Last Updated : 03 Jan, 2016 01:45 PM

 

Published : 03 Jan 2016 01:45 PM
Last Updated : 03 Jan 2016 01:45 PM

பார்வை: ஆடையால் கெடுகிறதா புனிதம்?

ஆடையால் நமது கோயில்களின் புனிதம் கெட்டுவிடுவதாகக் கருதி, இந்து சமய அறநிலையத் துறையின் சட்டத்தின் விதியை மேற்கோள் காட்டி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தேசத்தையே உலுக்கிய நிர்பயா கொடூரத்துக்கும்கூட ஆடை பற்றிய கருத்துக்கள் வெளிவந்தன. ‘நிர்பயாவைப் போல இரவு நேரத்தில் ஆண் நண்பருடன் கவர்ச்சிகரமான உடையில் வெளியே போனால்…’ என்ற ரீதியில் வன்மமான கருத்துக்களைப் பேசியவர்களில் பலரும் நன்கு படித்த, வசதி வாய்ப்புள்ள நடுத்தர வர்க்கத்தினரே.

ராமாயண, மகாபாரதக் காலத்திலிருந்து இன்றுவரை பெண்களின் மீதான வன்முறைகளுக்குக் காரணம் பெண்தான் என்ற வன்முறைவாதம், வன்முறையாளர்களுக்கு மட்டுமே ஏற்புடைய ஒரு விஷயம், மக்களின் மனதில் ஆழப் பதிந்துவிட்டது.

சரி இப்போது ஆடைகளுக்கு வருவோம். “நமது கலாச்சாரம் காக்கப்பட வேண்டும்” என்கிற வாதத்தை எடுத்துக்கொள்வோம். நமது கலாச்சாரம் புடவை கட்டுதல், வேட்டி அணிதல் என்று வைத்துக்கொள்வோம். இன்றைக்கு 50 வயதுக்கு மேற்பட்ட ஆண் - பெண்களைத் தவிர புடவையும் வேட்டியும் மட்டுமே தமது உடை என்று கருதாதவர்கள் 90 சதவீதம் பேர்.

ஆண்களில் அதுவும் இல்லை. கிராமப்புறங்களைத் தவிர்த்து சிற்றூர், நகரங்கள் உட்பட 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் பேண்ட் சட்டைதான் அணிகிறார்கள். வருடத்தில் சில நாட்கள் மட்டுமே வேட்டி கட்டுவது வழக்கத்தில் உள்ளது. எனவே, ‘நமது கலாச்சாரம்’ என்று கூறுவது வெகுவாக மாறிவிட்டது. 25-30 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் ஆடையில் ‘நமது கலாச்சாரத்தில்’ இல்லை என்பது நிதர்சனமான உண்மை. எனவே, வாழ்க்கையில், உடையில் ஏற்படும் மாற்றத்தை நீதித்துறை முதல் பள்ளி, கல்லூரிவரை ஏற்றுக்கொண்டுவிட்ட பிறகு மாற்றத்துக்கு உள்ளாகிவிட்ட ஆடையைச் சட்டம் போட்டு, விதிகளைப் போட்டாலும் மாறுவது கடினம். அநாகரிகமாக இல்லை என்றால் ஏற்றுக்கொண்டு போக வேண்டும் என்பதுதான் நியதி.

“பிறர் கண்ணை உறுத்துவது போல் இருக்கக் கூடாது” என்று சொல்லப்படுகிறது.

பேசாமல் எல்லாரும் உடல் முழுக்க மூடும் புர்க்காவை அணிந்துவிட்டால் யார் கண்ணையும் உறுத்தாது. நமது சமூகத்திலேயே வாழும் இஸ்லாமிய சமூகத்தினர்கூட இதில் மாற்றம் வர வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். ஆனால், எது எவர் கண்ணை உறுத்தும் என்ற கேள்விக்கு ஒரு விடை சாத்தியமில்லை. “சரி துப்பட்டாவைப் போடுங்கள், சுடிதாரை ஏற்றுக்கொள்கிறோம்” என்று ஒரு வாதம் வைக்கப்படுகிறது. இது இன்றைக்குக் கோயில்களில் வைக்கப்படுவது மட்டுமல்ல. பல முன்னணிக் கல்லூரிகளில், ஏறக்குறைய எல்லாப் பொறியியல் கல்லூரிகளிலும் துப்பட்டாவை ஊக்கு போட்டு இருபக்கமும் ஆடையுடன் குத்திக்கொள்ள வேண்டும் என்று விதி இருக்கிறது. இது மார்பகங்கள் தெரியாத வண்ணம் இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே அன்றி வேறல்ல. ஒன்பதாம் வகுப்புக்குப் பிறகு தாவணி போட வேண்டும் என்று 90-களுக்கு முன்பு இருந்த பள்ளிக்கூட விதிக்கு ஒப்பானது.

சமீபத்தில் நண்பர் ஒருவர் மிகவும் மனமொடிந்து கூறும்போது, முன்பெல்லாம் என் 11 வயது மகளை நான் சுதந்திரமாக உடுத்த அனுமதித்தேன். இப்போது நான் துப்பட்டாவைப் போட்டு மறைக்கும் விதமாக உடுத்தச் சொல்கிறேன் என்று கூறினார். ஏனெனில், பக்கத்து வீட்டுக்காரரின் பார்வை சரியில்லாமல் இருக்கிறது என்று வேதனையுடன் கூறினார். இதே தந்தையின் வேதனையை, சமீபத்தில் தீர்ப்பெழுதிய நீதித்துறையின் மனநிலையோடு ஒத்ததாக இருக்கும் என்று கருத முடியுமா? முடியாது. ஏனெனில் இவர்களுடைய நோக்கம் வக்கிரப் பார்வையுடன் பார்க்கும் ஆணின் கண்களிலிருந்து பெண்ணைக் காப்பாற்றுவது அல்ல. மாறாக, பெண்ணின் உடையால் ஆணின் மனது (சமூகம்) வக்கிரப்படக் கூடாது என்பதும், இதுபோன்ற வக்கிரமான உடையால் கோயிலின் புனிதம் கெடக் கூடாது என்பதும்தான். எப்படிப்பட்ட அணுகுமுறைக் கோளாறு இது? எப்படிப்பட்ட கருத்து வக்கிரம் இது?

உண்மையில் ஆண் மனது பெண்ணின் அங்க அவயங்களைப் பார்த்தால் உணர்ச்சி தூண்டப்பட்டு, வன்முறை புரிய இடமளிக்கும் என்று கருதுகிறதா இந்தத் தீர்ப்பும் சுற்றறிக்கையும்? உண்மையில் நமது இளைஞர்கள் அப்படி இல்லை என்பதுதான் நிஜம். அப்படிப்பட்ட உணர்வுரீதியாகப் பண்படாத ஆண்கள் இருக்கும்வரை இந்தச் சமூகம் எப்படி வளரும்? அப்படியானால் ‘பெண்களின் உடையால்தான் பாலியல் வன்முறைகள் பெருகுகின்றன’, ‘பெண்கள்தான் அவர்கள் மீதான வன்முறைக்கு காரணம்’ என்ற கருத்துகளும் சரிதானோ? நிர்பயா குற்றவாளி சொன்னதுபோல், அவ்வளவு எதிர்ப்பு காட்டாவிட்டால் அவ்வளவு வன்முறை நடந்திருக்காது என்று ‘இந்தியாவின் மகள்’ விவரணப் படத்தில் அவன் பேசிய வார்த்தைகளின் மற்றொரு பரிமாணம்தானா இந்தச் சமீபத்திய தீர்ப்பும் சுற்றறிக்கையும் என்று நாம் யோசிக்க வேண்டியுள்ளது. எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் நாம்? என்ன விதமான பொய்மைகளில் பெருமை கொள்கிறோம் நாம் என்று யோசிக்க வேண்டும்.

கோயில்களின் புனிதத்தை ஆடைகள் கெடுக்க முடியுமா ?

கோயில்களின் புனிதம் உள்ளுறை தெய்வங்களால் ஏற்பட்டதா? அந்த தெய்வங்களைக் கும்பிட வரும் மனிதர்களால் ஏற்பட்டதா? ஒரு புனிதமான கோயிலுக்குள் நூறு பாவங்களைச் செய்த பாவிகள் வருகிறார்கள். மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் கொடியவர்கள் வருகிறார்கள். பெண்களைப் பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றவாளிகள் வருகிறார்கள். மனத்தில் இருளையும், செயல்களில் கயமையும் வைத்துள்ளவர்கள் வருகிறார்கள். அதனால் கெடாத கோயில்களின் புனிதம் பெண்கள் உடையால் ஆண்களின் அரைக் கால் சட்டைகளால் கெடுவதாகக் கூறுகிறீர்களே, நீங்கள் கடவுளின் புனிதம் குறித்தும் கடவுள் உறையும் கோயில்களின் புனிதம் குறித்தும் இவ்வளவுதான் உணர்ந்துள்ளீர்களா?

ஒவ்வொரு மதமும் பற்றற்று இருப்பதையே தமது மத தத்துவத்தின் அடி நாதமாகக் கொண்டுள்ளது. ஆகவே, பெண்ணின் உடைக்குக் கட்டுப்பாடு போட்டு ஒழுக்கத்தைக் கொண்டுவரப் பார்ப்பது மாட்டுக்கு முன்னால் வண்டியைக் கட்டும் வேலை. இத்தகைய சமூகம் முன்னே செல்லாது.

- கட்டுரையாளர், வழக்கறிஞர்.
தொடர்புக்கு: ajeethaadvocate@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x