Published : 07 May 2017 12:12 PM
Last Updated : 07 May 2017 12:12 PM

ஒளி ஓவியர்கள்: ஒளியோடு விளையாடிய பெரநீஸ்

1930 அமெரிக்காவில் புதிய அலை (avant garde) கலைஞர்கள் உத்வேகம் பெற ஆரம்பித்திருந்த காலம். அப்போது பொருளாதார மந்த நிலையின் தாக்கத்தைத் தன் ஒளிப்படங்களில் டோரதியா லாங்கே ஆவணப்படுத்தினார். இதுபோன்ற உணர்ச்சிபூர்வமான அம்சங்கள் பார்வையாளரின் கவனத்தைச் சட்டென்று ஈர்த்துவிடும். அதேநேரம் உயிரற்ற கட்டிடங்கள், அறிவியல் கோட்பாட்டு விளக்க ஒளிப்படங்கள் வழியாகக் கலையைக் கண்டுபிடித்தார் பெரநீஸ் அபாட் (Berenice Abbott).

நவீனப் பரிசோதனை முயற்சிகள், ஆவணப்படுத்துதல், அறிவியல் படங்கள், உருவப்படங்கள் என ஐம்பது ஆண்டுகளுக்கு ஒளிப்படக் கலையின் பல்வேறு எல்லைகளுக்குப் பயணித்தவர் பெரநீஸ்.

‘டார்க் ரூம்‘ உதவியாளர்

சிற்பம், ஓவியம் படிப்பதற்காக ஒஹையோ மாகாணத்தில் இருந்து நியூயார்க்குக்கு 1920-களில் வந்தார். பின்னர் மாடலாக மாறிய அவர், சர்ரியலிச ஓவியரும் நவீன ஒளிப்படக் கலைஞருமான மேன் ரேவுக்கும் மாடலாக இருந்துள்ளார். மேன் ரே பாரிஸுக்கு நகர்ந்தபோது, ஏற்கெனவே அவரை அறிந்திருந்ததால் அவருடைய படங்களை உருத்துலக்கும் ‘டார்க் ரூம்’ உதவியாளராகப் பெரநீஸ் சேர்ந்தார்.

‘போர்ட்ரெய்ட்’ எனப்படும் உருவப்படங்கள் எடுப்பது ஒளிப்படத் துறையில் அந்தக் காலத்தில் பிரபலம். ஓவியத்துக்கு மாற்றாக ஒளிப்படங்கள் தனி அடையாளம் பெற ஆரம்பித்திருந்தன. சில ஆண்டுகளில் தனி ஸ்டுடியோ ஆரம்பித்த பெரநீஸ் எழுத்தாளர்கள், கலைஞர்கள், பிரபுக்கள் எனப் பல்வேறு ஆளுமைகளின் உருவப்படங்களை எடுக்க ஆரம்பித்தார். அவற்றில் பிரபல எழுத்தாளர் ஜேம்ஸ் ஜாய்ஸின் படம் உலகப் புகழ்பெற்றது.

ஒரு நகரின் முகம்

பாரிஸ் நகரம் தன் பழமையைத் துறந்துவிட்டு, புதுமையான கட்டிடக் கலைக்கு மாறிக்கொண்டிருந்த காலம் அது. இந்த மாற்றத்தைப் பாரிஸ் நகரத் தெருக்காட்சிகளின் வழியாக ஒளிப்படக் கலைஞர் யூஜின் அட்ஜெட் பதிவு செய்திருந்தார். அந்தப் படங்கள் பெரநீஸைப் பெரிதும் ஈர்த்தன.

இன்றைக்கு உலகம் வியக்கும் மாபெரும் நகராக உருப்பெற்றிருக்கும் நியூயார்க் நகரமும் அப்போது நவீனமடைய ஆரம்பித்திருந்தது. கறுப்பு வெள்ளையில் அதன் அழகை, காட்சிகளை முதன்முதலில், தனிச்சிறப்பாகப் பதிவு செய்தார். இதற்கு உத்வேகம் அளித்தவை, யூஜின் அட்ஜெட் பாரிஸ் நகரை ஆவணப்படுத்திய படங்கள்.

வேறு யாரும் யோசிக்காத கோணத்தில் பறவைப் பார்வையில், ஒரு புழுவின் பார்வையில் எனப் பல்வேறு கோணங்களில் மூன்று ஆண்டுகளுக்கு நியூயார்க் நகரத்தைப் பெரநீஸ் பதிவு செய்தார். கட்டிடங்களிலும் நகர்ப்புற வடிவமைப்பிலும் பொதிந்து கிடக்கும் அழகை, கட்டிடங்களின் முகங்களைத் தன் கேமராவில் சிறைபிடித்தார். ‘நியூயார்க்கின் மாறும் முகம்’ என்ற அந்தத் தொகுப்பு 1939-ல் வெளியாகி, விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது. ஒளிப்படக் கலை வரலாற்றில் முக்கிய ஆவணமாகக் கருதப்படுகிறது.

அறிவியலோடு கைகோத்த கலை

அடுத்ததாக அவர் கையிலெடுத்த விஷயம் அறிவியல் கோட்பாடுகளை விளக்கும் ஒளிப்படங்கள். காந்தப் புலம், இயக்க ஆற்றல் போன்ற இயற்பியல் விதிகளைக் குறித்த ஒளிப்படங்களை மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்துக்காக 1950-களில் அவர் எடுத்தார்.

தொழில்நுட்ப ரீதியில் அவர் மேற்கொண்ட பரிசோதனைகளுக்கு இது மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. தெளிவற்ற அறிவியல் கொள்கைகளை, இந்தப் படங்கள் காட்சிரீதியாகச் சிறப்பாக விளக்கின. அது மட்டுமல்லாமல் கோட்பாட்டின் இயல்பைக் குலைக்காமல் கலைத்தன்மையையும் அவருடைய படங்கள் உருவாக்கின.

ஆத்மார்த்தப் பிணைப்பு

தொடர்ச்சியான பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டுவந்த பெரநீஸ், தன் ஒளிப்படக் கலை அறிவை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் நோக்கத்துடன் நியூயார்க் புதிய சமூக ஆராய்ச்சிப் பள்ளியில் பேராசிரியர் பணியில் சேர்ந்தார். 25 ஆண்டுகளுக்கு இந்தப் பணியில் தொடர்ந்து சேவை புரிந்தார்.

ஆவண ஒளிப்படத் துறையில் மிகப் பெரிய ஆளுமையாக வளர்ந்த அவர், 93 வயதில் இறப்பதற்குச் சில ஆண்டுகள் முன்னர்வரை படமெடுத்துக்கொண்டிருந்தார் என்பதிலிருந்து அவருக்கும் நவீன ஒளிப்படக் கலைக்கும் இடையே உள்ள ஆத்மார்த்தமான பிணைப்பைப் புரிந்துகொள்ளலாம்.


பெரநீஸ் அபாட்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x