Published : 22 Jan 2017 10:00 AM
Last Updated : 22 Jan 2017 10:00 AM
கவிஞர், கட்டுரையாளர், முன்னோடிப் பெண்ணியவாதி, பெண் தன்பாலின உறவாளர்-செயல்பாட்டாளர், சமூகப் போராளி போன்ற பல முகங்களைக் கொண்டவர் அமெரிக்கக் கவிஞர் அட்ரீயன் ரிச்.
இவர் அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்திலுள்ள பால்ட்டிமோர் நகரத்தில் 1929-ல் மே மாதம் 16-ம் தேதி பிறந்தார். அப்பா ஒரு யூதர், காசநோய் மருத்துவர். அம்மா கிறித்தவர், பியோனோ கலைஞர். ரிச்சின் அப்பா, வீட்டிலேயே பெரிய நூலகத்தை வைத்திருந்தார். ரிச்சின் இளம் பருவம் அந்த நூலகத்தில்தான் கழிந்தது. தன் மகள் ஒரு மழலை மேதையாக உருவெடுக்க வேண்டும் என்று பல முயற்சிகளை மேற்கொண்டார் ரிச்சின் அப்பா. நிறைய புத்தகங்கள் படிக்கவும், கவிதை எழுதவும் தனது மகளுக்கு ஊக்கம் கொடுத்தார்.
கல்லூரி இறுதி ஆண்டின்போதே அவரது முதல் கவிதைத் தொகுப்பான ‘உலகின் மாற்றம்’, ‘யேல் பல்கலைக்கழக இளங்கவிஞர் வரிசை’யில் வெளியிடுவதற்காக, புகழ்பெற்ற கவிஞர் டபிள்யு.எச். ஆடனால் தேர்ந்தெடுக்கப்பட்டது. முதல் தொகுப்பிலேயே ரிச் பரவலான கவனிப்பைப் பெற்றார்.
பொது வாழ்க்கைப் பயணம்
1953-ல் ஹார்வார்டு பொருளியல் பேராசிரியர் ஆல்ஃப்ரெட் ஹாஸ்கெல் கான்ராடை ரிச் மணம்புரிந்தார். அவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள் பிறந்தன. இந்தக் காலகட்டத்திலேயே மக்கள் உரிமைச் செயல்பாடுகள், போருக்கெதிரான இயக்கங்கள் போன்றவற்றில் தீவிரமாக ரிச் ஈடுபடத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் தன் கணவரிடமிருந்து பிரிந்துவிட்டார். 70-களின் இறுதியில் அவரது கணவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.
1976-ல் ரிச் வெளியிட்ட ‘21 காதல் கவிதைகள்’ என்ற தொகுப்பின் மூலம் தன்னை தன்பாலின உறவாளராக அறிவித்துக்கொண்டார். அதற்குப் பிறகு, பல நாடுகளிலும் கருத்தரங்குகளில் கலந்துகொண்டு பெண்ணியம், பெண்ணுடல், பெண் அடையாளம் போன்ற கருத்தியல்களில் தீவிரமாக உரையாற்றினார். அமெரிக்காவின் முன்னணி அறிவிஜீவிகளுள் ஒருவராக மாறினார்.
துணிச்சல் பேச்சு
தன் வாழ்நாளில் பல விருதுகளை ரிச் பெற்றிருக்கிறார். சில விருதுகளை மறுத்தும் இருக்கிறார். அவரது மறுத்தலும் வலுவான அரசியல் செயல்பாடாக இருந்தது. 1997-ல் ‘கலைகளுக்கான தேசியப் பதக்கம்’ அமெரிக்க அரசால் வழங்கப்பட்டபோது அதைப் பெற மறுத்துவிட்டார். ‘இன ரீதியிலும் பொருளாதார ரீதியிலுமான அநீதி தொடர்ந்து மோசமாக அதிகரித்துவரும் வேளையில் அரசு இந்த விருதை வெறும் அடையாளத்துக்காக ஒருசில கலைஞர்களுக்கு வழங்கி, பெருவாரியான மக்களைக் கண்டுகொள்ளாமல் விட்டிருக்கிறது’ என்று விருதமைப்புக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
1974-ல் ‘தேசிய புத்தக விருது’அவருக்கும் ஆலன் கின்ஸ்பெர்குக்கும் சேர்த்து அறிவிக்கப்பட்டபோது அந்த விருதைத் தனிப்பட்ட முறையில் போய் வாங்க மறுத்துவிட்டார் ரிச். அந்த விருதுக்கான இறுதிப் பட்டியலில் இருந்த ஆத்ரி லார்ட், ஆலிஸ் வாக்கர் போன்றோருடன் சேர்ந்து ‘எல்லாப் பெண்களுக்குமான பிரதிநிதி’யாக அந்த விருதை ரிச் பெற்றுக்கொண்டார். அவரைப் பொறுத்தவரை ‘கலை என்பது அதனைப் பணயக் கைதியாக வைத்திருக்கும் அதிகாரத்தின் உணவுமேஜையை அலங்கரிக்குமென்றால் அதற்கு எந்த அர்த்தமும் கிடையாது’. அவர் எழுத்துக்குப் பின்னுள்ள காரணம் என்னவென்று ஒருமுறை கேட்டபோது ஏழே வார்த்தைகளில் (ஆங்கிலத்தில்) அதற்குப் பதில் சொன்னார். அதன் மொழியாக்கம் இதுதான்: ‘ஆதிக்கம் ஏதுமற்ற சமூகம் ஒன்றும் உருவாக்கம்’.
முதல் கணவரைப் பிரிந்த பிறகு மிஷெல் க்ளிஃப் என்ற ஜமைக்க நாவலாசிரியருடன் அட்ரீயன் ரிச் சேர்ந்து வாழ்ந்தார். அவரது மரணம்வரை இந்த உறவு நீடித்தது. அட்ரீயன் ரிச் 2012-ல் மார்ச் 27 அன்று மரணமடைந்தார்.
‘பொது மொழி ஒன்றுக்கான கனவு’ (A Dream of a Common Langauge) என்ற தொகுப்பிலிருந்து இரண்டு கவிதைகள் இங்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.
பெண் சிங்கம்
அவளுடல் நறுமணம்
அழைக்கிறதென்னை அவளருகில்
நீள்கிறது பாலை, அவ்விளிம்புவரை இவ்விளிம்பிலிருந்து.
பாறை. சாம்பற்கோரைப் புற்கள். நீரருந்து குழி.
விண்மீன்செறிந்த வானம்.
தனது மூன்று கஜ சதுர அடைப்பிடத்துக்குள்ளான
முன்னும் பின்னுமான நடையைச் சற்று நிறுத்திக்கொண்டு
பார்க்கிறாள் அந்தப் பெண் சிங்கம் என்னை.
உண்மைக்கு விசுவாசமானவை அவள் கண்கள்.
நதிகளை, கடற்கரைகளை, எரிமலைகளை
நிலாக் குளியலிட்ட கடலோர நிலமுனைகளின் கதகதப்பைப் பிரதிபலிக்கின்றன.
அவள் பிட்டச் சப்பைகளின் பொன்னிறத் தோலுக்கடியில்
பாய்வுறுகிறது தானே அரைமனதுடன்-மறுத்துக்கொண்ட
அவளது உடன்பிறந்த அதிகாரம்.
எல்லைக்குட்பட்டது அவளது நடை.
எங்கு சென்றாலும் எல்லையிடுகிறது மூன்று கஜப் பரப்பு.
இது போன்றதொரு நாட்டில்,
எல்லைக்குள் இல்லாமல் போவதல்ல,
வெகுதூரம் சென்றுவிடுவதுதான் பிரச்சினை என்கிறேன் நான்.
நீ காணாத குகைகளும் பாறைகளும் உண்டு.
எனினும் அவற்றின் இருப்பை நீயறிவாய்.
அத்திசை நோக்கி முகர்கிறது
அவளது பெருமிதமான, காப்பேதுமற்ற தலை.
அதுவே அவள் நாடு, அவற்றின் இருப்பை அவளறிவாள்.
விண்மீனொளியில் அவள் நோக்கி வருகிறேன் நான்.
காதலர் பார்வை கொண்டு
நோக்குகிறேன் அவள் கண்களுக்குள்,
அவளது விழிக்கோளங்கள் பின்னுள்ள வெற்றிடத்துக்குள் புகுந்து,
என்னை வெளியே விட்டுவிட்டு.
ஆக, கடைசியில், அவளது விழிப்பாவைகள் வழியாக,
அவள் பார்ப்பதை நானும் பார்க்கிறேன்:
அவளுக்கும் நதியின் வெள்ளத்துக்குமிடையில்,
அவளுக்கும் வானவில் திரையிட்ட எரிமலைக்குமிடையில்,
மூன்று கஜ சதுரப் பரப்பை அளவிடும் ஒரு பேனா.
குறுக்கும் நெடுக்குமான தடுப்புக் கம்பிகள்.
அந்தக் கூண்டு.
அந்தக் கடுந்தவம்.
ஆற்றல்
நம் வரலாற்றின் மண் படிவங்களில் வாழ்கிறோம்
உதிர்ந்து விழும் மண் கட்டியிலிருந்து
ஒரு போத்தலை இன்று வெளித்தள்ளியது மண்புரட்டி.
கச்சிதமான பிசின் நிறம்.
ஜுரத்துக்கு அல்லது சோகத்துக்கு
ஒரு நூறாண்டு கால நிவாரணி
இந்த தட்பவெப்பத்தின் பனிக்காலங்களில்
இந்த மண்ணில் வாழ ஒரு மருந்து.
மேரி க்யுரியைப் பற்றிப் படித்துக்கொண்டிருந்தேன் இன்று
அவளுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்
தான் சுத்திகரித்த தனிமத்தால்
கதிர்வீச்சு தந்த நோய் ஆண்டுக் கணக்கில்
தன்னைத் தாக்கி வருத்துகிறது என்று.
இறுதிவரை அவள் மறுதலித்தது போலிருக்கிறது
கண்களில் தோன்றிய புரையின் மூலத்தை,
ஒரு பென்சிலையோ
ஒரு சோதனைக்குழாயையோகூடப் பிடிக்க முடியாத அளவுக்கு
விரல் நுனிகளின் தோல்
வெடித்துச் சீழ் வடிந்ததற்கான காரணத்தை.
அவள் இறந்துபோனாள், புகழ்பெற்ற பெண்ணாக,
தன் காயங்களை மறுதலித்தவாறே
தன் காயங்கள் தன் ஆற்றல்
பிறந்த இடத்திலேயே
பிறந்தன என்பதை மறுதலித்தவாறே.
(கவிதைகள் மொழிபெயர்ப்பு: ஆசை)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT