Published : 19 Mar 2017 11:08 AM
Last Updated : 19 Mar 2017 11:08 AM
சமீபத்தில் தன் மின்னஞ்சலில் உள்ள ஜங்க் மின்னஞ்சல்களைப் பார்த்துக்கொண்டிருந்தார் அவர். அப்போது வித்தியாசமாக ஒரு மின்னஞ்சல் கண்ணில் பட்டிருக்கிறது. ‘இலக்கியத்துக்கென வழங்கப்படும் விண்ட்ஹாம்-காம்ப்பல் பரிசுக்காக 2016-ம் ஆண்டில் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள்’ என்று அந்த மின்னஞ்சல் தெரிவித்தது. வழக்கமாக, நைஜீரியா, செனெகல் போன்ற நாடுகளிலிருந்து இப்படிப்பட்ட மின்னஞ்சல்கள் வருவதுண்டு. அவற்றை நம்பி ஏமாந்தவர்களும் பலர். ஆகவே, அதுபோன்றதொரு மின்னஞ்சல்தான் என்று அவர் இருந்துவிட்டார். மறுபடியும் பொறிதட்டி, சரிபார்த்த பிறகு அவரால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. அதிகாரபூர்வமான அறிவிப்புதான் அது.
பரிசுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அலி காபி எக்கெர்மன் (வயது 53). ஆஸ்திரேலியப் பூர்வகுடிப் பெண் கவிஞர் . இவரது ‘இன்சைடு மை மதர்’ (தாயின் கருவறைக்குள்ளே) என்ற சமீபத்திய கவிதைத் தொகுப்புக்காக இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. இந்திய மதிப்பில் ரூ. 1,10,27,775 பரிசுத் தொகை அவருக்குக் கிடைக்கவிருக்கிறது. வேலை ஏதும் இல்லாமல் சிரமத்துடன், கேரவன் ஒன்றில் வசித்துவந்த அவரது வாழ்வில் இந்தப் பரிசு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது. அது மட்டுமல்லாமல் அவருடைய குடும்பத்தினரைக் கண்டுபிடிக்கும் முயற்சியிலும் இனி வெற்றி கிடைக்கும் என்று அலி காபி எக்கெர்மன் நம்புகிறார்.
ஆஸ்திரேலியாவின் ‘திருடப்பட்ட தலைமுறை’யைச் சேர்ந்தவர் அலி காபி எக்கெர்மன். பூர்வகுடியில் பிறக்கும் குழந்தைகள் அந்தக் குடும்பத்திலிருந்து பிரிக்கப்பட்டு ஆஸ்திரேலியக் குடும்பங்களில் வளர்க்கப்படுவார்கள். அந்தக் குழந்தைகள் வளர்ந்த பிறகு வீட்டு வேலைகள், விவசாய வேலைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். இந்த நடைமுறை சமீப காலம்வரை இருந்தது. இதனால், தான் பிறந்த குடும்பத்தையும் தனக்குப் பிறந்த குழந்தையையும் பிரிய நேரிட்டவர் அலி காபி எக்கெர்மன். தொடர்ந்து பல ஆண்டுகளாகத் தன் குடும்பத்தைத் தேடிக்கொண்டிருந்த அலி காபி எக்கெர்மனுக்குத் தன் குடும்பத்தை இனி கண்டடைந்துவிட முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
அலி காபி எக்கெர்மன் இதற்கு முன்னும் சில விருதுகளை வென்றிருக்கிறார். இதுவரை, ‘காமி’, ‘லிட்டில் பிட் லாங் டைம்’, ‘இன்சைடு மை மதர்’ உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளையும் ‘மை ஃபாதர்ஸ் ஐஸ்’ என்ற கவிதையாலான நாவலையும் எக்கெர்மன் வெளியிட்டிருக்கிறார். ஆங்கிலத்தில் எழுதினாலும் இடையிடையே தனது பூர்வகுடி மொழிச் சொற்களைக் கலந்தே அலி காபி எக்கெர்மன் எழுதுகிறார்.
தொடக்கப் பள்ளியில் முதல் வகுப்பு
இன்று மரத்தில் ஏறியமர்ந்துகொண்டேன்
இறங்கப்போவதே இல்லை
பள்ளிக்குள் இருக்க பயம் எனக்கு,
வேறென்ன காரணம் வேண்டும்
மாநிறம் கொண்டவள் நான்.
