Published : 23 Apr 2017 11:55 AM
Last Updated : 23 Apr 2017 11:55 AM
பெண்களின் அரசியல் பங்கேற்பு ஏன் குறைவாக இருக்கிறது, காரணம் என்ன போன்ற கேள்விகள் அரசியலுக்குள் வந்த பெண் தலைவர்களிடம் மட்டுமே அதிகமாகக் கேட்கப்படுகின்றன. அந்தக் கேள்விகள் நியாயமானவைதான் என்றாலும் அவற்றுக்கான பதிலைத் தேடிச் செல்லும்போது அவற்றில் உண்மை யில்லை என்றே தோன்றுகிறது. கட்சி சார்ந்த பங்கேற்பே அரசியல் பங்கேற்பாக கவனிக்கப்படுவதும் அதற்கான காரணங்களில் ஒன்று. நம் வரலாறும் சினிமாக்களைப் போன்று ஆண்களையே நாயகர் களாகச் சித்தரித்துள்ளது.
கடந்த ஆண்டு நடந்த பெண்கள் தினக் கூட்டத்தில் மாணவிகளுக்கான கலந்துரை யாடல் நடைபெற்றது. யார் கஸ்தூரிபாய் என்ற மிக எளிய கேள்வியை அவர்களிடம் கேட்டேன். யோசித்து பதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்பது போல காந்தியின் மனைவி என்று உடனடியாகவும் உரக்கச் சத்தமிட்டும் சொன்னார்கள். சரி, காந்தி யார் என்றேன். அதற்கும் உடனடியாகப் பதிலளித்தார்கள். அவர்தான் சுதந்திரம் பெற்றுக் கொடுத்தவர், இந்தியாவின் தந்தை, விடுதலைப்போரின் தலைமை என்றெல்லாம் காந்தியைப் பற்றிச் சொன்னார்கள்.
காந்தி யார் என்று கேட்டால் அவரது வரலாறைச் சொல்லும் மாணவிகள் கஸ்தூரிபாய் யார் என்ற கேள்விக்கு, ‘காந்தியின் மனைவி’ என்பதோடு முடித்துவிடுகிறார்கள்! இத்தனைக்கும் கஸ்தூரிபாய், சுதந்திரப் போராட்டங்களில் தன்னை இணைத்துக்கொண்டு பிரிட்டிஷ் ஆட்சியரால் கைதுசெய்யப்பட்டு வீட்டுச்சிறை வைக்கப்பட்டு, உடல்நிலை குன்றி உயிர்நீத்தார் என்பதே வரலாறு. ஆனாலும் நமது கல்வியின் எந்தப் பாடத்திட்டத்திலும் கஸ்தூரிபாய் குறித்து முழுமையாகக் கூறப்படவில்லை. காந்தியின் உயிர்த் தியாகம் உலக அளவில் மிக உயர்வாக மதிக்கப்படுகிற போது கஸ்தூரிபாயின் உயிர்த் தியாகமும் போராட்டமும் குறைந்தவை அல்லவே!
மறைக்கப்படும் வரலாறு
சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் ஆணாதிக்கத்தின் கொடூரப்பிடி இறுக்க மானதாகவே இருந்தது. அதை மீறித்தான் பல்லாயிரக்கணக்கான பெண்கள் விடுதலைப்போரில் ஈடுபட்டுச் சிறை சென்றார்கள். பல சித்ரவதைகளை, இன்னல்களை, துயரங்களைப் பெண் என்ற முறையிலும் கூடுதலாகவே அனுபவித்தார்கள். சென்னையில் நிறுவப்பட்ட நீலன் சிலை அகற்றப்பட வேண்டும் என்ற போராட்டத்தில் ஈடுபட்ட கடலூர் அஞ்சலையம்மாள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அதேநிலையில்தான் அவர் சிறைக்குச் சென்றார். இயற்கையாகவே பெண்களுக்கான இத்தகைய சிரமங்கள் பெண் போராளிகளுக்கும் இருந்தது என்பதைக்கூட வரலாற்றில் காண முடியவில்லை.
ருக்மணி லட்சுமிபதி, அம்புஜத்தம்மாள், சரசுவதி பாண்டுரங்கன், கே.பி. ஜானகியம்மாள், கே.பி.சுந்தராம்பாள், கேப்டன் லட்சுமி, துணை கேப்டன் ஜானகி, சுலைஹா பேகம், கல்பனா தத், கமலாதாஸ், கே.கே.எஸ். காளியம்மாள், கண்ணம்மையார், மதுரை சொர்ணத்தம்மாள், மதுரை பத்மாசணியம்மாள், தில்லையாடி வள்ளியம்மையார், ராசம்மா பூபாலன் இன்னும் பல நூறு பெயர்கள் அடங்கிய பட்டியல் அன்றைய அடிமைத்தனத்தின் விலங்கொடிக்க ஆர்ப்பரித்து எழுந்த வீரப் பெண்களின் அரசியல் பங்கேற்பை உறுதி செய்யும். விடுதலைப் போராட்டங்களில் அகிம்சைவழி, ஆயுத வழி என அனைத்திலும் பெண்கள் இடம்பெற்றிருந்தார்கள்.
அவை மட்டு மின்றி தீண்டாமை, மூடநம்பிக் கைக்கு எதிராகச் சீர்த்திருத்தங்களைத் தாங்கிய போராட்டங்களிலும் பெண்கள் தலைமை வகித்து வழிநடத்தினர். அர்ப்பணிப்பு, வீரம், தியாகம் அனைத்தும் ஆண்களுக்குச் சமமாக அவர்களிடத்தில் நிறைந்திருந்தன. ஆனால், அதற்குரிய சமத்துவத்தையும் முக்கியத்துவத்தையும் இந்திய வரலாறு பெண்களுக்குத் தரவில்லை. ஆகவேதான் அரசியல் என்பது ஆண்களுக்கே சொந்தம் என்ற மாய பிம்பம் வளரந்துவருகிறது. அந்தப் பிம்பச் சிறையில் இருந்து விடுபட்டு, பெண்களின் அரசியல் பங்களிப்பை அங்கீகரிப்போம்.
(முழக்கம் தொடரும்)
கட்டுரையாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
தொடர்புக்கு: balabharathi.ka@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT