Published : 17 Nov 2013 02:44 PM
Last Updated : 17 Nov 2013 02:44 PM
கடலில் கால் நனைப்பதற்கே சிலர் அச்சப்படுபடுவார்கள். ஆனால் பாய்மரப் படகை எடுத்துக்கொண்டு உலகைத் தனியாக வலம் வந்து அசத்திக்கொண்டிருக்கிறார்கள் வர்ஷாவும் ஐஸ்வர்யாவும். ஏரளாமான மெடல்களையும், பதக்கங்களையும் வென்றுள்ள இவர்கள் இருவரும் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற சர்வதேச பாய்மரப் படகுப் போட்டியில் பெண்கள் பிரிவில் இரண்டாமிடத்தைப் பெற்று இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்துள்ளனர்.
சென்னை நேஷனல் பப்ளிக் ஸ்கூலில் 11ஆம் வகுப்பு படிக்கும் வர்ஷாவும், எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் ஐஸ்வர்யாவும் பாய் மரப் படகைப் பற்றி பேசத்துவங்கினால் நேரம் போவதே தெரியவில்லை.
‘’எட்டு வயசிலேயே பாய்மரப் படகு மேலே ஆசை வந்துடுச்சு’’ என்று கடலோடும் பாய்மரப் படகோடும் தனக்கு ஏற்பட்ட நெருக்கத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தார் வர்ஷா. ‘‘தமிழ்நாடு பாய்மரப் படகு சங்க உறுப்பினரா இருந்த சாந்தா மேடத்தின் உதவியுடன் கடலில் இறங்கிப் பயிற்சிசெய்ய ஆரம்பிச்சேன். தொடர்ந்து 12 வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டிகளில் கலந்துகொண்டேன். சென்னை, மும்பை நகரங்களில் 2006ஆம் ஆண்டு நடைபெற்ற 14 வயதுக்குட்பட்டோருக்கான தேசியப் போட்டிகளில் பங்கேற்றபோது பதக்கங்கள் வென்றேன்’’ என கடலில் எழும் அலைபோல ஆர்ப்பரித்து பேசுகிறார் வர்ஷா.
''என் அக்கா அஸ்வினி, கடல் பற்றிய படிப்பான 'ஓஷனோகிராஃபி’ படிக்க ஆசைப்பட்டு, சம்மர் கோர்ஸ் போனாங்க. ஆறாவது படிச்சிட்டிருந்த நானும் அவங்க கூட சும்மா போனதுதான் கடல் மீது காதல் பிறக்க காரணம்” என்று தன் தனனைப் பற்றிய அறிமுகத்தைக் கொடுத்தார் ஐஸ்வர்யா. ‘‘அதன்பிறகு பாய்மரப் படகு பயிற்சியில் ஆர்வம் பத்திக்கிச்சு. சென்னை துறைமுகத்துல இருக்கற ‘தமிழ்நாடு செய்லிங் அசோஸியேஷன்’ல சேர்ந்து 5 ஆண்டுகள் பாய்மரப் படகு போட்டிக்காகப் பயிற்சி எடுத்துக்கிட்டேன்’’ என்று உற்சாகத்துடன் சொல்கிறார் ஐஸ்வர்யா.
தமிழ்நாடு பாய்மரப் படகு சங்கம் சார்பில் பயிற்சி எடுத்துக்கொண்டபோது வர்ஷாவும் ஐஸ்வர்யாவும் நெருங்கிய தோழிகளானார்கள். தற்போது இருவரும் இணைந்து பாயமரப் படகுப் போட்டிகளில் பங்கேற்கிறார்கள். வர்ஷா படகை செலுத்துபவராகவும், ஐஸ்வர்யா படகை இயக்க, சமநிலை ஏற்படுத்துபவராகவும் சாதித்து வருகிறார்கள்.
‘’ஐரோப்பாவில் உள்ள 7 வெவ்வேறு நாடுகளில் நவம்பர் முதல் வாரத்தில் பாயமரப் படகு போட்டி நடைபெற்றது. இதில் வெள்ளிப்பதக்கம் வென்றோம். இந்தியா சார்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் ஜோடி நாங்கதான்னு நினைக்கும் போது பெருமையா இருக்கு’’ என்று இருவரும் உற்சாகம் கொப்பளிக்கப் பேசுகிறார்கள்.
சரி, அடுத்த இலக்கு என்ன? என்ற கேள்வியை முடிப்பதற்குள் பதில் சொல்கிறார் வர்ஷா. ‘‘ இப்போது ஆஸ்திரேலியாவில் இருந்து பெரிய பாய்மரப் படகை வரவழைத்துள்ளோம். தினமும் நானும் ஐஸ்வர்யாவும் நான்கரை மணி நேரம் பயிற்சி எடுக்கிறோம். இந்தப் பயிற்சி எங்களுக்கு மிகப்பெரிய சவால். சர்வதேசப் போட்டிகளில் இந்தப் பெரிய படகைதான் பயன்படுத்தணும். ஆனால், தேசிய அளவிலானப் போட்டியில் சிறிய பாய்மரப்படகைப் பயன்படுத்த வேண்டும். இரண்டுக்கும் பயிற்சி எடுக்கிறோம். 2016-ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெறும் பாய்மரப் படகுப் போட்டிக்குத் தகுதிபெற வேண்டும். இதுதான் எங்கள் லட்சியம், இலக்கு எல்லாமே’’ - கட்டை விரலை உயர்த்தியபடி உற்சாகமானார்கள் தோழிகள் இருவரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT