Published : 19 Feb 2017 10:58 AM
Last Updated : 19 Feb 2017 10:58 AM
பிரெஞ்சு மொழியில் குறிப்பிடத் தகுந்த கவனத்தைப் பெற்றிருந்தாலும் அந்த மொழியைத் தாண்டி அதிக கவனம் பெறாத நல்ல கவிஞர்களுள் ஒருவர் க்ளாத் தெ ப்யூரின் (Claude de Burine). 1931-ல் ஃபிரான்ஸின் ந்யேவ்ர பிராந்தியத்தில் அவர் பிறந்தார். அவரது குழந்தைப் பருவம் அங்குள்ள கிராமத்தில் கழிந்தது. ந்யேவ்ர பிராந்தியத்தின் இயற்கையான நிலப்பரப்பு அவரது பிற்காலத்திய கவிதைகளுக்குப் பெரும் உந்துதலாக அமைந்தது. 1949-லிருந்து 1956வரை மொராக்கோ நாட்டில் உள்ள புகழ்பெற்ற காஸாப்ளாங்கா நகரில் வசித்துவந்தார். அங்கே அவர் ஆசிரியராகவும் இருந்தார்.
1956-ல் பாரீஸுக்குத் திரும்பிய க்ளாத் தெ ப்யூரின், பொறியாளராக இருந்த தனது கணவரை விவாகரத்து செய்தார். பாரிஸில் அப்போது பிரபலமாக இருந்த சர்ரியலிஸ கலைஞர்களுடன் க்ளாத் ஐக்கியமானார். ஆன்ரி எஸ்பினோஸா என்ற ஓவியரை பாரிஸில் சந்தித்தார். இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். 1982-ல் ஆன்ரி இறக்கும்வரை இருவரும் சேர்ந்தே வாழ்ந்தார்கள்.
கவிதையைப் பற்றிய க்ளாத் தெ ப்யூரினின் எண்ணம் மிக மிக எளிமையானது மட்டுமல்லாமல் ஒரு குழந்தையின் குன்றாத ஆர்வத்தைப் போன்றது. “கவிதை என்பது ஒரு தனி நிலை; ஒருவித நாடோடித்தனம். நான் மூன்று வயதுச் சிறுமியாக இருந்தபோது ஒரு நாள் இரவில் யாருடைய துணையுமின்றித் தனியாக வெளியில் சென்றேன். நிலவொளியைப் பிடித்து என் பெற்றோரின் ஷாம்பெய்ன் கூடைக்குள் போட்டுக் கொண்டுவர வேண்டும் என்று முயன்றேன். கவிதை என்பதும் இதுதான்” என்ற அவரது வார்த்தைகள் அதை உணர்த்துகின்றன.
க்ளாதின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த மேரி ஆன் காஸ், க்ளாதின் கவித்துவத்தைப் பற்றிச் சொல்லும்போது, “தான் விரும்பியபடி நிலவொளியைத் தன் கவிதையில் பிடிப்பதையே க்ளாத் செய்துவருகிறார்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
சர்ரியலிஸக் கலை மரபை க்ளாத் தெ ப்யூரின் பின்பற்றினார். மனித வாழ்வின் சந்தோஷங்களையும் துயரங்களையும் சர்ரியலிஸப் பாணியில் தன் கவிதையில் வெளிக்கொண்டுவந்தார். கவிதை, கட்டுரை என்று கிட்டத்தட்ட இருபது புத்தகங்களை க்ளாத் வெளியிட்டிருக்கிறார். ஃபிரான்ஸின் மிக முக்கியமான இலக்கிய விருதுகள் பலவற்றையும் க்ளாத் பெற்றிருக்கிறார். அவரது கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ‘Words Have Frozen Over’ என்ற தலைப்பில் வெளியானது. இதுதவிர, பல்வேறு தொகுப்பு நூல்களிலும் க்ளாதின் கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. தனது 74-வது வயதில் 2005-ல் அவர் காலமானார்.
உன்னை வரவேற்கிறேன்
கோடையில்
தவித்திருக்கும்
கற்பலகைகள் மேல்
கார்னேஷன் பூக்களை
விசிறி எறிவதுபோல்
உன்னை வரவேற்கிறேன்
குளிரால் வெறிச்சோடிய தெருவில்
கணப்புக்கு நெருப்பு மூட்டுவது போல்
உனக்குப் பெயரிடுகிறேன்
உயிர்தருவதில்
தனக்கேதும் மாற்றில்லாத
ரொட்டியைத் தொடுவதுபோல்
உன்னைத் தொடுகிறேன்.
நாம்
அநேகமாக, கனவைப் போல
நிஜமற்று நாம்,
உறக்கம் வராத கடவுள்
கண்மூடாத தூக்கத்தில்
இப்படியும் அப்படியும் புரண்டுகொண்டிருப்பதுபோல்.
வெகு தொலைவிலிருந்து வருகிறாய் நீ,
எங்களுக்கு வெகு நெருக்கமாய் வந்துறைகிறாய், நாங்களாகவே வாழ,
காதலாய்க் கடல் சுவைதரும் தருணத்தில்
கரைக்கு இழுத்துவரப்படும்
நிலாவெளிச்சப் படகாய் நீ.
உன்னுடன் இருக்க வேண்டும்,
கூழாங்கற்கள் ஏற்கெனவே நினைவுகூரும்
அந்த முதல் நிமிடத்தில்.
சூரியனுக்குக் கீழே நடனமிடும்
குழந்தையாய் இருப்பதில்
டெய்சி மலர் கிறங்கியிருக்கும்
அந்த முதல் நிமிடத்தில்.
எப்போதுமே சிந்தனையில் மூழ்கி
தங்கள் நிழலில் நடக்கும்
வழிப்போக்கர்கள்
பாரிஸ் நகரின்
விளக்குக் கம்பங்கள்.
சிட்டுக்குருவிக்கும் கதையொன்று இருக்கிறது சொல்ல, கீழே.
உனது மௌனம்: உறையவைக்கும்
திடீர் பனிக்காற்று.
வந்தடைகிறது ஒரு தந்திபோல்.
நீல ஒளியின் கீழ்
குழந்தைப் பருவத்தின் நீல ஒளியினடியில்
மெழுகு பூசிய தரையிலிருந்து
தேன் மணமும்
நீலக்கூடைப் பூவின் மணமும் வீசும்
அவ்விடத்தில்,
கார்னேஷன் மலர் வனிலாச் சுவையையும்
மிளகுச் சுவையையும் இன்னும் நீங்காது
கொண்டிருக்கும் அவ்விடத்தில்,
உனது குரல்
ரயில்களையும் கப்பல்களையும்
பயணப்படுத்தும்;
கரும் வயிற்றுப் படகுகளைக்
கயிற்றிலிருந்து விடுவித்து
முன்தள்ளும்;
சாம்பல் நிற வாத்துகளை
விடுவிக்கும்;
உறைபனியின் கரங்களில்
வெண்முத்துக் கத்திகளாய்
நாணற்கோரைகள் நிற்கும்
அந்நேரம்.
இரவு வருகையில்
தீவுநோக்கிச் செல்லும்
படகுகளின் நெருப்பை
உன் குரல் விறகாய்த் தூண்டிவிட
நீங்கிச் சென்றாய் நீ,
பிரிவின் வெறிச்சோடிய கண்களாய்
தன்னந்தனியே
என்னை விட்டுவிட்டு.
(கவிதைகள் மொழிபெயர்ப்பு: ஆசை)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT