Published : 05 Oct 2014 02:14 PM
Last Updated : 05 Oct 2014 02:14 PM
1500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த புத்தர் சிலையை தாலிபான்கள் குண்டுகளால் சிதைத்த ஒரு நாட்டில் இருந்து, ஓவியத்தின் மூலம் அமைதியை உருவாக்கப் புறப்பட்டிருக்கிறார் ஷம்சியா ஹஸானி.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் வீதிகளில் குண்டுகளால் துளைக்கப்பட்ட சுவர்கள், கட்டிடங்களைப் பார்க்கலாம். கொடூரமிக்க போரின் முகத்தை நினைவுபடுத்திக் கொண்டிருக்கும் இந்தச் சுவர்கள், ஷம்சியாவின் கைவண்ணத்தில் இப்போது அழகான, வண்ணம் மிக்க ஓவியங்களைச் சுமந்து நிற்கின்றன.
ஈரானில் பிறந்து வளர்ந்த ஷம்சியா, 8 ஆண்டுகளுக்கு முன்பு தாய்நாட்டுக்குத் திரும்பினார். கலை, கலாச்சாரம் மிகுந்த தன் நாடு போர்களால் உருக்குலைந்து போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மோசமான போர்களின் நினைவுகளை மக்கள் மனத்தில் இருந்து அகற்றுவதற்காக, சுவர்களில் ஓவியங்கள் தீட்ட ஆரம்பித்தார்.
“தெருக்களில் பெண்கள் ஓவியம் வரைவது எங்கள் நாட்டில் அத்தனை சுலபமில்லை. ஆரம்பத்தில் சின்ன சந்துகள், வீட்டுச் சுவர்களில் வரைய ஆரம்பித்தேன். பிறகுதான் கொஞ்சம் தைரியம் வந்து தெருக்களில் வரைந்தேன். எதிர்ப்பு வந்தது. பெண்கள் தெருக்களில் இதுபோன்ற காரியங்களில் ஈடுபடக் கூடாது என்றார்கள். ‘சுவர்களை ஏன் அழுக்காக்குகிறாய்?’ என்ற கேள்வியைக் கேட்டு அதிர்ந்து போனேன். வெகு சிலரே என்னை உற்சாகப்படுத்தினார்கள். நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான், என் ஓவியங்கள் மூலம் அமைதியை நிலைநாட்ட விரும்புகிறேன். 2011-ம் ஆண்டு ஆரம்பித்த இந்தப் பயணம் இன்று 3டி ஓவியங்கள் வரை வந்திருக்கிறது’’ என்கிறார் ஷம்சியா.
பெரும்பாலான ஓவியங்களில் புர்கா அணிந்த பெண்களும் ஆப்கானிஸ்தான் கட்டிடங்களும் இடம்பெற்றுள்ளன. நீல நிறம் சுதந்திரத்தைக் குறிப்பதாகக் கருதுவதால், நீலத்துக்கே பிரதான இடத்தை அளித்திருக்கிறார் ஷம்சியா.
“தாலிபான்களும் பழைமைவாதிகளும் பெண்களுக்கு விதித்திருந்த சட்டதிட்டங்கள் மிகவும் மோசமானவை. பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. பெண்களுக்குக் கல்வி அளிக்கக்கூடாது என்றெல்லாம் சட்டம் இருந்தது. இன்று அந்தச் சட்டத்தில் மாற்றம் வந்திருந்தாலும் நடைமுறையில் பெண்கள் மிகவும் பின்தங்கியே இருக்கிறார்கள். பெண்களை வீட்டை விட்டு வெளியே வர வைக்கவே பெண்களைப் பிரதானமாக என் ஓவியங்களில் கொண்டுவருகிறேன்’’ என்கிறார் ஷம்சியா.
சுதந்திரம் பற்றிப் பேசும் நீங்கள் புர்கா அணிந்திருக்கிறீர்களே என்ற கேள்வியை அவரிடம் கேட்காதவர்களே கிடையாது.
“உலகம் முழுவதும் புர்கா அணிவதை ஒரு பிரச்சினையாக நினைக்கிறார்கள். புர்கா என்பது சிறை அல்ல. புர்காவால் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. புர்கா அணிவதால் ஏற்படும் பிரச்சினைகளைவிடப் பெண்களுக்குக் கல்வி கிடைக்காததால் ஏற்படும் பிரச்சினைகளே அதிகம். வீட்டிலும் வெளியிலும் பெண்களுக்கு உரிமையும் சுதந்திரமும் கிடைக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். என்னைப் பொறுத்தவரை சுதந்திரம் என்பது புர்காவை நீக்குவதில் இல்லை, அமைதியை நிலைநாட்டுவதிலேயே இருக்கிறது” என்று பதில் சொல்கிறார் ஷம்சியா.
26 வயது பெண்ணின் தொலைநோக்குப் பார்வையும் தெளிவான சிந்தனைகளும் தைரியமும் அசரவைக்கின்றன. ஷம்சியா ஓவியர் மட்டுமல்ல, ஆசிரியராகவும் இருக்கிறார். காபூல் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். ஓவியங்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்துகிறார். ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று கண்காட்சிகள் நடத்துகிறார். போட்டிகளில் கலந்துகொள்கிறார்.
ஓவியங்கள் தீட்டி, கூடங்களில் வைப்பதைவிட இதுபோன்ற சுவர் ஓவியங்கள் வரைவதில்தான் தனக்குத் திருப்தி இருக்கிறது என்பவர், அதற்கான காரணத்தையும் சொல்கிறார்.
“வெகு சிலர்தான் கேலரிகளில் இருக்கும் ஓவியங்களை ரசிக்க முடியும். அதுவும் ஒருவருக்கு ஓவியத்தில் ஆர்வம் இருந்தால்தான் பார்க்கவே வருவார். ஆனால் என் சுவர் ஓவியத்துக்கு எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லை. எந்த நேரம் வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் பார்க்கலாம்.
ஆப்கானிஸ்தான் இப்போது புதிதாகப் பிறந்திருக்கும் ஒரு குழந்தை. பல விஷயங்களில் ஆப்கானிஸ்தான் நல்ல விதத்தில் மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. போர்களால் சோர்வடைந்த மக்கள், சுதந்திரமான வாழ்க்கை வாழ விரும்புகிறார்கள். ஆப்கானிஸ்தானில் 80 சதவீதம் பேர் எதிர்மறைக் கருத்துகள் கொண்டவர்கள். மீதி இருக்கும் 20 சதவீதம் பேருக்கு என்னுடைய ஓவியங்கள் நல்ல சிந்தனையை உருவாக்கும். இந்த நல்ல சிந்தனை யாளர்களால்தான் இருட்டில் இருக்கும் 80 சதவீதம் பேர் வெளிச்சம் பெறப் போகிறார்கள்’’
ஓவியங்களையே அமைதிக்கான ஆயுதமாகப் பயன்படுத்தும் ஷம்சியாவின் போராட்டம் வெற்றி பெறும் நாள் வெகு தொலைவில் இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT