Published : 04 Jun 2017 11:46 AM
Last Updated : 04 Jun 2017 11:46 AM

வட்டத்துக்கு வெளியே: சரித்திரம் படைத்த சோஃபியா

உலகம் முழுவதும் இருக்கிற திரைப்பட ரசிகர்கள் ஒவ்வோர் ஆண்டும் பிரான்ஸில் நடைபெறும் ‘கான்’ திரைவிழாவுக்காகக் காத்திருப்பார்கள். அந்தத் திரைப்பட விழாவின் எழுபது ஆண்டுகால வரலாற்றில் மற்றுமொரு மைல்கல்லை நட்டிருக்கிறார் சோஃபியா கப்போலா. இந்த ஆண்டுக்கான சிறந்த இயக்குநர் விருது வென்றிருப்பதன் மூலம் அந்தப் பிரிவில் விருது பெறும் இரண்டாவது பெண் என்ற சிறப்பையும் பெற்றிருக்கிறார். ரஷ்ய இயக்குநர் யுலிவா சோலன்ஸ்டெவா 1961-ல் சிறந்த இயக்குநர் விருதை வென்றிருக்கிறார்.

சிவப்புக் கம்பள விரிப்பில் நடைபோட்ட நாயகிகளின் ஆடை குறித்து ஆளாளுக்கு விவாதித்துக்கொண்டிருக்க, பெண்களின் அடையாளம் ஆடைகள் அல்ல என்பதைத் தன் மகத்தான வெற்றியின் மூலம் சோஃபியா நிரூபித்திருக்கிறார். 1971-ல் (அந்த ஆண்டுதான் சோஃபியா பிறந்தார்) வெளிவந்த The Beguiled திரைப்படத்தை அதே பெயரில் ரீமேக் செய்திருக்கிறார். அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது, தெற்குப் பகுதியில் உள்ள பெண்கள் தங்கும் விடுதி ஒன்றில் நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்டு நகரும் அந்தப் படத்துக்காகத்தான் சோஃபியாவுக்குச் சிறந்த இயக்குநர் விருது வழங்கப்பட்டிருக்கிறது.

சோஃபியாவின் தாத்தா கார்மைன் கப்போலா இசையமைப்பாளர், அப்பா ஃபிரான்ஸிஸ் ஃபோர்ட் கப்போலா இயக்குநர். திரைப் பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்ததால் சோபியாவுக்குச் சிறு வயதிலேயே திரைத்துறை அறிமுகமாவிட்டது. எட்டு வயது சிறுமியாகத் தன் தந்தையின் தோள் மீது அமர்ந்தபடி கான் திரைவிழாவுக்கு வந்தார் சோஃபியா. ஆனால், இன்று இன்னாருடைய பேத்தி, இவருடைய மகள் என்ற எந்த அடையாளமும் தேவைப்படாமல் சிறந்த இயக்குநர் என்ற தனித்த அடையாளத்தை ஏற்படுத்தி யிருக்கிறார் சோஃபியா கப்போலா.

உலகின் மிகச் சிறந்த விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் அகாடமி விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட முதல் அமெரிக்கப் பெண் இயக்குநர் இவர். 2004-ம் ஆண்டில் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட போது அந்தத் தகுதியைப் பெற்ற முதல் அமெரிக்கப் பெண் என்ற பெருமையையும் பெற்றார்.

பெண்களின் பெயர்கள் எங்கே?

பெரும்பாலான துறைகளில் பாலினப் பாகுபாடு நிலவுகிறபோது திரைத்துறையில் அது கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். கான் விருது போன்ற உயரிய விழாக்களும் அதற்கு விதிவிலக்கல்ல. தகுதி வாய்ந்த பெண் இயக்குநர்கள் இருந்தாலும் அவர்கள் விருதுக்குப் பரிந்துரைக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எப்போதும் உண்டு. கடந்த 2012-ல் ஒரு பெண் இயக்குநர்கூட கான் விருதுக்குப் பரிந்துரைக்கப் படவில்லை. இப்படியொரு சூழலில்தான் நாம் சோஃபியாவின் வெற்றியைக் கொண்டாட வேண்டும்.

The Piano படத்துக்காக 1993-ல் பாம் தி ஓர் விருது வாங்கியவர் நியூசிலாந்து பெண் இயக்குநர் ஜேன் கேம்பியன். தனக்கு ரோல் மாடலாக இருப்பதற்காகவும், பெண் இயக்குநர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டுவருவதற்காகவும் ஜேன் கேம்பியனுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் சோஃபியா. “இதுபோன்ற விருதுகளின் இறுதிப் பட்டியலில் பெண்களின் பெயர்கள் இல்லாமல் இருப்பது பைத்தியக்காரத்தனமானது” என்று தன் கோபத்தைப் பதிவுசெய்திருக்கிறார் ஜேன்.

நடனமாடத்தான் நடிகைகளா?

சோஃபியாவின் வெற்றியைக் கொண்டாடுகிற நேரத்தில் இந்தியச் சூழலை ஒப்பிட்டுப் பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. காதலிப்பது, நாயகனுடன் மரத்தைச் சுற்றிவந்து பாடுவது, தேவைப்பட்டால் சிறிது நடிப்பது போன்ற வேலைகளுக்கு மட்டும்தான் பெரும்பாலான இந்தியத் திரைப்படங்களில் பெண்கள் பயன்படுத்தப்பட்டுவருகிறார்கள். நாயகிகள் நடனமாடினால் மட்டும் போதும் என்ற மனப்பான்மையே பெரும்பாலானோருக்கு இருக்கிறது.

திரைத்துறை என்பது ஆண்களின் ஏகபோக உரிமையாக இருக்கிற சூழலில் படத்தை இயக்குவது என்பது இந்தியப் பெண்களுக்குப் பெரும் சவாலாகவே இருந்துவருகிறது. கிடைக்கிற வாய்ப்புகளைப் பயன்படுத்தி அவர்கள் தட்டுத் தடுமாறித்தான் முன்னேற வேண்டியிருக்கிறது. பெண்கள் காட்சிப் பொருட்கள் என்கிற சிந்தனையும், வங்கிப் பணியும் ஆசிரியப் பணியும் மட்டுமே பெண்களுக்குப் பாதுகாப்பானவை என்கிற பொதுப் புத்தியும் மாறுகிற நாளில்தான் வெவ்வேறு துறைகளில் பெண்கள் தங்களை நிரூபிக்க முடியும். கதவு தானாகத் திறக்கும் என்று காத்திருக்காமல் பெண்களும் வட்டத்தைவிட்டு வெளியே வர வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x