Published : 04 Sep 2016 04:03 PM
Last Updated : 04 Sep 2016 04:03 PM
சென்னை, கரூர், தூத்துக்குடி, திருச்சி, புதுச்சேரி… ஊர்தோறும் பெண்கள் தொடர்ந்து சிதைக்கப்படுகிறார்கள். கல்லூரி, தேவாலயம், பேருந்து நிலையம், மக்கள் நிறைந்த சாலை எதுவும் கணக்கில்லை. ஒரு பெண் - கட்டையால் அடிக்கப்பட்டோ, கத்தியால் கூறுபோடப்பட்டோ, கைகள் முறிக்கப்பட்டோ குற்றுயிரும் குலையுயிருமாகவோ சிதைக்கப்படலாம். ஒருவனுடைய தொலைபேசி அழைப்பைப் புறக்கணித்ததும் காதலை நிராகரித்ததும் அதற்குக் காரணங்களாகச் சொல்லப்படலாம். “இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான். பாதியில கழட்டி விட்டுட்டுப் போயிடுவாங்க” என்று ஊர்கூடி இந்தக் கொடூரங்களை நியாயப்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக்கவும் முயற்சிக்கலாம். ‘நடவடிக்கை எடுக்கிறோம்’என்று காவல்துறை சொல்ல, ஆர்ப்பாட்டக்காரர்கள் கொதிப்பு அடங்கி, பெண்களுக்கு நீதி கிடைத்துவிடும் என்று காத்திருக்கலாம். விவாதங்கள் அனைத்தும் தணிந்துபோகும் நாளில் ஒரு பெண்ணோ, பல பெண்களோ காதலின் பெயரால் வெட்டிச் சாய்க்கப்பட்டு, மீண்டும் தலைப்புச் செய்தியாகலாம். இப்படிப்பட்ட அவலச் சூழலில்தான் ஒரு பெண் இங்கே பிழைத்திருக்க வேண்டியிருக்கிறது.
எதையுமே சாதிக்காத கல்வி
சமீப காலமாக நம்மைச் சுற்றி நடக்கும் பெண்கள் மீதான இதுபோன்ற வன்முறைகளில் பெரும்பாலானவை காதலை மையமாகக் கொண்டு நடப்பதாகச் சொல்லப்படுகின்றன. உண்மைக் காதலுக்கு உயிரைக் கொல்லும் வன்சக்தி இல்லை. பிரிந்த பிறகும் தொடரும் பிரியம்தானே காதல். ஆனால், காதலைப் பற்றிய எந்தப் புரிதலும் அற்று பெண்கள் மீது நிகழ்த்தப்படும் இந்த வன்முறைகளுக்கு என்ன காரணம்? ஒரு பெண் தன்னை நிராகரித்ததுமே கத்தியால் குத்த வேண்டும் என்ற வெறி ஏன் ஓர் ஆணுக்கு ஏற்படுகிறது? இதுபோன்ற கொடூரமான குற்றங்களில் ஈடுபடுகிறவர்களில் பெரும்பாலோர் படித்துப் பட்டம் பெற்றவர்களாக இருப்பதை எப்படிப் புரிந்துகொள்வது? மனதைப் பக்குவப்படுத்தி, சிந்திக்கும் ஆற்றலை மேம்படுத்தாத கல்வி முறை, புதிதாக வேறென்ன திறமைகளை மாணவர்களுக்குக் கற்றுத்தரப் போகிறது? மதிப்பெண்ணைப் பெற்றுத்தருவதைத் தாண்டி, வாழ்வுக்கான மாண்புகளையும் பயிற்றுவிப்பதுதானே சிறந்த கல்வி? புதிய கல்விக் கொள்கையில் அது இல்லை, இது இருக்கிறது என்று வாதிடுகிறவர்கள், மாணவர்களை மாண்புள்ளவர்களாக மாற்றும் வல்லமை அந்தக் கல்விக் கொள்கைக்கு இருக்கிறதா என்பதையும் தங்கள் பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை மேற்கண்ட நிகழ்வுகள் உணர்த்துகின்றன.
சட்டம் சாதிக்குமா?
பெண்கள் மீதான வன்முறைகளைக் கட்டுப்படுத்த சட்டங்களை மேம்படுத்த வேண்டும், தண்டனைகளைக் கடுமையாக்க வேண்டும் என்று சொல்கிறவர்களும் உண்டு. அதிகபட்ச தண்டனை கிடைக்கும் என்ற பயம் தவறுகளை முற்றிலும் தடுக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை. ஒரு பெண்ணைக் கொன்றுவிட்டு தன்னையும் மாய்த்துக்கொள்ளும் எண்ணத்துடன் கத்தி எடுக்கிறவர்களைச் சட்டத்தால் என்ன செய்ய முடியும்?
பெற்றோர்கள், ஆசிரியர்களா?
இன்றைய இளைஞர்கள் சரியான புரிதலுடன் இல்லை, அதனால்தான் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுகிறது என்ற பொதுவான கருத்தும் நிலவுகிறது. இளைஞர்களின் பெற்றோருக்குத் தங்கள் மகன்கள் குறித்தோ, அவர்களின் வளர்ப்பு குறித்தோ சரியான புரிதல் இருக்கிறதா? பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பந்தயக் குதிரைகளைப் போலவே வளர்க்கிறார்கள். எதிலும் ஜெயித்துவிட வேண்டும், அவர்களுக்குக் கிடைக்காதது எதுவுமே இருக்கக் கூடாது என்ற நோக்கிலேயே பிள்ளைகளை வளர்க்கிறார்கள். கடன் வாங்கியாவது பிள்ளைகளின் அதீத ஆவலைப் பூர்த்திசெய்துவிடுகிறார்கள். எந்தக் கட்டத்திலும் தோல்விகளை, ஏமாற்றங்களை, நிராகரிப்புகளை ஏற்றுக்கொள்ளத் தங்கள் பிள்ளைகளை அவர்கள் பழக்குவதே இல்லை. அவசியம் எது, அநாவசியம் எது என்ற வேறுபாடே தெரியாமல் பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர், பின்னாளில் தங்கள் பிள்ளை தறுதலையாக மாறுவதை நினைத்துப் புலம்பி என்ன பயன்?
பாலினப் பாகுபாடு
பெண்கள் மீதான வன்முறையின் அடிப்படைக் காரணி, சிறிதளவுகூட மாறாத ஆணாதிக்க மனோபாவம்தான். பெண் என்றால் எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்து, கிடைக்காததை நினைத்து உள்ளுக்குள் புழுங்கி தியாகியாக வாழ வேண்டும் என்றே காலங்காலமாக நிர்பந்திக்கப்படுகிறது. ஆனால், ஆணோ யாருக்கும் அடங்காத காளையாகத் திரியலாம். உடன்பிறந்த சகோதரிகளை அடக்கிவைக்கும் சிறுவனே, இளைஞனாகிறபோது காதலை மறுக்கும் பெண்ணை வக்கிரத்தோடு பழிவாங்குகிறான். பிறப்பு முதலே அவனுக்குக் குடும்பமும் சமூகமும் திரும்பத் திரும்ப வலியுறுத்துவது, அவன் ஆண் என்பதை மட்டுமல்லாமல், ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதையும்தான். ஆண் எதற்கும் அடங்கக் கூடாது; அழுவதும் தோற்பதும் பெண்களின் குணம் என்றே அவனுக்குப் போதிக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் சாதாரணப் புறக்கணிப்பைக்கூட ஏற்றுக்கொள்ள முடியாமல் வெறியாட்டம் போடுகிறது ஆண் என்கிற அகந்தை.
இந்த வகையில் பெருகிவரும் தொழில்நுட்பமும், சமூக வலைத்தளங்களும் இளைஞர்கள் மனதில் பெரும் சேதாரத்தை ஏற்படுத்துகின்றன. உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கிற வக்கிரம்கூட உடனுக்குடன் கையடக்கக் கருவியில் காணக் கிடைத்துவிடுகிறது. அடுத்தவர் அந்தரங்கம், வன்மம், பழிவாங்கல் என்று பாகுபாடே இல்லாமல் அனைத்தும், அடக்கி வைக்கப்பட்டிருக்கும் வக்கிர எண்ணங்களுக்கு தூபம் போடுகின்றன.
நுணுக்கமாகச் செயல்படும் ஆணாதிக்கம்
இந்தச் சமூகத்தைப் பொறுத்தவரை பெண் என்பவள் ஓர் உயிரோ, உணர்வுகள் நிறைந்த சக மனுஷியோ இல்லை. அவளுக்கென்று எந்தத் தேர்வும் இருக்கக் கூடாது என்பதை மிக நுட்பமாகக் கட்டமைத்து வைத்திருக்கிறது இந்த ஆண் மைய சமூகம். பெண்ணின் நடத்தையை ஒழுக்கத்தோடும், பண்பாடு கலாசாரத்துடனும் பிணைத்துவிட்டதன் மூலமாகத் தன் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருக்க நினைக்கிறது ஆணாதிக்கச் சமூகம். ஒரு பெண், தனித்து முடிவெடுத்துத் தன் முடிவுகளைச் செயல்படுத்துகிறபோது நிராகரிக்கப்பட்ட ஆண் மனதால் அதைத் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. ‘தன்னை ஏமாற்றிவிட்டாள், தன்னைச் சுரண்டிவிட்டாள்’ என்று ஓர் ஆண் சொல்வதன் மூலமாகப் பெண்ணின் தேர்வு செய்யும் உரிமை இங்கே கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.
எந்தத் தகுதியும் இல்லாமல் பொறுப்பற்றுத் திரியும் ஆண்களைக் கதாநாயகர்களாகச் சித்தரிக்கும் திரைப்படங்களும் ஓர் ஆணின் ஆளுமையை வடிவமைப்பதைத் தீர்மானிக்கின்றன. பாடல் வரிகள், வசனங்கள் என்று அனைத்திலும் பெண்களைக் கொச்சைப்படுத்துவதன் மூலமாகப் பெண்களை வெறும் சதைப் பிண்டங்களாக மட்டுமே அவை பிரகடனப்படுத்துகின்றன.
ஆண் பெண் இரு பாலினரும் சீரழிந்துபோவதற்கான அத்தனைச் சாத்தியங்களையும் உள்ளடக்கிக் காத்திருக்கிறது இந்தச் சமூகம். அவர்களை அதிலிருந்து மீட்டு, நல்வழிக்குச் செல்ல வழிகாட்டுவதுதான் இப்போது நம்முன் இருக்கும் மிகப் பெரிய சவால். முதலில் வீட்டிலிருந்து தொடங்குவோம் மாற்றத்தை. நம் வீட்டு ஆண் குழந்தைகளுக்குப் பெண்களிடம் சமத்துவத்தைப் பின்பற்றக் கற்றுக்கொடுப்போம்; தோல்வியை சகஜமாக ஏற்றுக்கொள்ளச் சொல்லிக்கொடுப்போம். இதுபோன்ற அடிப்படையான விஷயங்களில் மாற்றம் ஏற்பட்டால் அதன் ஒளியில் சமூக மாற்றமும் மெல்ல சாத்தியப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT