Published : 11 Jun 2017 03:00 PM
Last Updated : 11 Jun 2017 03:00 PM
ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுவதும் மே 28-ம் தேதி மாதவிடாய் சுகாதார நாள் அனுசரிக்கப்படுகிறது. ஆரோக்கியமான மாதவிடாய் என்பது 28 நாட்கள் இடைவெளியில் ஐந்து நாட்கள் ரத்தப்போக்குடன் இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தவதற்காக ‘28/5’ என்ற தேதி இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்த வகையில், கடந்த மே 28-ம் தேதி ‘மாதவிடாய் சுகாதார நாள்’ பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகச் சமூக ஊடகங்களில் பல்வேறு வீடியோக்கள் பகிரப்பட்டன.
இந்த வீடியோக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி அமைந்திருந்தன. அதில் ‘அர்ரே’(Arre) என்ற இணையத் தொடர்களை உருவாக்கும் இணையதளம் எடுத்திருந்த வீடியோ சமூக ஊடகங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. ‘தி பேட் - எ பீரியட் டிராமா’ (The Pad - A Period Drama) என்ற தலைப்பில் வெளியான இந்த வீடியோ, பதின்பருவத்தில் இருக்கும் சிறுவர்களுக்கு மாதவிடாய் பற்றியும் நாப்கின்களைப் பற்றியும் விளக்க வேண்டிய தேவையை உணர்த்தியிருக்கிறது.
கிட்டத்தட்ட இரண்டு நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோ, நாப்கின்களைப் பற்றி பதின்பருவத்தினர் என்ன நினைக்கிறார்கள் என்பதை இயல்பாகப் பேசியிருக்கிறது. அவர்களிடம் நாப்கின்களைப் பற்றிப் பேசுவதற்கு தாய்மார்கள் தயங்கக்கூடாது என்பதையும் இந்த வீடியோ நகைச்சுவையுடன் விளக்கியிருக்கிறது.
இந்த வீடியோவில் ஒரு சிறுவன், தன் அம்மா வாங்கிவைத்திருக்கும் நாப்கினை எடுத்துவந்து நண்பர்களுடன் விவாதிக்கிறான். இந்த விவாதத்தைக் கேட்கும் அவனுடைய அம்மாவுக்கு பயங்கர அதிர்ச்சி. நாப்கின்களைப் பற்றி இப்படியொரு தவறான கருத்தை தன் மகன் வைத்திருக்கிறானே என்று அந்தத் தாய் அதை மாற்றுவதற்கு முயல்கிறார். அதுவும் பதின்பருவத்தில் இருக்கும் சிறுவர்களுக்குப் புரியும்படி அதை நகைச்சுவையாகச் செய்கிறார். நாப்கின்கள் என்பது கிசுகிசுக்கப்பட வேண்டிய விஷயமோ வெறுக்கக்கூடிய விஷயமோ இல்லை. அது மாதவிடாயைக் கையாளுவதற்காகப் பெண்களுக்கு இயல்பாகத் தேவைப்படும் பொருள் என்பதை இந்த வீடியோவில் விளக்கியிருக்கிறார்கள். மாதவிடாயை விளக்கி வீடியோவின் கடைசியில் இடம்பெற்றிருக்கும் பாடல் கூடுதல் சிறப்பு. இதுவரை இந்த வீடியோவை ஃபேஸ்புக்கில் 42 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்த்திருக்கிறார்கள். எண்பதாயிரத்துக்கும் அதிகமானவர்கள் இந்த வீடியோவை விரும்பியிருக்கின்றனர்.
பதின்பருவத்தில் இருக்கும் மகன்களுக்கு மாதவிடாயைப் பற்றி எப்படி விளக்குவது என்று யோசித்துக்கொண்டிருக்கிறீர்களா? இந்த வீடியோவைப் பயன்படுத்தி உங்களுடைய மகனுக்கு மாதவிடாயைப் பற்றி எளிமையாக விளக்கலாம்.
வீடியோவைப் பார்க்க: www.youtube.com/watch?v=4fsHBxQbgvs
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT