Last Updated : 26 Jan, 2014 11:50 AM

 

Published : 26 Jan 2014 11:50 AM
Last Updated : 26 Jan 2014 11:50 AM

அன்பு மகள்களே...

ஜனவரி 24ஆம் தேதி, தேசிய பெண் குழந்தை தினமாக கொண்டாடப்படுகிறது.

தேசிய பெண் குழந்தை தினத்தை முன்னிட்டு இந்தியத் தபால் துறையினர் பிரத்யேக சேமிப்புத் திட்டம் ஒன்றைத் தொடங்கியுள்ளனர். இத்திட்டத்தில் 10 வயது முதல் 20 வயது வரையிலான பெண் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் சேமிப்புக் கணக்கைத் தொடங்கலாம். அத்துடன் தொடர் வைப்புநிதியாகவும், மாத வருவாய் திட்டமாகவும், வைப்பு நிதியாகவும் சேமிக்கும் வழிமுறைகளையும் அறிமுகம் செய்துள்ளது. தேசிய சேமிப்புச் சான்றிதழையும் இத்திட்டத்தின் கீழ் பெற்றோர்கள் தங்கள் மகள்களுக்கு வாங்கலாம்.

தேசிய பெண் குழந்தை வாரத்தில் (ஜனவரி 24 முதல் 30 வரை) பெற்றோர்கள் தங்கள் மகள்களுக்குச் சேமிப்புக் கணக்கைத் தொடங்கினால் சிறப்புப் பரிசுகளும் உண்டு. தொடர் வைப்புநிதியில் குறைந்தபட்சம் 10 ரூபாயிலிருந்து சேமிக்கத் தொடங்கலாம். சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்சம் 50 ரூபாய். மாதச் சம்பள சேமிப்புத் திட்டத்தில் 5 ஆயிரம் தொடங்கி 6 லட்சம் வரை சேமிக்கலாம்.

இத்திட்டத்தின் நோக்கம் பள்ளிக்குப் போகும் ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் ஒரு சேமிப்புக் கணக்கு இருக்க வேண்டும் என்பதுதான். இத்திட்டத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள அருகில் உள்ள தபால் நிலையத்தைத் தொடர்புகொள்ளலாம்.

நமது பெண்குழந்தையைக் காப்போம்

சேக்ரிபைஸ் ப்ரெண்ட்ஸ் கிளப் தொண்டு நிறுவனத்தை நடத்திவரும் பி.என். லட்சுமணன் ‘சேவ் அவர் சைல்ட்’ என்ற பெயரில் சேமிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அவர் அறிமுகப்படுத்திய இத்திட்டத்தின் மூலம் தேனி, கம்பம், சேலம், ஈரோடு முதலிய பகுதிகளைச் சேர்ந்த 75 பெண்குழந்தைகள் பயன் அடைந்துள்ளனர்.

மூன்று பெண்குழந்தைகள் உள்ள குடும்பங்களை அடையாளம் கண்டு, ஒவ்வொரு பெண்ணுக்கும் 18 ஆயிரம் ரூபாயை சேமிக்கச் செய்துள்ளார். அவர்களுக்கு 18 வயதாகும்போது, ஒவ்வொருவருக்கும் 2 லட்ச ரூபாய் கிடைக்கும். பெண்சிசுக் கொலையைத் தடுப்பதற்கு இத்திட்டம் உதவிகரமாக இருப்பதாக அவர் கூறுகிறார். தொடர்புகொள்ள: 84895-84895

பள்ளிக்குச் செல்லுங்கள்

மாநில அரசு, பெண் குழந்தைகளுக்குப் பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. எல்லாப் பெண் குழந்தைகளும் கல்விபெறும் வகையில் இத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடிக் குழந்தைகளுக்கு மூன்றாம் வகுப்பிலிருந்து 8ஆம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு 500 ரூபாய் முதல் ஆயிரத்து 500 ரூபாய் வரை உதவித்தொகை அளிக்கப்படுகிறது.

இத்துடன் தாழ்த்தப்பட்ட, பழங்குடி, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவிகளுக்கும் ஊக்கத்தொகைகள் வழங்கப்படுகின்றன. நிறைய தனியார் கல்விநிலையங்கள் மற்றும் அறக்கட்டளைகளும் பெண் குழந்தைக் கல்விக்கு பல ஊக்கத்தொகை திட்டங்களை வைத்துள்ளன.

வங்கிகளும் கல்விக் கடன்களை மாணவிகளுக்கு முன்னுரிமை தந்து வழங்குகின்றன. கனரா வங்கி, கனரா வித்யா ஜோதி என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்ட/ பழங்குடி மாணவிகளுக்கு 5ஆம் வகுப்பு முதல் 7ஆம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாயும், எட்டிலிருந்து 10ஆம் வகுப்பு வரை உள்ளவர்களுக்கு 5000 ரூபாயும் வருடத்துக்கு அளிக்கப்படுகிறது.

சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம்

பள்ளிகளில் போதிய கழிப்பறை வசதிகள் இல்லாத நிலையால் பருவம் அடைந்த பிறகு பள்ளிக்கல்வியை நிறுத்தும் நிலை மாணவிகளிடையே அதிகம் உள்ளது. கழிப்பறைகள் மோசமாகப் பராமரிக்கப்படுவதால் இனப்பெருக்க உறுப்பிலும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த நிலையை மாற்றுவதற்காக பல்வேறு சுய உதவிக்குழுக்கள் பணியாற்றி வருகின்றன.

இதற்காகக் குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின்களைத் தயாரிக்கும் எந்திரம் ஒன்றையும் ஜெயஸ்ரீ இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தினர் தயாரித்து வினியோகிக்கின்றனர். இந்நிறுவனத்தைச் சேர்ந்த முருகானந்தம், “வயதில் மூத்த பெண்கள், ஒவ்வொரு வீடாகச் சென்று சுத்தம் மற்றும் சுகாதாரத்தின் அவசியம் குறித்து வலியுறுத்தினால், அது எல்லாரிடமும் நல்ல தாக்கத்தைப் பெறும்” என்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x