Last Updated : 10 Jul, 2016 03:26 PM

 

Published : 10 Jul 2016 03:26 PM
Last Updated : 10 Jul 2016 03:26 PM

வானவில் பெண்கள்: இல்லாதவர்களோடு எப்போதும் இருப்பவர்!

ஒரு காலத்தில் தான் பெற்றெடுத்த ஒரு குழந்தையையே வளர்க்க முடியாமல் பிச்சை எடுத்தவர் சிந்துத்தாய் (sindhutai sapkal). ஆனால், கடந்த 35 ஆண்டுகளில் 1000-க்கும் மேற்பட்ட கைவிடப்பட்ட குழந்தைகளைத் தத்தெடுத்து, பராமரித்து, படிக்கவைத்து, திருமணம் செய்துகொடுத்து, அவர்களுக்கு நிலையான வாழ்க்கைச் சூழலையும் உறுதி செய்து தந்திருக்கிறார். அவர்களில் சிலர் இன்று மருத்துவர்களாக, பொறியாளர்களாக, வழக்கறிஞர்களாகச் சமூக அந்தஸ்தோடு வாழ்ந்துகாட்டுகிறார்கள்.

தொண்டுக்குத் தடையா?

தன் மீது விழுந்த ஒவ்வொரு அடியையும் உறுதியுடன் எதிர்த்து நின்ற சிந்துத்தாய், தற்போது மிகப் பெரிய சவாலை எதிர்கொண்டுவருகிறார். 2011 முதல் தன்னுடைய காப்பகங்களுக்கு உரிமைகோரிச் சட்ட ரீதியாகப் பதிவு செய்ய முயன்றுவருகிறார் அவர். ஆனால் தொடர்ந்து அலைக்கழித்த மகாராஷ்டிர அரசு இப்போது முறையான பதிவு இல்லை எனச் சொல்லி காப்பகத்தை மூடும்படி உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, சிந்துத்தாயின் காப்பகங்களை மீட்டெடுக்க மனிலைஃப் அறக்கட்டளையின் (Moneylife Foundation) நிறுவனர் சுசேத்தா தலால் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸிடமும் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தியிடமும் Change.org மூலமாக ஆன்லைன் மனுவை சமர்ப்பித்தார். இத்தனை காலம் மவுனம் சாதித்த மத்திய அரசு, இந்த ஆன் லைன் மனு ஏற்படுத்திய அலையால் பிரச்சினையை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும்படி அறிவித்துள்ளது.

எத்தனை துயரங்கள்!

மகாராஷ்டிரத்தின் வார்தா மாநிலத்தைச் சேர்ந்த பிம்ப்ரி மேகே கிராமத்தில் 1948-ல் வீட்டுக்கு வேண்டாத பெண் பிள்ளையாகப் பிறந்தார் சிந்துத்தாய் சப்கல். நிந்திக்கப்பட்ட அந்தச் சிறுமி ‘சிந்தி’ அதாவது ‘கிழிந்த துணி’ என்ற பட்டப் பெயரால் எப்போதுமே கேலிசெய்யப்பட்டார். பத்து வயதில் 30 வயது ஆணுக்குத் திருமணம் செய்துகொடுக்கப்பட்டார். இருபது வயதில் முழுமாத கர்ப்பிணியாக இருந்தபோது கணவரால் கொடூரமாக அடித்து வீட்டைவிட்டுத் துரத்தப்பட்டார்.

உடல் முழுக்கக் காயங்களோடு வீதியில் தடுமாறி நடந்த சிந்துத்தாய், வீட்டருகில் இருந்த மாட்டுத் தொழுவத்திலேயே பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். தொப்புள்கொடியைக்கூட அறுத்தெடுக்க ஆளில்லாமல் பிறந்த குழந்தையைக் கையில் தூக்கிக்கொண்டு சில கிலோ மீட்டர்களை நடந்தே கடந்து தாய் வீட்டை அடைந்தார். ஆனால் அங்கும் நிராகரிக்கப்பட்டார்.

வேறு வழியின்றி வீதியில் கிடந்த ஒரு கூர்மையான கருங்கல்லால் தொப்புள் கொடியை அறுத்தெடுத்தார். இந்தச் சம்பவம் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சிந்துத்தாயை ஆழமாகப் பாதித்த. மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றார். ஆனால் கைக்குழந்தையோடு உயிரை மாய்த்துக்கொள்ள மனமில்லை. பிழைக்க வழி தெரியாமல் பிச்சை எடுத்தார்.

சிந்துத்தாய் என்கிற தாய்

பெண் பிள்ளையைக் கையில் ஏந்திப் பிச்சை எடுக்கும்போதுதான் தெருவோரம் பிச்சை எடுக்கும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் கண்ணில்பட்டன. அதில் பெரும்பாலான குழந்தைகள் அனாதைகள் என்பதும் சிலர் பெற்றோரால் கைவிடப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்தது. இத்தனை காலம் இவர்களைக் கடந்து சென்றபோதெல்லாம் ஏற்படாத தவிப்பு அப்போது உண்டானது.

தன்னுடையக் குழந்தைக்காக மட்டுமின்றி வீதியில் விடப்பட்ட பல குழந்தைகளுக்காகவும் பிச்சை எடுத்தார். நாளடைவில் அந்தக் குழந்தைகளுக்கு அடைக்கலம் தந்து ‘அனாதைகளின் தாய்’ என வாஞ்சையோடு அழைக்கப்படலானார்.

மற்றக் குழந்தைகளுக்கு இடையில் தன் மகளை மட்டும் வீட்டில் வளர்ப்பது சுயநலம் எனக் கருதிப் சொந்த மகளையும் காப்பகத்திலேயே வளர்த்தார். தற்போது அவரும் வளர்ந்து, அனாதை இல்லம் ஒன்றைப் பராமரித்து வருகிறார். சிந்துத்தாய்க்கு தற்போது 207 மருமகன்கள், 36 மருமகள்கள் மற்றும் 1000-த்துக்கும் மேற்பட்ட பேரப் பிள்ளைகள். இன்றுவரை அவருக்கு அமைப்பு ரீதியான நிதி உதவிகள் எதுவும் கிடையாது. ஒவ்வொரு வேளை உணவுக்கும் இன்றும் அவர் மக்களைச் சந்தித்துப் பேசி உதவி கோருகிறார்.

பல ஆண்டுகள் கழித்து சமீபத்தில் அவருடைய கணவர் தேடிவந்து தன்னுடைய தவறை உணர்ந்துவிட்டதாக மன்னிப்பு கேட்டார். எல்லாக் குழந்தைகளையும் அரவணைத்தே பழகிய சிந்துத்தாயின் மனம் கணவரையும் ஒரு குழந்தையாகப் பாவித்து ஏற்றுக்கொண்டது. 500-க்கும் மேற்பட்ட விருதுகள் அவரைத் தேடி வந்துள்ளன. அவரை கவுரவிக்கும் விதமாக எவ்வளவு பணம் கொடுத்தாலும் அவற்றை முழுவதுமாகக் குழந்தை காப்பகங்களுக்காகப் பயன்படுத்துகிறார். ‘சிந்துத்தாய் சப்கல்’ என்கிற பெயரில் இதுவரை ஐந்து மையங்கள் நடத்திவருகிறார்.

சிந்துத்தாயால் வளர்க்கப்பட்ட ராசாதா ரோஷன் இயக்கிய ஆவணப்படம் ‘ஏ ட்ரிபியூட் டூ சிந்துத்தாய் சப்கல்’ (‘A Tribute to Sindhutai Sapkal’). அவரது வாழ்க்கையை அடிப்படையாக வைத்து ‘மீ சிந்துத்தாய் சப்கல்’ என்கிற மராத்தி திரைப்படம் 2010-ல் எடுக்கப்பட்டுத் தேசிய விருதையும் வென்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x