Last Updated : 28 Aug, 2016 03:34 PM

 

Published : 28 Aug 2016 03:34 PM
Last Updated : 28 Aug 2016 03:34 PM

எங்க ஊரு வாசம்: மஞ்சள் பூத்த முகத்தில் குங்குமத்தின் சிவப்பு!

மொத்தக் கிராமமும் கல்யாண வேலைகளில் பரபரப்பாக இருந்தது. வீடு முழுக்கக் கல்யாணச் சாமான்கள் இறைந்து கிடக்க, ஏழு முழுக்குக்காக வளர்த்த சேவல்களும் கோழிகளும் கொக்கரித்தவாறு வீட்டுக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்தன. அவற்றின் இடைஞ்சலைப் பொறுக்க முடியாத அலையக்கா, “இருங்கடி, தாலி கட்டி ஏழு முழுக்கு வரட்டும். உங்க ஆட்டமெல்லாம் அடங்கிடும்” என்று கடுகடுத்தாள்.

கல்யாணத்தன்று விடியற்காலையிலேயே நாவிதர் வந்து மாப்பிள்ளைகளுக்குத் தாடி வழித்து, மீசையைத் திருத்தி அழகுபடுத்தினார். கல்யாணத்தன்று மாப்பிள்ளை காதில் நாதாங்கி கடுக்கன் போட வேண்டும். அதற்காக ஆசாரி வந்து மரத்தடியில் உட்கார்ந்திருக்க, இந்த மாப்பிள்ளைகளுக்கு வயிற்றைக் கலக்கியது.

மாப்பிள்ளை பயம்!

பிறந்து ஒரு வருசம், இரண்டு வருசத்தில் குத்திய காது இப்போது தூர்ந்துபோயிருக்கும். அந்த ஓட்டைக்குள் மீண்டும் கடுக்கனைப் போட்டால் என்ன வலி வலிக்கும்! அதனால்தான் மாப்பிள்ளைகள் ஆசாரியைப் பார்த்துப் பயத்தோடு நடந்தார்கள். கொல்லைப்புறத்தில் ஐந்தாறு பெண்கள் காய்கறிகளை நறுக்கி நறுக்கி ஓலைப்பாயில் போட, மற்ற பெண்கள் கல் அடுப்புகளைக் கூட்டி உலை ஏற்ற இளவட்டங்களைக் கூப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.

பொழுது மலைவாயிலில் விழுந்து தன்னை ஒளித்துக்கொள்ளத் தயாராக இருக்க, இரண்டு மூன்று பெண்கள் ‘மணவறை பொங்கல்’ வைக்க அரிசியை எடுத்தார்கள். அரசாத்தா புது அடுப்பில் சந்தனம், குங்குமம் வைத்து உலை ஏற்ற, வீரி வாய்க்குள் ஒரு வாத்தியமாகக் குலவை போட்டாள். இருட்டுவதற்கு முன் இந்த மணவறைப் பொங்கலை வைத்துவிட வேண்டும்.

கூரை முழுக்கப் பிச்சிப்பூ வாசம்

புதுப் பெண்ணுக்கு உடலெங்கும் மஞ்சள் பூசித் தலைகுளிப்பதற்கு நான்கு பெண்கள் தயாராக்கியபோது இடுப்புவரை சேலை கட்டியிருந்த பூங்கோதை நாணம் கொண்டு துவண்டாள். எப்போதும் மணப்பெண்ணுக்குப் புதுச்சேலை கட்டுவதில்லை. நாத்தனாரின் சேலையைத்தான் கட்டுவார்கள். இவர்கள் சந்தையிலிருந்து எடுத்துவந்த வண்ணாத்திப்பூச்சி சேலையை மூன்று மாதம் கழித்து வைக்கும் மறுவீடு அன்றுதான் கட்ட வேண்டும். இதனால் தன் சேலையோடு பூ, பழம், மஞ்சள், குங்குமம், தாலி என்று எல்லாவற்றையும் போளைப் பெட்டிக்குள் ஞாபகமாக அடுக்கிவைத்தாள் ராசாத்தி. இந்த மாதிரிக் கல்யாணங்களில் நாத்தனாருக்குத்தான் முதலிடம் என்பதால் அருணாச்சலம் தங்கையான மீனாட்சியின் முகத்தில் பெருமையும் இறுமாப்பும் கூடியிருந்தன.

போளைப் பெட்டியைச் சுமந்துகொண்டு வந்தவள் பூங்கோதையைச் சோடிக்க ஆரம்பித்தாள். முதலில் இருகை கொள்ளாத தலைமுடியைச் சிணுக்கோரி கொண்டு சிக்கெடுத்து புது மரச்சீப்பால் தலை சீவி, இடது பக்கம் கொஞ்சம் சாய்வாகப் பெரிய கொண்டையாகப் போட்டாள். அந்தக் கொண்டையில் சற்று முன் ஊர் பண்டாரம் கொண்டுவந்து கொடுத்த பிச்சிப்பூவையும் மரிக்கொழுந்தையும் செருகியதில் அந்தச் சிறிய கூரை வீடு வாசம்கொண்டு வீசியது.

பிறகு அரிசிக்கொசுவம் வைத்த பன்னிரண்டு முழச் சேலையைக் கட்டிவிட்டாள். காதில் ஓசி வாங்கிய தண்டட்டி, முடிச்சு, பாம்படம், மேலடுக்கு, பூடி, கிராம்முடி என்று பூங்கோதையின் இரண்டு காதுகளையும் தங்கச் சின்னங்கள் மூடின. கழுத்தில் காரை, சவடி என்று சேலை மடிப்பில் விழுந்து மணமகளின் அழகைக் கூட்டின. முழங்கை வரையிலும் ராதா, ருக்மணி வளையல் ஏறியிருந்தது. காலில் கட்டைவிரல் மட்டும் கணவன் போடும் ‘மிஞ்சி’க்காக (மெட்டி) காத்திருக்கும். மற்ற விரல்களில் மைலடி, பீடியோடு காலில் மயில் சலங்கையிட்ட கொலுசும், தண்டையும் ஒன்று சேர்ந்ததில் சிணுக்கமிட்டுக் கொஞ்சின. கைவிரல்களில் அன்னப் பட்சியும் பறவையுமாக ஈய மோதிரங்கள். மஞ்சள் பூத்திருந்த முகத்தில் சிவந்த குங்குமத்தின் சிவப்புக்குப் போட்டியாக உதட்டில் வெற்றிலையின் சிவப்பு. கன்னத்தில் சந்தனத்தின் தீற்றல்.

கம்பீர அழகு

அந்தப் பக்கம் புளியமரத்தின் மறைவில் அருணாச்சலம் நின்றிருக்க, அவனைச் சுற்றிலும் அவனது சேக்காளிகள் பத்துப் பேர் நின்றிருந்தார்கள். ஒருவன் அவனுக்குப் பட்டுக்கரை வேட்டியை உடுத்திவிட, இன்னொருவன் அவன் மார்பிலும் கைகளிலும் சந்தனத்தைப் பூசினான். ஒருவன் நாமக்கட்டியையும் குங்குமத்தையும் குழைத்து நெற்றியில் பாதம் வைத்த நாமமிட்டான். விளக்கெண்ணெயின் தேய்ப்பில் அவன் மீசை முறுக்கேறியிருந்தது. கொத்தாய் அடர்ந்திருந்த தலைமுடியைச் சீவி, சிறிய சுங்கம் வைத்துக் கொண்டைப் போட்டிருந்தான். ஆனாலும் அவன் முகத்தில் கல்யாண மகிழ்ச்சியையும் மீறிக் காலையில் ஆசாரி காது குத்திக் கடுக்கன் போட்டதன் வேதனை தெரிந்தது. ஆனாலும் தோளில் ஈய வங்கியும், ஈக்கிக் கரை துண்டுமாக வெற்று மார்புடன் கம்பீரமாக இருந்தான்.

கட்டுரையாளர், எழுத்தாளர். தொடர்புக்கு: arunskr@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x