Published : 11 Jun 2017 02:42 PM
Last Updated : 11 Jun 2017 02:42 PM
அங்கிதா குமாவத், ஐ.ஐ.எம். கல்கத்தாவில் படித்த எம்.பி.ஏ. பட்டதாரி. புகழ்பெற்ற தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்த இவர், அந்த வேலையைத் துறந்து பால் பண்ணை விவசாயியாக மாறியிருக்கிறார். மாத்ருத்வ பால் மற்றும் இயற்றை உணவு நிறுவனத்தைத் தற்போது அஜ்மீரில் நிர்வகித்துவருகிறார். அமெரிக்காவிலும் ஜெர்மனியிலும் பணியாற்றிக்கொண்டிருந்த அங்கிதா, அந்தப் பணியை உதறிவிட்டு விவசாயத்தைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் அவருடைய அப்பா.
அரசுத் துறையில் பொறியாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்த அவருடைய அப்பா பூல்சந்த் குமாவத், விருப்ப ஓய்வுபெற்று சில ஆண்டுகளுக்கு முன் பால் பண்ணை வியாபாரத்தைத் தொடங்கினார். கலப்படமற்ற உணவைத் தன்னுடைய ஊர் மக்களுக்கு வழங்க வேண்டுமென்ற நோக்கத்தில் இந்தப் பால் பண்ணையை அவர் ஆரம்பித்தார். அவர் அரசுப் பணியைவிட கலப்படமற்ற உணவை உற்பத்தி செய்வதற்கு முக்கியத்துவம் கொடுக்கக் காரணம் மூன்று வயதில் அவருடைய மகளுக்கு வந்த தீவிரமான மஞ்சள்காமாலை. இந்த நோயிலிருந்து அங்கிதாவை மீட்பதற்கு மருத்துவர்கள் சொன்ன ஆலோசனை கலப்படமற்ற பாலையும் உணவையும் கொடுக்கவேண்டும் என்பதுதான். ஆனால், எவ்வளவு முயற்சி செய்தும் கலப்படமில்லாத பசும்பாலை மகளுக்காகத் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை.
பொறியியல் படித்து பொதுப்பணித்துறையில் பணியாற்றினாலும் பூல்சந்த் விவசாய குடும்பப் பின்னணியைச் சேர்ந்தவர். அதனால், நாமே ஏன் ஒரு மாடு வாங்கி குடும்பத் தேவைக்காக வளர்க்கக் கூடாது என்ற யோசனை அவருக்கு ஏற்பட்டது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் 3,500 ரூபாய்க்கு ஒரு மாட்டை வாங்கி மகளுக்குக் கலப்படமற்ற பாலையும், பால் பொருட்களையும் கொடுத்திருக்கிறார். இந்தக் கலப்படமில்லாத உணவைச் சாப்பிட ஆரம்பித்ததும் அங்கிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. பால் பொருட்கள் மட்டுமல்லாமல் மற்ற உணவுப் பொருட்களும் கலப்படமில்லாமல் சந்தையில் கிடைப்பதில்லை என்பதை உணர்ந்த அவர், வீட்டிலேயே காய்கறிகளை விளைவிக்கலாமே என்று நினைத்தார். ஆனால், குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற வேலை முக்கியம் என்பதால் விவசாயக் கனவைத் தள்ளிப்போட்டார். மகள்கள் படித்து முடித்தவுடன் விருப்ப ஓய்வுபெற்று, 2009-ல் அஜ்மீரில் ஒரு நிலத்தை வாங்கி விவசாயம் செய்யத் தொடங்கினார்.
2014-ம் ஆண்டு, அப்பாவின் வழித்தடத்தைப் பின்பற்றி, அங்கிதாவும் தன்னுடைய பெருநிறுவன வேலையைத் துறந்தார்.
“எல்லா நடுத்தர வர்க்கக் குடும்பத்தின் பிள்ளைகளைப் போல நாங்களும் பணிவாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்தோம். விவசாயத்தைப் பற்றியோ புதிதாகத் தொழில் தொடங்குவது பற்றியோ எந்த யோசனையும் இல்லை. ஆனால், என்னுடைய அப்பாவுக்கு விவசாயத்தின் மீது இருக்கும் பேரார்வம் என்னை யோசிக்கவைத்தது. அவர் உடல்நிலை சரியில்லாத போதும் விவசாயத்தைக் கைவிடத் தயாராக இல்லை. அதனால், அவருடன் சேர்ந்து விவசாயம் செய்ய முடிவெடுத்தேன்” என்கிறார் அங்கிதா.
தற்போது மாத்ருத்வ பால் மற்றும் இயற்றை உணவு நிறுவனத்தின் இணை உரிமையாளராக இருக்கிறார் அங்கிதா. இவரது பண்ணையில் 100 மாடுகள் இருக்கின்றன. கோதுமை, காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை விளைவிக்கிறார். அத்துடன் காளான் வளர்ப்பிலும் வெற்றிகரமாக ஈடுபட்டுவருகிறார். சமீபத்தில் இயற்கை உரம் தயாரித்து விவசாயிகளுக்குக் கொடுக்கும் முயற்சியைத் தொடங்கியிருக்கிறார் அவர்.
அங்கிதா பொறுப்பேற்ற பின், பலவிதமான தொழில்நுட்பங்களைத் தங்களுடைய பால் பண்ணையிலும் விவசாய முறையிலும் அறிமுகப்படுத்தியிருக்கிறார். மொத்த பண்ணையும் சொட்டு நீர்ப் பாசன முறையிலும் சூரிய ஆற்றலிலும் இயங்குகிறது. மழைநீர் சேமிப்புத் திட்டத்தையும் தங்களுடைய பண்ணையில் நிறுவியிருக்கிறார்.
தங்கள் பண்ணையில் பாரம்பரியம், நவீனம் இரண்டும் கலந்த விவசாய முறை பின்பற்றப்படுகிறது என்று சொல்கிறார் அங்கிதா. தான் ஐ.ஐ.எம்.மில் கற்ற மேலாண்மை திறன்களும், முடிவெடுக்கும் திறனும், புதிய சூழலுக்குத் தகுந்தபடி பணியாற்றும் திறனும் இப்போது விவசாயம் செய்வதிலும் பயன்படுகிறது என்றும் அவர் சொல்கிறார்.
“ஒரு பெருநிறுவனத்தில் மாத சம்பளத்துக்குப் பணியாற்றுவதைவிட, ஆரோக்கியமான தலைமுறைகளை உருவாக்கப் பங்களிப்பு செய்கிறோம் என்ற மனநிறைவை விவசாயம் தருகிறது” என்கிறார் அங்கிதா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT