Published : 18 Sep 2016 12:07 PM
Last Updated : 18 Sep 2016 12:07 PM
எல்லாத் துறைகளிலும் ஆண்கள் ஆதிக்கம் காணப்படுவதைப் போல கவிதைகளிலும் ஆண்களின் ஆதிக்கம்தான் அதிகம். கல்வியறிவு பெறுவது, திறமைகளை வெளிப்படுத்துவது போன்றவற்றைச் செய்ய விடாமல் பெண்களை எல்லாச் சமூகத்திலும் ஆண்கள் தடுத்தே வந்திருக்கிறார்கள். ஒவ்வொரு துறையிலும் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு இதுவே காரணம். ஆனாலும், கிடைக்கும் சிறு இடத்திலும் பெண்கள் தங்கள் திறமைகளை நிரூபித்தே வருகிறார்கள்.
பெண் கவிஞர்களின் தொடக்கத்தைப் பற்றி ஆராயப் போனால் அது மொழியில் கவிதை என்ற படைப்பு வகைமை தோன்றிய காலகட்டத்துக்கு நம்மை இட்டுச்செல்லும். தொன்மைக் காலத்தைவிட நவீன காலத்தில் பெண் கவிஞர்கள் அதிகம் வெளிப்படுவது ஒப்பீட்டளவில் நம் காலம் முன்னேறியிருக்கிறது என்பதன் அடையாளம். எனினும், பெண் கவிஞர்கள் மீது பரவலாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. பெண்களின் பிரச்சினைகள், பெண்ணியம் போன்றவற்றையே பெண் எழுத்துகள் அதிகம் பதிவுசெய்கின்றன என்பதே அந்தக் குற்றச்சாட்டு. ஆண்களைப் போல மிகவும் பரவலான விஷயங்களைப் பற்றிப் பெண்கள் எழுதுவதில்லை என்கிறார்கள். பெண்களும் எல்லா விஷயங்களைப் பற்றியும் எழுதுகிறார்கள் என்றாலும் அதிகம் தங்கள் பிரச்சினைகளைப் பற்றியே எழுதுகிறார்கள் என்பது உண்மைதான். அது சமூகத்தின் மீது வைக்கப்பட வேண்டிய குற்றச்சாட்டே தவிர, பெண்களின் மீது வைக்கப்பட வேண்டிய குற்றச்சாட்டு அல்ல. ஆணாதிக்கத்தின் கடைசிச் சுவடு மறையும்வரை பெண்கள் தங்கள் உரிமைகளுக்காகப் படைப்பில் குரல்கொடுத்துக்கொண்டுதான் இருப்பார்கள்.
கவிதையில் பெண் குரல்கள் எவ்வளவு பன்மைத்தன்மை வாய்ந்தவை என்பதை வெளிப்படுத்தும் வகையிலான தொடர் இது. இந்தத் தொடரின் முதல் அத்தியாயத்தில் நாம் பார்க்கப் போவது குறிப்பிட்ட ஒரு கவிஞரைப் பற்றியல்ல. பெண் கவிஞர்களின் தொகுப்பான ‘தேரிகாதை’ என்ற புத்தகத்தைப் பற்றி. தேரவாத புத்த மதப் பிரிவைச் சேர்ந்த முதிய பிக்குனிகளின் கவிதைகளின் தொகுப்புதான் ‘தேரிகாதை’. ‘தேரி’ என்றால் முதிய பெண்மணி என்றும் ‘காதை’ என்றால் பாடல்கள் என்றும் பாலி மொழியில் அர்த்தம். புத்தரின் காலத்தில் தொடங்கி கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரையிலான பிக்குனிகளின் கவிதைகளின் தொகுப்பு இது. இந்தியாவைப் பொறுத்தவரை மட்டுமல்ல, உலக அளவிலும் இதுதான் முதல் பெண் கவிதைகளின் தொகுப்பு என்று கூறுகிறார் இந்த நூலின் சமீபத்திய மொழிபெயர்ப்பாளரான சார்லஸ் ஹாலிஸே.
பணக்காரர், ஏழை, பாலியல் தொழிலாளி என்று சமூகத்தின் பல தரப்புகளிலிருந்து துறவறத்தைத் தழுவிய பெண்களின் குரல்கள்தான் ‘தேரிகாதை’. பவுத்த நெறியை வலியுறுத்துவதுடன் பெண்களின் சம உரிமைக்குமான குரல்களாகவும் இந்தக் கவிதைகள் அமைகின்றன. சமீபத்தில் ‘மூர்த்தி கிளாஸிக்கல் லைப்ரரி ஆஃப் இந்தியா’ சார்பில் சார்லஸ் ஹாலிஸேவால் தரமான மொழிபெயர்ப்பில் ‘தேரிகாதை’ ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கிறது. ‘தேரிகாதை’க்கு பழைய மொழிபெயர்ப்புகள் சிலவும் உண்டு. அ. மங்கையின் மொழிபெயர்ப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழிலும் ‘தேரிகாதை’ வெளியாகியிருக்கிறது.
‘மூர்த்தி கிளாஸிக்கல் லைப்ரரி ஆஃப் இந்தியா’ வெளியிட்ட ‘Therigatha: Poems of the First Buddhist Women’ என்ற நூலிலிருந்து இரண்டு கவிதைகளின் மொழிபெயர்ப்புகள் இங்கே இடம்பெற்றிருக்கின்றன.
உப்பசமா,
உன் பெயரின் பொருள் நிச்சலனம்.
மரணம் அரசோச்சும் அந்த ஊழிவெள்ளத்தைக்
கடந்தாக வேண்டும் நீ,
கடப்பது கடினமே என்றாலும்.
கவனம் கொள் உனதுடலின் மீது,
உனது கடைசி உடல் இது,
கவனம்! இதற்குப் பின்னும்
மரணத்தின் வாகனமாக
ஆகிவிடக் கூடாது இவ்வுடல்.
(புத்தர் சொன்னதை உப்பசமா என்ற பிக்குனி தனக்குத் தானே சொல்லிக்கொண்டது)
விடுதலையுற்றவனே, இன்னுயிரே
விடுதலையுற்றவனே, இன்னுயிரே,
எனக்கும் விடுதலை உலக்கையிலிருந்து,
வெட்கம்கெட்ட என் கணவனிடமிருந்து,
அவன் அமர்ந்து வேலை பார்த்த விதானத்திடமிருந்து,
தண்ணீர்ப் பாம்பு போன்று வாடைவீசும்
என் பானையிடமிருந்து,
எனக்கு அருவருப்பூட்டும் அனைத்திடமிருந்தும்.
எனது கோபத்தையும்
காம வேட்கையையும்
நான் அழித்தொழிக்க,
படாரென்றொரு சப்தம்
மூங்கிலைப் பிளந்ததுபோல்.
மரத்தடியொன்றில் நின்றேன்
“ஆஹா, பரவசம்” என்றெண்ணினேன்,
தொடங்கியது என் தியானம்
அந்தப் பரவசத்துக்குள்ளிருந்து!
(சுமங்களாவின் தாயார் தன் மகனை நோக்கிக் கூறியது.)
கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு: ஆசை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT