Last Updated : 21 Aug, 2016 01:54 PM

 

Published : 21 Aug 2016 01:54 PM
Last Updated : 21 Aug 2016 01:54 PM

அச்சத்தில் இருந்து விடுதலை!

நம் நாட்டில் ஒவ்வொரு நாளும் 99 பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகிறார்கள் என்ற புள்ளிவிவரம் 70-வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களைக் கேள்விக்குறியாக்குகிறது. பலாத்காரம் செய்யப்பட்ட பெண்கள் மீண்டும் மீண்டும் சிதைக்கப்படுவது கொடுமையின் உச்சம். வார்த்தைகளால், விமர்சனங்களால் ரணமாக்கப்பட்டு மீண்டெழ முடியாமல் தவிக்கும் பெண்கள் இங்கு அதிகம்.

உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நசுக்கப்பட்ட பெண்களுக்கு அச்சம் என்பது மடமை என உணர்த்த முற்பட்டிருக்கிறது Freedom from Fear (அச்சத்திலிருந்து விடுதலை) என்ற குறும்படம்.

போதினி என்ற தொண்டு நிறுவனம் இந்த வீடியோவை தயாரித்து வெளியிட்டுள்ளது. பாலியல் பலாத்காரத்தால் ஒருமுறை, சமூகச் சீண்டலால் அன்றாடம் என வேதனை அனுபவிப்பவர்களைத் தெரிந்தால் தகவல் கொடுங்கள் என்கிறது போதினி.

அஜிதா என்ற கல்லூரி மாணவி மாலை நேரப் பயிற்சி வகுப்புக்குச் சென்றபோது தனது ஆசிரியரால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகிறாள். அதன் பின்னர் அவளைத் துரத்தும் துன்பங்கள், அவளை மீட்டெடுக்கும் முயற்சி என நீள்கிறது குறும்படம்.

இந்தக் குறும்படம் பல கேள்விகளை எழுப்புவதோடு சில புரிதல்களையும் நமக்கு ஏற்படுத்துகிறது. பாலியல் வன்முறைக்கு ஆளாகும் பெண்கள் சமூகத்தின் ஏச்சுகளுக்கும் பேச்சுகளுக்கும் அஞ்சியே தங்களுக்கு நேர்ந்த அவலத்தை மறைத்துவிடுகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணைப் பார்த்து இந்தச் சமூகம் பல நூறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கக் காத்துக்கொண்டிருக்கிறது. அவள் உடையையும் அவள் வீடு திரும்பும் நேரத்தையும் வைத்துக் குற்றத்துக்கான காரணங்களை அடுக்குகிறது.

இந்தச் சமூகம் சொல்லும் அடக்க ஒடுக்கக் கோட்பாடுகளுக்கு எண்ணிலடங்கா அர்த்தங்கள் இருக்கின்றன. இவற்றில் ஏதேனும் ஒன்றில் அவள் பொருந்தாவிட்டால் அவள் பலாத்காரம் செய்யப்படத் தகுதியானவள் என்பதே பொதுச் சமூகத்தின் வக்கிரப் பார்வை. உண்மையில் வெட்கப்பட வேண்டியது சக மனுஷியை வேட்டையாடும் குற்றவாளிகளை உருவாக்கும் இச்சமூகம்தான். அவளுடைய வேதனைகள் சொல்லித் தீராதது. அவள் மீண்டும் புதியதொரு பாதையில் செல்ல முழு சுதந்திரம் இருக்கிறது. நதி போல் செல்லும் அவளுக்கு யாருடைய அனுதாபமும் தேவையில்லை. நான்கு பேர் நான்கு விதமாகப் பேசி அவளை மீண்டும் மீண்டும் ரணமாக்காமல் இருந்தாலே போதும், அக்கொடிய சம்பவங்கள் கனவு போல் நினைவிலிருந்து நீங்கிவிடும்.

பாலியல் வன்முறையில் ஈடுபடுகிறவர்கள் மீதான அச்சத்திலிருந்து மட்டுமல்ல, இந்தச் சமூகத்தின் மீதான அச்சத்திலிருந்தும் விட்டு விடுதலையாகு பெண்ணே.

குறும்படத்தை யுடியூபில் காண: http://bit.ly/2blDRsj

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x