Last Updated : 14 Aug, 2016 04:08 PM

 

Published : 14 Aug 2016 04:08 PM
Last Updated : 14 Aug 2016 04:08 PM

நான் ஒரு பெண்ணியவாதி! - ஒபாமா

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தன்னுடைய ஐம்பத்தைந்தாவது பிறந்தநாளை முன்னிட்டு ‘கிளாமர்’ பத்திரிகையில் பெண்ணியம் தொடர்பான ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரையில் தன்னையொரு பெண்ணியவாதி என்று சொல்லியிருக்கிறார். அத்துடன், உலகில் நிலவும் பாலின ஏற்றத்தாழ்வுகளைக் களைவதற்கு ஒருங்கிணைந்த முயற்சி தேவை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

“இது பெண்ணாக இருப்பதற்கான அபாரமான நேரம். கடந்த நூறு, ஐம்பது ஆண்டுகள், ஏன் கடந்த எட்டு ஆண்டுகளில் அடைந்திருக்கும் முன்னேற்றம்கூட என்னுடைய பாட்டிகளுடைய வாழ்க்கையைவிட என் பெண்களுடைய வாழ்க்கையைச் சிறப்பானதான மாற்றியிருக்கிறது. இதை ஒரு நாட்டின் அதிபராக மட்டும் சொல்லவில்லை. ஒரு பெண்ணியவாதியாகச் சொல்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

இதுவரை பெண்கள் கடந்துவந்திருக்கும் பாதையைக் குறைத்து மதிப்பிடமுடியாது என்று சொல்லும் அவர், “உலகம் முழுவதும் இருக்கும் பெண்களின் நிலைமையை உயர்த்துவதற்கு நாம் செய்ய வேண்டிய பணிகள் இன்னும் நிறைய இருக்கின்றன. சமத்துவமான ஊதியம், குழந்தைபெற்றுக்கொள்ளும் உரிமை போன்ற நல்ல கொள்கைகளை உருவாக்குவதில் தொடர்ந்து நான் பணியாற்றுவேன். ஆனால், இந்தச் சட்டங்களை நிறைவேற்றுவது மட்டுமல்லாமல் நாம் செய்ய வேண்டிய சில மாற்றங்கள் இருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால், அந்த முக்கியமான மாற்றம்தான் இருப்பதிலேயே கடினமானது. அது என்னவென்றால் நம்மை நாமே மாற்றிக்கொள்வது” என்று தெரிவித்திருக்கிறார்.

தன்னுடைய வாழ்க்கையில் பெண்கள் எவ்வளவு முக்கியமான பங்கு வகித்திருக்கிறார்கள் என்றும், அவர்கள் எப்படித் தனக்கான ஒரு பெண்ணியத்தை உருவாக்க உதவினார்கள் என்றும் ஒபாமா இந்தக் கட்டுரையில் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

“என்னுடைய வாழ்க்கையின் முக்கியமான நபர்கள் எல்லாமே எப்போதும் பெண்களாகவே இருந்திருக்கிறார்கள். என்னை என் அம்மா தனியொரு மனுஷியாக இருந்து வளர்த்து ஆளாக்கினார். அவர் அவருடைய பணிவாழ்க்கையின் பெரும்பகுதியை வளரும் நாடுகளில் இருக்கும் பெண்களின் மேம்பாட்டுக்காகவே செலவழித்தார். என்னுடைய பாட்டி என்னை வளர்ப்பதற்கு உதவியதை நான் பார்த்திருக்கிறேன். மிஷெல் தன் பரபரப்பான பணி வாழ்க்கை, குடும்பம் என இரண்டையும் எப்படிச் சமநிலையோடு சமாளித்தார் என்பதைப் பார்த்திருக்கிறேன். பணிக்குச் செல்லும் பல அம்மாக்களைப் போல, அவரும் சமூகத்தின் எதிர்பார்ப்புகளைப் பற்றியும் முன்முடிவுகளையும் கவலைப்பட்டிருக்கிறார். அத்துடன், எங்களுடைய குழந்தைகள் வளரும்போது நான் வீட்டைவிட்டுத் தொலைவில் இருந்தேன். என்னுடைய மாநில சட்டமன்றத்தில் பணியாற்றிக்கொண்டே சட்டப் பேராசிரியர் பணியையும் பார்த்துக் கொண்டிருந்தேன். இப்போது திரும்பிப்பார்க்கும்போது, நான் என் மனைவிக்கு உதவி செய்ததெல்லாம் என்னுடைய வரையறைகளின் அடிப்படையில்தான் என்பது தெரிகிறது. நியாயமற்ற, சமமற்ற முறையில் குடும்பச் சுமைகள் மிஷெல்மீது விழுந்தன.

அதனால், எனக்குப் பெண்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான சவால்கள் தெரியும் என்று நினைக்கிறேன். அதுதான் என்னுடைய பெண்ணியத்தை உருவாக்கியது. ஆனால், அது மட்டுமே காரணம் கிடையாது. நீங்கள் இரண்டு பெண்களுக்கு அப்பாவாக இருக்கும்போது சமூகத்தில் நிலவும் பாலின ஏற்றத்தாழ்வுகளை இன்னும் கூடுதலாகத் தெரிந்துகொள்ள முடியும். கலாச்சாரத்தின் வழியாகச் சமூகத்தில் பரவும் நுட்பமான, நுட்பமற்ற விஷயங்களை உங்களால் பார்க்க முடியும். ஒரு குறிப்பிட்ட வழியில் சிந்திக்கவும், நடக்கவும் பெண்களுக்குக் கொடுக்கப்படும் பெரும் அழுத்தத்தை உணர முடியும்.

இந்தக் குறைபாடுகளையெல்லாம் உடைக்க வேண்டும். மகள்களை அடக்கத்துடன் வளர்க்க வேண்டும், மகன்களை உறுதியானவர்களாக வளர்க்க வேண்டும் என்ற மனப்பான்மையை மாற்ற வேண்டும். மகள்கள் வெளிப்படையாகப் பேசுவதற்காகவும் மகன்கள் கண்ணீர் சிந்துவதற்காகவும் விமர்சிக்கப்படுவது மாற வேண்டும். பெண்கள் அவர்களுடைய பாலினத்துக்காகத் தண்டிக்கப்படுவதையும், ஆண்கள் அவர்களுடைய பாலினத்துக்காக மதிக்கப்படுவதையும் உடைக்க வேண்டும். பெண்களின் வெற்றியாலும், இருப்பாலும் ஆண்கள் அச்சுறத்தலை உணர வேண்டும் என்பது போன்ற போதனைகளை உடைக்க வேண்டும்”.

ஒபாமாவின் இந்தக் கட்டுரைக்குப் பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்துவருகின்றன. ஆனால், ஒரு சிலர் கனடாவின் பிரதமர் ஐஸ்டின் ட்ருடியூ தன்னை ஒரு பெண்ணியவாதியாகத் தொடர்ந்து அடையாளப்படுத்திக்கொள்வதும், தன்னுடைய அமைச்சரவையில் சரிபாதி பெண்களை நியமித்ததும்தான் ஒபாமாவின் இந்தக் கட்டுரைக்குக் காரணம் என்று தெரிவித்திருக்கின்றனர். இப்படி உலகத் தலைவர்கள் பெண்ணியவாதிகள் என்று தங்களை அறிவித்துக்கொள்வதும், பெண்களின் சமஉரிமைகளுக்காகக் குரல்கொடுப்பதும் பொது வெளியில் ஆரோக்கியமான சலனங்களை ஏற்படுத்தும் என நம்பலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x