Published : 26 Mar 2017 11:28 AM
Last Updated : 26 Mar 2017 11:28 AM
இன்றைய இளம்தலைமுறையினருக்கு ஆண்-பெண் உறவைப் பற்றிய தவறான புரிதல்களை உருவாக்குவதில் தமிழ்த் திரைப்படங்களுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. இந்தப் பிரச்சினை குறித்து இப்போது பலதரப்பினரும் விவாதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த விவாதத்தின் தொடர்ச்சியாக, சமீபத்தில் ‘புட் சட்னி’ குழுவினர் ‘ஆபீஸ் ரொமான்ஸ்’ என்ற வீடியோவைத் தயாரித்து வெளியிட்டிருக்கின்றனர். அலுவலகச் சூழலில், ஆண்களால் காலம் காலமாகப் பெண்கள் எப்படித் தவறான கண்ணோட்டத்தில் அணுகப்பட்டுவருகிறார்கள் என்பதை நையாண்டியுடன் விளக்கியிருக்கிறது இந்த வீடியோ.
கடந்த வாரம் யூடியூபில் வெளியான இந்த வீடியோவை லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்த்திருக்கின்றனர். ‘ஒரு மெல்லிசான கோடு - இந்தப் பக்கம் காதல், அந்தப் பக்கம் பின்தொடர்தல்’ என்பதை முன்வைத்து இந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கிறது. காதல் என்று கற்பனை செய்துகொண்டு அலுவலகங்களில் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் சீண்டல்களைப் பற்றிய சரியான பார்வையோடு இந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கிறது. அத்துடன், அலுவலகச் சூழலில் பெண்கள் தவறாக அணுகப்படும் விதத்தைப் பற்றிய ஆரோக்கியமான உரையாடலையும் சமூக ஊடகங்களில் இந்த வீடியோ தொடங்கிவைத்திருக்கிறது.
இந்தக் கதை நிஜத்தில் வேலை பார்க்கும் இடங்களில் நடக்கும் அளவுக்கு மோசமானது அல்ல என்ற குறிப்புடன் தொடங்குகிறது ‘ஆபீஸ் ரொமான்ஸ்’ வீடியோ. வெங்கி (வெங்கடேஷ் ஹரிநாதன்) என்பவர் மனிதவள மேலாளரிடம் (வினோதினி வைத்தியநாதன்), சக ஊழியரான அஞ்சலி (லக்ஷ்மி பிரியா) தன்னை வேலை பார்க்கவிடாமல் கவனத்தைச் சிதறடிக்கிறார் என்று புகார் அளிக்கிறார். அவர் அடுத்தடுத்து அஞ்சலி மீது சொல்லும் புகார்கள் அனைத்தும் தமிழ்த் திரைப்பட உலகம் காதலைப் பற்றி எந்த அளவுக்குப் போலியான பிம்பங்களை உருவாக்கிவைத்திருக்கிறது என்பதை வெளிச்சம்போட்டுக்காட்டுகின்றன.
ஒரு பெண் திரும்பிப்பார்த்தால் காதல், துப்பட்டா முகத்தில் விழுந்தால் காதல், சாரி என்று சொன்னால் காதல் எனக் கதாநாயகர்களைக் காதலில் விழவைக்கும் தமிழ்த் திரையுலக இயக்குநர்களின் பிற்போக்குத்தனத்தை இந்த வீடியோ சுட்டிக்காட்டியிருக்கிறது. சுமார் ஒன்பது நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில் அலுவலகத்தில் நடைபெறும் பாலியல் சீண்டல்களைப் பற்றிய தீவிரமான அலசல் பார்வை எதுவும் முன்வைக்கப்படவில்லை. முழுக்க முழுக்க நையாண்டியைப் பிரதானமாக வைத்தே ‘ஆபீஸ் ரொமான்ஸ்’ வீடியோவை இயக்கியிருக்கிறார் அருண்குமார்.
ஆனால், இந்த வீடியோ எடுக்கப்பட்ட நோக்கத்தைச் சரியாகப் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கிறது. பெண்களைப் பின்தொடர்வது காதல் இல்லை, அது பாலியல் சீண்டல் என்பதைப் புரியவைப்பதில் இந்த வீடியோ வெற்றியடைந்திருக்கிறது. தமிழ்த் திரையுலகம் பெண்களைப் பின்தொடர்வதைக் காதல் எனத் தவறாகச் சித்தரிப்பதைப் பரிசீலிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது என்பதைத் தெளிவாக விளக்கியிருக்கிறது இந்த வீடியோ.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT