Published : 19 Mar 2017 12:06 PM
Last Updated : 19 Mar 2017 12:06 PM

விவாதம்: இந்த மரணங்களுக்கு என்ன நியாயம் செய்யப்போகிறோம்?

இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமை என்பதெல்லாம் பழங்கதையாகிப் போய் விட்டதோ என்ற கேள்வியை எழுப்புகின்றன அடுத்தடுத்து நிகழும் தற்கொலை மரணங்கள். ‘தீண்டாமை மனிதத் தன்மையற்ற செயல்’ என்பது பாடப் புத்தகங்களில் வெறும் எழுத்தாக உறங்கிக்கொண்டிருக்கிறது. சமூகம், கல்வி நிறுவனங்கள், பணியிடங்கள் என்று எங்கு பார்த்தாலும் சாதியின் கொடுங்கரங்கள் எளியோரின் உயிர் குடிக்க காத்துக் கிடக்கின்றன.

சாதிய அடக்குமுறை, உரிமை மறுப்பு, உழைப்புச் சுரண்டல், சாதி ஆணவக் கொலைகள் என்று நீளும் பட்டியலில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களைத் தற்கொலைக்குத் தள்ளும் கொடுமையும் இணைந்திருப்பது வேதனைக்குரியது. ரோஹித் வெமுலாவுக்கு நேர்ந்த கொடுமையே இன்னும் நேர்செய்யப்படாத நிலையில், சேலத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணனைப் பறிகொடுத்துவிட்டுத் தவிக்கிறது ஒரு தமிழகக் குடும்பம்.

இதற்கும் நமக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்று நாம் ஒதுங்கிவிட முடியாது. காரணம் சமூகத்தின் எல்லாத் தளங் களிலும் நிலவும் சாதிப் பாகுபாட்டின் தொடர்ச்சிதான் உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் ஒடுக்கப்பட்ட மாணவர்களின் மீது செயல்படுத்தப்படும் வன்முறை.

பெண்ணுக்குப் பெரும் சுமை

பாலினப் பாகுபாடுகள் நிறைந்திருக்கும் இந்தச் சமூகத்தில் பெண்கள் தனித்த அடையாளத்துடன் வாழ்வதே சவால் நிறைந்தது. இந்த நிலையில் சாதி அடுக்கில் அடிநிலையில் இருக்கும் பெண்கள் சந்திக்கும் துயரங்கள் சொல்லில் அடங்காதவை. தன் மீது படிந்துவிட்ட சாதி அடையாளத்தைக் கல்வியின் துணையோடுதான் வென்றெடுக்க முடியும் என்ற நம்பிக்கையோடு இருக்கும் பல பெண்களுக்குக் கல்வி மறுக்கப்படுகிறது. அதையும் மீறி படித்து முன்னேறி வருகிறவர்களைப் பணியிடங்கள் அத்தனை உவப்புடன் ஏற்றுக்கொள்வதில்லை.

“நான் மென் பொருள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த புதிதில் பலரும் என்னிடம் சாதாரணமாகப் பேசவில்லை. சிலர் என்னிடம் இயல்பாகப் பழகுவதுபோல இருந்தாலும், கண்ணுக்குத் தெரியாத ஒரு கண்ணாடித் தடுப்புச் சுவர் இடையே நிற்பதுபோலவே தோன்றும். அவர்கள் அனைவரும் ஒரு பக்கமும் நான் தனியாகவும் இருப்பதைப் போலவே பல நேரம் உணர்ந்திருக்கிறேன். என்னுடன் பணியாற்றியவர்கள் அனைவரும் படித்தவர்கள், பண்பாளர்கள் என்று தங்களைப் பற்றிப் பெருமிதத்துடன் சொல்லிக்கொள்வார்கள். ஆனால், என்னை ஒரு போதும் தங்களுக்குச் சமமாக அவர்கள் ஏற்றுக்கொண்டதில்லை.

என்ன பேசினாலும் என்னை ஒரு படி கீழே வைத்துத்தான் நடத்தினார்கள். அந்த அலுவலகத்தில் துப்புரவுப் பணி செய்யும் பெண்கள் மட்டுமே என்னிடம் நன்றாகப் பேசுவார்கள். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்கள் துப்புரவுப் பணிக்காகவே நேர்ந்து விடப்பட்டவர்களா என்ன? அவர்கள் அதிகாரியாகப் பொறுப்பேற்கும்போது அவர்களுக்குக் கீழ் பணிபுரியும் ஆண்களும் பெண்களும் ஏன் அதை இயல்பாக ஏற்றுக்கொள்வதில்லை” - தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக இருக்கும் இந்தப் பெண்ணின் கேள்விக்கு நம்மிடம் பதில் இருக்கிறதா?