இரவெல்லாம் இங்கே அமர்ந்திருந்தால்
ஒரு பறவையாய் ஆவேனா?
பறவையாய் ஆவேனென்றால்,
பறந்து சென்றுவிடலாம் இங்கிருந்தும்
கேவலப் பேச்சுகளிடமிருந்தும்.
அவர்கள்போல் இல்லாமல்
கொஞ்சம் வேறாக இருப்பதொன்றும்
வேடிக்கை அல்ல,
எனக்குப் பொருத்தமான இடமென்று
எங்குதான் நான் போய்ச் சேர்வது?
பள்ளிக் குழந்தைகள் சிலர்
அவ்வளவு மோசம்
பேச்செல்லாம் விஷக்கொடுக்கு அவர்களுக்கு.
கலப்பின நாயே, கருப்பியே,
ஆதிவாசியே, *அபோவே,
இவற்றுக்கு என்ன அர்த்தமென்று தெரியாது எனக்கு-
எனினும் அம்புபோல் அவை என்னைத் துளைப்பதை
அறிவேன் நான்.
இதற்கெல்லாம் அர்த்தமென்ன என்று
ஆசிரியையிடம் கேட்ட எனக்குக் கிடைத்ததெல்லாம்
அவரிடமிருந்து சுரீரென்று ஓர் அறை மட்டுமே
மதியம் சாப்பிடும்போது பள்ளி முற்றத்தில் என்னைத் தள்ளிவிட்டார்கள்.
இப்படித்தான், இப்போது உட்கார்ந்திருக்கிறேன்
மரத்தின் மேலே
யாரும் பார்க்காதபடி.
இந்த இடத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்னால்-
நான் ஒன்றாம் வகுப்புதான் படிக்கிறேன்.
(*அபோ: ஆஸ்திரேலியப் பூர்வகுடி என்று பொருள்படும் aborigine என்ற சொல்லை இழிவாகக் குறிப்பிடப் பயன்படுத்தும் சொல் இது.)
விதைகள்
நம்மைக் கோர்க்கும் விதைகள்
பல உண்டு எப்போதும்
காற்றில் பறந்து சென்று நம்மைப்
பிரித்துப் பரவச் செய்த விதைகள்
காற்றின் தோற்றுவாய் தாய்வழியா தந்தைவழியா
என் தோற்றுவாய்களும் காற்றால் அடித்துச்செல்லப்படுமா?
நான் சென்றுவிட்டால்
எட்டாத ஓர் இடத்தில் தங்கிவிடுமா?
மூச்சின்றி அப்படியே நிற்குமா காற்று?
வீட்டிலிருந்து துண்டிக்கப்பட்டவளாகத்தான்
சாக வேண்டுமா நான்?
நிங்க்-அலி
என் தாய் ஒரு கருங்கற்பாறை
ஏறவோ சுற்றி நடக்கவோ
இனியும் முடியாது என்னால்
அவளின் எடை ஓயாமல் நினைவுறுத்தும்
என்னை எனக்கு
அவளின் நிழலில் அமர்கிறேன்
அவள் கண்களில் கடற்காகங்கள் கூடுகட்டுகின்றன
அவற்றின் நிழல்களே அவளின் கல்லறை வாசகம்
நான் எடுத்துச்செல்கிறேன்
அவளின் ஒரு துண்டு கூழாங்கல்லை
என் சட்டைப் பையில்.
முழுக்கு
என் நினைவுக்கும் கனவுகளுக்கும் இடையே
கண்ணாமூச்சி விளையாடுகிறாள் எனது தாய்
அந்த மொழிக்கும் அதைப் பேசுபவர்களுக்கும் மத்தியில்
ஒளிந்துகொள்கிறாள் அவள்
அவள் சிரிப்பது அவ்வப்போது கண்ணில் படுகிறது
இப்போது கருவாக இல்லை நான், எழ வேண்டும்
இனியும் சாய்ந்து படுத்திருக்கவில்லை அவள்
எழுந்துவிட்டாள்
புதுமழையில் பிறக்கும் நீரோட்டத்தில்
நளினமாக அடிவைத்த காலொன்றைக் காண்கிறேன்
அவளுடையதா, இல்லை என்னுடையதா?
கவிதைகள் மொழிபெயர்ப்பு: ஆசை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT