக்கப்பட்டவை. குடியிருப்புப் பகுதிகளில், பள்ளி வளாகங்கள், வழிபாட்டு தளங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் மதுபானக் கடைகள் அமைக்கக் கூடாது எனச் சட்டம் உள்ளது. ஆனால் தமிழகத்தில் பெரும்பாலும் பொதுமக்கள் அதிகமாக இருக்கும் பேருந்து நிலையங்கள், பள்ளி மற்றும் கல்லூரி உள்ள இடங்களில்தான் டாஸ்மாக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் உச்ச நீதிமன்றம் நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது. இதனையடுத்து திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் மாநில நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டு இருந்த மதுபானக் கடை அகற்றப்பட்டு அருகில் இருந்த குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்தப் போராட்டத்தில் முதியவர்கள், பெண்கள், மாணவர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டார்கள்.

போராட்டம் நடந்துகொண்டிருந்த நிலையில் காவல் துறையினர் கூட்டத்தைக் கலைக்கத் தடியடி தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். அப்போது அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஈஸ்வரி என்ற பெண்ணைக் காவல் துறை உயர் அதிகாரி பாண்டியராஜ் கன்னத்தில் அறைந்துள்ளார். மேலும் பெண்களும் முதியவர்களும் தடியால் தாக்கப்பட்டுள்ளனர்.

“மதுபானக் கடையால் எங்கள் பகுதியில் நிறைய சாலை விபத்துகள் நடைபெறுகின்றன. இதனைத் தடுக்கவே மதுபானக் கடையை மூட வேண்டும் எனப் போராட்டம் நடத்தினோம். ஆனால் காவல் துறையினர் திடீரென்று எங்களைத் தாக்க ஆரம்பித்தார்கள்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட தறி நெய்யும் தொழிலாளியான ஈஸ்வரியை காவல் துறை அதிகாரி கன்னத்தில் அறைந்தார். அவருக்கு ஏற்கெனவே காதில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. காவல் துறை அதிகாரி அறைந்ததால் அவருக்குக் காது சரியாகக் கேட்கவில்லை” என்று போராட்டத்தில் ஈடுபட்ட தவமணி கூறினார்.

“போராட்டத்தில் ஈடுபடும் பெண்களைப் பெண் காவலர்கள்தான் கையாள வேண்டும் எனச் சட்டம் உள்ளது. அப்படியிருக்கும்போது எப்படி ஒரு ஆண் காவலர் பொதுவெளியில் ஒரு பெண்ணிடம் இப்படிக் கொடூரமாக நடந்து கொள்ள முடியும்? அவருடைய இந்தச் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. திருப்பூர் பகுதியில் பெண்களுக்கான காவல் நிலையம் உள்ள நிலையில் ஏன் பெண் காவலர்கள் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு அனுப்பப்படவில்லை என்ற பொதுவான கேள்வி எழுகிறது.

காவல் துறையில் பெண் காவலர்கள் அனுமதிக்கப்பட்டதே போராட்டம், கோயில் விழாக்கள் போன்றவற்றில் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் சமீப காலங்களில் நடைபெறும் போராட்டங்களில் காவல் துறையினர் பெண்களிடம் நடந்துகொள்ளும் விதம் ஏற்புடையதாக இல்லை” என்கிறார் முன்னாள் தமிழகக் காவல் துறை அதிகாரி திலகவதி ஐ.பி.எஸ்.

“ஒரு பெண்ணை விசாரிக்க வேண்டும் என்றால்கூட அவர்கள் இருக்கும் இடத்துக்குச் சென்றுதான் காவல் துறையினர் விசாரிக்க வேண்டும். அதேபோல் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படும் பெண்களை மாலை ஆறு மணிக்கு மேல் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளக் கூடாது என இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் காவல் துறை அதிகாரியின் இந்தக் கொடூரச் செயல் தமிழகக் காவல் துறை வரலாற்றில் ஒரு கறுப்பு நாள்” என்றும் அவர் கூறுகிறார்.

பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் வசந்தி, “கடந்த சில மாதங்களுக்கு முன்பு பண மதிப்பு இழப்புக்கு எதிராக எங்கள் அமைப்பு நடத்திய போராட்டத்தில் காவல் துறையினர் பெண்களிடம் மிகவும் அநாகரிகமாக நடந்துகொண்டனர். எங்களைக் கைது செய்து ஒரு மண்டபத்தில் வைத்திருந்த போது ஆண் காவலர்கள் எங்களிடம் மிக மோசமாக நடந்துகொண்டனர்.

அவர்களுடைய செல்போனில் எங்களைப் புகைப்படம் எடுப்பது போன்ற இழிவான செயலில் ஈடுபட்டது மட்டுமல்லாமல் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் கஷ்டப்படுத்தினார்கள். போராட்டத்தில் கலந்துகொள்ளும் எங்களைப் போன்ற பெண்கள் மீண்டும் வேறு எந்தப் போராட்டத் திலும் கலந்துகொள்ளக் கூடாது என்பதற்காகவே காவல் துறையினர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். பெண்களைப் பெண் காவல் துறையினர்தான் அணுக வேண்டும் என்ற போதும் நடைமுறையில் அவை செயல் படுத்தப்படுவதில்லை” என்கிறார்.

“அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் பொதுமக்கள் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தக் கூடாது எனச் சட்டமே உள்ளது. ஒருவேளை அசம்பாவிதச் சம்பவங்கள் நடைபெற்றால் அவர்களைக் கலைக்க முட்டிக்குக் கீழ்தான் அடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் எந்தவித ஆயுதமும் இல்லாமல் அமைதியான முறையில் மதுக்கடையை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களைக் காவல் துறையினர் தாக்கியிருப்பது சட்டத்தை மீறிய செயல். இதுபோன்ற செயல்கள் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டும்.

பல்வேறு போராட்டங்களில் காவல் துறையினர் நடந்துகொண்ட விதத்தை அரசு கண்டிக்காததன் விளைவாகத்தான் தற்போது ஒரு பெண்ணைப் பொதுவெளியில் உயர் பொறுப்பில் உள்ள ஒரு ஆண் காவலர் கன்னத்தில் அறைவது போன்ற கொடூரமான செயல் நடந்துள்ளது. இதுபோன்ற செயல்களைத் தடுக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. ஆனால் அரசு அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது பிரச்சனைகளை மேலும் வளர்க்கக்கூடும்”என்கிறார் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் தாரா அருள்.

சுதந்திரத்துக்கு முன்பே தொடங்கியது பெண்களின் போராட்டப் பங்களிப்பு. ஆனால் இன்றைய சூழ்நிலையில் பெண்கள் போராட்டக் களத்துக்கு வரக் கூடாது என்பதற்காகவே காவல் துறை அவர்களைத் தாக்குகிறது எனக் கருதும் வகையில் காவல் துறையின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. ஆனால் இதுபோன்ற தாக்குதல்களை எதிர்த்து மேலும் நூற்றுக்கணக்கான பெண்கள் போராட்டத்தில் தைரியமாக ஈடுபட வருவார்கள் என்பதுதான் போராட்டக் களத்தில் உள்ள பெண்களின் கருத்து.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x