வேரூன்றும் விஷ விருட்சம்

“இன்னைக்குக் காலம் எவ்வளவோ மாறிடுச்சி, இந்த மாதிரி எல்லாம் இப்போ எங்கேயும் நடப்பதில்லை” என்று மறுத்து வாதிடுகிற பலரும் சாதிப் பாகுபாட்டைத் தங்களை அறியாமலேயே கடைப் பிடிக்கிறவர்களாக இருக்கிறார்கள்.

இங்கு மட்டும்தான் சாதிப் பாகுபாடும் ஒடுக்குமுறையும் நடக்கின்றன எனச் சொல்லிவிட முடியாதபடி அனைத்துத் தளங்களிலும் வேரோடிப் போய் இருக்கிறது. அறிவோடு நல்லொழுக்கத்தையும் பண்பையும் விதைக்க வேண்டிய கல்விக் கூடங்களில்கூட சாதி வேறுபாடு பார்க்கப்படுவது சமூக அவலத்தின் உச்சம். சில பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களைப் பள்ளியைக் கூட்டச் சொல்வதும் கழிவறையைச் சுத்தம் செய்யச் சொல்வதும் இன்றும் நடக்கிறது.

கல்வி தங்களுக்கு உயர்வைத் தரும் என்ற நம்பிக்கையில் பள்ளிக்கு வரும் மாணவர்களின் நம்பிக்கையை இது போன்ற செயல்களால் பொசுக்குவது, மேம்பட்ட சமூகத்தின் குணமா? கல்லூரியையும் கல்லூரி விடுதிகளையும்கூட சாதிப் பாகுபாடு ஆக்கிரமித்திருக்கிறது. குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த மாணவர்கள் தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்து செயல்படுவதும் சாதி அடிப்படையில் மோதிக்கொள்வதும் நடக்கின்றன.

ரகசியமாக வெளிப்படும் பாகுபாடு

மேல், இடைநிலை வகுப்பைச் சேர்ந்த ஆண்கள்தான் இப்படியான சாதிய ஒடுக்கு முறைகளிலும் வன்முறைகளிலும் ஈடுபடுகிறார்கள் என்று சொல்லி, பெண்கள் இதிலிருந்து ஒதுங்கிவிட முடியாது. காரணம் ஆண்களுக்கு நிகராகவோ அல்லது அவர்களைவிட அதிகமாகவோ சாதிய மனோபாவத்தை வெளிப்படுத்தும் வகையில் பெண்கள் கட்டமைக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழகத்தில் சமீப காலத்தில் நடந்த பெரும்பாலான சாதி ஆணவக் கொலைகளின் சூத்திரதாரிகளாகப் பெண்களே இருப்பது, இந்தக் கட்டமைப்பின் விலங்குகளை உடைத்து அவர்கள் வெளிவர முடியாமல் திணறுவதன் வெளிப்பாடு.

சாதிப் பாகுபாடு நேரடியாகவும் வெளிப்படையாகவும்தான் அரங்கேற வேண்டும் என்பதில்லை. நலம் விசாரிப்பது போல மிக இயல்பாகவும் தந்திரமாகவும் சாதி விசாரிக்கப்படும். வீடு வாடகைக்குப் பிடிக்க விசாரிக்கச் சென்றால், “உங்களுக்கு எந்த ஊரு?” என்று மறைமுகமாவும் “நீங்க எந்த சாமியைக் கும்பிடுவீங்க?” என்று நேரடியாகவும் கேட்கிற பெண்கள் இங்கே ஏராளம். பணியிடத்தில் பக்கத்து இருக்கைப் பெண்ணைப் பார்த்து, “நீங்க எந்த ஆளுங்க?” என்று உரிமையோடு கேட்பார்கள். இப்படியான கேள்விகளைத் தவிர்த்தால், “உங்க வீட்டு வழக்கம் எப்படி? கல்யாணம் எந்த மாதிரி பண்ணுவீங்க?” என்று அடுத்தடுத்த கேள்வி மூலம் சம்பந்தப்பட்ட நபரின் சாதியைத் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவார்கள்.

