Published : 28 May 2017 12:28 PM
Last Updated : 28 May 2017 12:28 PM
இந்திய கிரிக்கெட் அணி என்று சொன்னதுமே ஆண்கள் அணி மட்டுமே எல்லோருக்கும் சட்டென நினைவுக்கு வரும். மகளிர் கிரிக்கெட் அணியைப் பெரும்பாலும் யாரும் கண்டுகொள்வதில்லை. ஆனால், தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற நான்கு நாடுகளுக்கு இடையேயான தொடரில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி செய்த சாதனையும் வீராங்கனைகளின் புதிய அவதாரமும் மகளிர் அணியைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கின்றன.
உலக அளவில் முன்னணி
தென்னாப்பிரிக்கா, இந்தியா, அயர்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய நான்கு அணிகள் பங்கேற்ற சர்வதேச மகளிர் கிரிக்கெட் தொடர் தென்னாப்பிரிக்காவில் சமீபத்தில் நடந்தது. கிரிக்கெட் ரசிகர்கள் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மூழ்கிக் கிடக்க, சத்தமே இல்லாமல் இந்தத் தொடரில் கோப்பையை வென்றெடுத்தது மித்தாலி ராஜ் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி.
ஓர் அணி கோப்பை வெல்வதில் என்ன சாதனை இருந்துவிடப் போகிறது என்று நினைக்கலாம். மகளிர் கிரிக்கெட்டில் பல ஆண்டுகளாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள்தான் ஜாம்பவானாக இருந்துவருகின்றன. இந்தத் தொடரில் பெற்ற வெற்றியின் மூலம் இந்த நாடுகளின் பக்கத்தில் வந்துள்ளது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி. மூன்று மாதங்களுக்கு முன்பு உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்பதற்கான தகுதிச் சுற்றுக்கு இந்திய மகளிர் அணி தகுதி பெற்றது. தகுதிச் சுற்றுக்கான எட்டுப் போட்டிகளிலும் வெற்றி பெற்று தன் புதிய முகத்தைக் காட்டியது.
இப்போது நான்கு நாடுகள் பங்கேற்ற போட்டியிலும் வென்றுள்ளது. இந்தத் தொடரில் நடைபெற்ற ஐந்து லீக் ஆட்டங்களில் நான்கு போட்டிகள், இறுதியாட்டம் என ஐந்து ஆட்டங்களில் மகளிர் அணி வெற்றிபெற்று அசத்தியது. அதோடு பெரிய தொடர்களில் அடுத்தடுத்து சாதித்தும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது இந்திய மகளிர் அணி. அடுத்தடுத்த வெற்றியின் மூலம் சர்வதேசத் தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு அடுத்தபடியாக 4-வது இடத்துக்கு மகளிர் கிரிக்கெட் அணி முன்னேறியிருக்கிறது.
இதுவரை ஆண்கள் அணியை மட்டும் ஆராதனை செய்துவந்த இந்திய கிரிக்கெட் வாரியம், சமீபத்திய வெற்றிகளுக்குப் பிறகு தன் கவனத்தை மகளிர் கிரிக்கெட் அணி பக்கம் திருப்பியிருக்கிறது. இந்திய கிரிக்கெட் வாரியம் தங்கள் அணி மீது கவனம் குவித்திருப்பதைத் தக்கவைக்க, உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற தீயை மகளிர் அணியினருக்குள் மூட்டியிருக்கிறது.
“தற்போது இந்திய கிரிக்கெட் வாரியம் எங்கள் மீது கவனம் செலுத்துகிறது. தரவரிசை முறையில் (கிரேடிங் சிஸ்டம்) எங்களையும் இணைத்திருக்கிறது. அதனால் எங்களுக்கு மேலும் ஊக்கம் கிடைத்துள்ளது. அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் உலகக் கோப்பைப் போட்டியில் கோப்பையை வெல்வதே எங்கள் தற்போதைய லட்சியம்” என்கிறார் இந்தத் தொடரில் ரன் வேட்டை நடத்திய பூனம் ராவத்.
உயரப் பறக்கும் வெற்றிக்கொடி
தென்னாப்பிரிக்க வெற்றியின் மூலம் இந்திய வீராங்கனைகள் புதிய சாதனைக்குச் சொந்தக் காரர்களாக ஆகியிருக்கிறார்கள். அயலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்தியாவின் பூனம் ராவத்தும், தீப்தி சர்மாவும் இணைந்து ரன் மெஷினாக மாறினார்கள். 19 வயதான தீப்தி 188 ரன்களையும், பூனம் 109 ரன்களையும் குவித்து அசத்தினர். இருவரும் இணைந்து 320 ரன்களைக் குவித்தனர். சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இது. அதுபோல தீப்தி குவித்த 188 ரன் இந்திய வீராங்கனை ஒருவரின் அதிகபட்ச ரன்னாகவும் பதிவானது. சர்வதேச அளவில் தனிநபரின் இரண்டாவது அதிகபட்ச ரன்னும் இதுதான். இந்தத் தொடரில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிகபட்ச விக்கெட் வீழ்த்தியவர் என்ற பெருமையைப் பெற்றார் ஜுலான் கோஸ்வாமி.
மகளிர் அணியின் தலைவராக நீண்ட நாட்களாக இருந்துவரும் மித்தாலி ராஜ், தனது தலைமைக்குப் புதிய பெருமையைத் தேடிக்கொண்டிருக்கிறார். தென்னாப்பிரிக்காவுடனான இறுதியாட்டம் மித்தாலி ராஜ் கேப்டனாக பங்கேற்கும் 100-வது போட்டியாக அமைந்தது. மகளிர் அணியில் 100 ஒரு நாள் போட்டிகளுக்குக் கேப்டனாக இருந்தவர் என்ற சாதனையை மித்தாலி ராஜ் இதன் மூலம் படைத்தார். அதோடு இந்திய அணிக்கு ஒட்டுமொத்தமாக 61 சதவீத வெற்றியைப் பெற்றுக்கொடுத்த சாதனைக்கும் மித்தாலி ராஜ் சொந்தக்காரராகிவிட்டார். ஆண்கள் அணியின் வெற்றிகரமான கேப்டனாகத் திகழ்ந்த தோனிகூட 60 சதவீத வெற்றியைத்தான் கொடுத்திருக்கிறார். அவரையும் தாண்டி வெற்றிகரமான கேப்டனாக மித்தாலி ராஜ் வெற்றிக் கொடியை உயரப் பறக்கவிட்டிருக்கிறார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியும் வீராங்கனைகளும் சர்வதேச அளவில் இத்தனை சாதனைகளை ஒருசேர படைத்துக் கொண்டிருக்க கிரிக்கெட் ரசிகர்களோ ஐபிஎல்-ல் மூழ்கிக் கிடந்தது பெரும் வியப்பைத் தருகிறது. கிரிக்கெட்டை ஆராதிக்கும் ஒரு நாட்டில் பாலின பாகுபாட்டுடன் அணிகளைப் போற்றுவதும் பெரும் சோகமே. அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் மகளிர் உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரிலாவது தங்கள் ஆதரவை மகளிர் அணிக்குத் தருவது உண்மையான கிரிக்கெட் ரசிகர்களின் தார்மீகக் கடமையல்லவா?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT