Last Updated : 18 Sep, 2016 11:45 AM

 

Published : 18 Sep 2016 11:45 AM
Last Updated : 18 Sep 2016 11:45 AM

முகங்கள்: இசையும் தொழிலும் இரு கண்கள்

ர்னாடக சங்கீதம் மொழிகளைக் கடந்து மனம் லயிக்கச் செய்யும் கலை - கர்னாடக சங்கீதத்தில் தேர்ச்சி பெற்று மேடைகளில் இசை மழை பொழிபவர் பன்முகத் திறன் கொண்ட ‘அப்போலோ’ ஜெயஸ்ரீ. இவரிடமிருந்து புறப்படும் இசை, சலசலத்து ஓடும் நீரோடை போல, மென்மையாக இருக்கிறது.

முன்னணி மருத்துவமனைக் குழுமங்களில் ஒன்றான அப்போலோ மருத்துவமனைக் குழுமத்தில் இணைப் பொது மேலாளராகப் பணிபுரிகிறார். சவாலான வேலை, கடுமையான சாதகம் தேவைப்படும் மேடைக் கச்சேரி, குடும்பம், ஆரோக்கியம், தொட்டுத் தொடரும் பந்தமாக இசை. எப்படிச் சமாளிக்கிறார் ஜெயஸ்ரீ? அவரிடமே கேட்போம்.

இசை கற்க வேண்டும் என்று தோன்றியது எப்போது?

அப்பா, அம்மா ஆகியோர் ஊக்கம் அளித் தார்கள். அதனால் விவரம் தெரிவதற்கு முன்பே இயல்பாக இசை கற்றேன். இது விளையாட்டுப்போல் அமைந்தது. ஏனெனில், நாங்கள் விளையாடி மகிழ்ந்ததே சங்கீத கலாநிதி டி.கே. பட்டம்மாள் வீட்டில்தான். என் அக்கா மாலதி, டி.கே. பட்டம்மாளின் நேரடி சிஷ்யை. டி.கே.பி.யின் மற்றொரு சிஷ்யையான அவரது மருமகள் லலிதா சிவகுமாரின் சிஷ்யை நான். பாடாந்தரம் ஓரே மாதிரி இருந்ததால் நானும் எனது அக்காவும் இணைந்து மேடைக் கச்சேரிகள் செய்துவந்தோம். அந்தக் கால கட்டத்தில் நித்யஸ்ரீ மகாதேவனின் பல கச்சேரிகளுக்கு நான் தம்பூரா சுருதி போட்டதும் உண்டு.

பல ஆண்டுகள் இரட்டையர்களாகக் கச்சேரிகள் செய்திருந்தாலும், குடும்பம், பணி காரணமாகத் தொடர்ந்து சாதகம் செய்ய முடியவில்லை. பின்னர் மேடைக் கச்சேரிகளும் செய்ய முடியவில்லை. இந்த நேரத்தில்தான் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அப்போலோ மருத்துவமனைக்கு நிகழ்ச்சி ஒன்றுக்காக வந்திருந்தார். இறை வணக்கமாக பஜன் ஒன்றை நான் பாட, அது பெரிதும் பாராட்டப்பட்டது.

அப்போதுதான் நான் பாடுவேன் என்பதை அறிந்த, இசைக்கு முக்கியத்துவம் அளிக்கும் எனது நிறுவனம், நான் மேடையில் பாடுவதைத் தொடர வேண்டும் என்று விரும்பியது.

மீண்டும் மேடைக் கச்சேரி எங்கு தொடங்கி யது? அவையும் இரட்டையர் கச்சேரிகளா?

தனிக் கச்சேரி. பாடுவதைக் கைவிட்டுப் பல ஆண்டுகளுக்குப் பின், தமிழில் மட்டுமே தனியாகப் பாட அழைத்திருந்தது டெல்லி தமிழ்ச் சங்கம். எனது சிறு வயதுத் தோழியும் இன்று பிரபலமாக இருப்பவருமான ஒருவர் உட்படப் பலரும் பயமுறுத்த, தமிழ் வாக்கேயக்காரர்களான முத்துத் தாண்டவர், பாபநாசம் சிவன், தூரன், கோபாலகிருஷ்ண பாரதி, பாரதியார், அம்புஜம் கிருஷ்ணா, ஸ்பென்ஸர் வேணுகோபால் ஆகியோரின் பாடல்களைத் துணையாகக் கொண்டு மேடை ஏறினேன். அது எனது இரண்டாவது இன்னிங்ஸ். அதற்குப் பிறகு பாடுவதை மீண்டும் சில வருடங்கள் கைவிடும் நிலை. மூன்றாவது இன்னிங்ஸ் தொடங்கியது நான் சொன்ன ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் நிகழ்ச்சிக்குப் பிறகுதான்.

முழு நேரப் பணியில் இருக்கும் உங்களுக்கு சாதகம் செய்ய நேரம் கிடைக்கிறதா?

சாதகம் செய்ய மட்டுமல்ல, பாடுவதற்கான சூழ்நிலையும் வேண்டும். டிசம்பர் மாதம் முழுவதும் நான் குறைவாகப் பேச வேண்டும் என்பதற்காகவே, எனது பாஸ் ப்ரீத்தா ரெட்டி பெரும்பாலும் எஸ்.எம்.எஸ்., வாட்ஸ்ஆப் மூலமே அலுவலக வேலைகள் குறித்துக் கேட்டு அறிந்துகொள்வார். இது மிகப் பெரிய ஊக்கத்தை அளித்தது. என் கச்சேரிகளுக்கு அவர் இவ்வளவு முக்கியத்தும் கொடுக்கும்போது, நான் இன்னும் கவனமாக இருக்க வேண்டுமே. இரவு பனிரெண்டு, ஒரு மணிக்கெல்லாம்கூட சாதகம் செய்திருக்கிறேன். கச்சேரி நாட்களில் லீவு எடுத்தது இல்லை. காலை கச்சேரி என்றால் முடித்துவிட்டு நேராக ஆபீஸ்தான். மாலைக் கச்சேரி என்றால் ஆபீஸிலிருந்து நேராக மேடைதான். மேடையில் ஏறும்போதுகூட ஆபீஸ் போன் கால்ஸ் வரும். அதற்குப் பதில் அளித்துக்கொண்டே மைக் முன் அமர்ந்ததும் உண்டு.

இந்த ஆண்டு டிசம்பர் சீஸனில் எத்தனை கச்சேரிகள்?

ஆண்டு முழுவதும் பல கச்சேரிகள் செய்திருந்தாலும் டிசம்பர் கச்சேரிகள், ஒவ்வொரு பாடகருக்கும் முக்கியமானவை. இந்த டிசம்பருக்குப் பதிமூன்று கச்சேரிகள். ஒவ்வொரு கச்சேரியையும் தனித்தன்மையுடன் அமைக்கிறேன். ஒரு கச்சேரியில் பாடப்பட்ட பாடல் அடுத்த கச்சேரியில் இருக்காது. இது சமையல் செய்வது மாதிரிதான். வீட்டில் இருப்பவர்களுக்கு என்ன பிடிக்கும் என்று யோசிப்பது போல, இசை ரசிகர்களுக்கு என்ன பிடிக்கும் என்று தேர்ந்தெடுத்துப் பாட வேண்டியதுதான்.

உங்கள் சாதனையாக எதைக் கருதுகிறீர்கள்?

சாதனை என்பதை விட, பாக்கியமாக நினைப்பது 51 சக்தி பீடங்கள் குறித்த பாடல்கள் கொண்ட கச்சேரிதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x