தங்களுக்கு நிகரான அல்லது தாங்கள் உயர்வென்று கருதுகிற பிரிவைச் சேர்ந்தவராக இருந்தால், நல்லவிதமாகப் பழகுவார்கள். தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்தால்போதும், வெறுத்து ஒதுக்குவார்கள். முடியாதபட்சத்தில் அடிக்கடி மட்டம்தட்டிப் பேசிக்கொண்டும் குத்திக்காட்டியபடியும் இருப்பார்கள். இதெல்லாம் மிகச் சாதாரண நிகழ்வாகத் தோன்றலாம். ஆனால், தொடர்ந்து இதுபோன்ற ஒடுக்குமுறைக்கும் புறக்கணிப்புக்கும் வன்முறைக்கும் ஆளாகிற பெண்கள் மனதளவில் சோர்ந்து போவார்கள். கல்வியும் வேலையும்கூட அவர்களது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த வில்லை என்றால் தங்கள் மீது காலம்காலமாக விழுந்துவிட்ட தவறான அடையாளத்தில் இருந்து அவர்கள் எப்படி வெளியே வருவார்கள்?

இது பெருமிதமா?

ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறப்பதென்பது இயல்பான நிகழ்வு என்பதைத் தவிர அதில் வேறெந்த திறமையும் தகுதியும் இல்லை என்பதை முதலில் உணர வேண்டும். அதையே ஒரு மனிதனின் அடையாளமாகப் பார்ப்பதும், அதை ஊதி ஊதிப் பெரிதாக்குவதும் பண்பட்ட சமூகத்தின் அடையாளம் அல்ல.

பெண்களின் மனதில் குடிகொண்டிருக்கும் சாதிப் பெருமிதமோ சுயசாதி குறித்த தாழ்வுமனப்பான்மையோ அவர்களின் பிள்ளைகளுக்குக் கடத்தப்படும். பெற்றோரிடம் இருந்து இதுபோன்ற உணர்வைப் பெற்று வளரும் இளம் தலைமுறை, ஆதிக்க சக்தியாகவோ அடக்குமுறைக்கு ஒடுங்கிப் பழக்கப்பட்டவராகவோ வளர்வதற்கான சாத்தியமே அதிகம். இது இரண்டுமே சமூக வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் தனிமனித வளர்ச்சிக்கும் நல்லதல்ல. பிறப்பால் வருவதல்ல பெருமையும் சிறுமையும் என்பதை உணர்ந்து சாதி வேறுபாடுகள் அற்ற சமூகத்தைப் படைப்பதுதான் முன்னேற்றத்துக்கான வழி. இதில் பெண்களுக்கும் சம பங்கு உண்டு. சட்டமும் அரசும் பாகுபாடு அற்ற வாழ்க்கைக்கு உத்தரவாதம் தர வேண்டும். இப்படியொரு மாற்றம்தான் மகன் முத்துகிருஷ்ணனை இழந்து தவிக்கும் தாய்க்கு நாம் தரும் ஆறுதல்.

நீங்க என்ன சொல்றீங்க?

சாதி ஆணவக் கொலைகளின் போதும், சாதி அடிப்படையிலான புறக்கணிப்பால் நிகழும் தற்கொலைகளின் போதும் மக்கள் பெரும் திரளாகப் போராடுவதும் நீதி கேட்டு நிற்பதும் நடக்கின்றன. பிரிந்துவிட்ட ஒரு உயிருக்கான நீதி என்பது என்ன? என்ன செய்து அந்த நியாயத்தைப் பெற முடியும்? சாதியின் பெயரால் மற்றுமொரு உயிர் பிரியாமல் இருப்பதுதானே, இதுவரை நிகழ்ந்த மரணங்களுக்கு எல்லாம் கிடைக்கும் நீதியாக இருக்க முடியும்? நமக்குள்ளும் நம்மைச் சுற்றிலும் நடக்கிற சாதி வேறுபாடுகளை என்ன செய்து களைவது? எதன் மூலம் நாம் பாகுபாடற்ற சமத்துவ சமூகத்தை உருவாக்க முடியும்? தொடர்ந்து நிகழ்கிற மரணங்களுக்கு என்னதான் தீர்வு?

இந்த விஷயத்தில் உங்கள் கருத்து என்ன? அனுபவம் என்ன? எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள், விவாதிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x