Published : 30 Apr 2017 03:52 PM
Last Updated : 30 Apr 2017 03:52 PM
அரசுப் பள்ளியில் இருக்கிறோமா, சர்வதேசப் பள்ளியில் இருக்கிறோமா என்ற சந்தேகத்தை வரவழைத்துவிடுகிறது விழுப்புரம் மாவட்டம் கந்தாடு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி. இங்குள்ள மூன்றாம் வகுப்பு குழந்தைகள் நேர்த்தியான ஆங்கிலத்தில் பாடுகிறார்கள், சரளமாகப் பேசுகிறார்கள்!
வகுப்பாசிரியர் அன்னபூர்ணாவின் முயற்சியில் மூன்றாம் வகுப்பு மாணவர்கள் தொடுதிரை ஸ்மார்ட் போர்டு மூலம் கல்வி கற்றுவருகின்றனர். இதன் மூலம் ஆங்கிலம், பொது அறிவு, வரலாறு உள்ளிட்ட பாடங்களை எளிதாகக் கற்றுக்கொள்ள முடிகிறது. லேப்டாப், டேப்லெட், அபாகஸ் உள்ளிட்ட சிறப்பு வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. மேஜை, நாற்காலிகள், விளையாட்டு உபகரணங்கள் என்று ஏராளமான வசதிகள் இந்த வகுப்பறையில் உள்ளன.
அன்னபூர்ணா, திண்டிவனத்தைச் சேர்ந்தவர். அப்பா மோகன் மருத்துவர், அம்மா அனுராதா இல்லத்தரசி. அன்னபூர்ணாவுக்கும் மருத்துவராக வேண்டும் என்று கனவு. ஆனால் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. அப்போது பலரும் பெண்களுக்கு ஆசிரியர் வேலைதான் பாதுகாப்பானது என்று சொல்ல, ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தார் அன்னபூர்ணா. படித்து முடித்ததும் 2004-ம் ஆண்டு ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். ஓரளவு வசதி, வாய்ப்புகளோடு வளர்ந்தவரை, அரசுப் பள்ளி வேலை அவ்வளவாகக் கவரவில்லை. யாரிடமும் பேசாமல் ஒதுங்கியே இருந்தார்.
ஒரு கட்டத்தில் வேலையைவிட்டே ஓடிவிடலாம் என்றுகூட நினைத்தார். ஆனால் அவரது நினைப்பைத் தங்கள் ஆர்வத்தாலும் அறிவுத் திறமையாலும் அரசுப் பள்ளி மாணவர்கள் மாற்றினார்கள். எளிய குடும்பப் பின்னணியில் இருந்துவரும் குழந்தைகள், கல்வி தங்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றுதானே பள்ளிக்கு வருகிறார்கள்? அவர்களுக்கு நல்வழி காட்ட வேண்டியது தன் கடமை என்பதை அன்னபூர்ணா உணர்ந்தார். அவர்களின் திறமையை மெருகேற்ற புதுப்புது கற்றல் வழிமுறைகளைச் செயல்படுத்தினார். அதற்காக ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவு செய்து, வகுப்பறையில் நவீன கற்கும் கருவிகளை வாங்கிவைத்தார். இவற்றுக்கு இடையே முதுகலை ஆங்கிலம், முதுகலை கணிதம், எம்.பி.ஏ. ஆகியவற்றைப் படித்துத் தன்னைத் தகுதிபடுத்திக்கொண்டார்.
ஆங்கில நாளிதழைத் தெளிவாக வாசிப்பதோடு, அமெரிக்க ஆங்கிலத்தில் நுனி நாக்கில் உரையாடுகிறார்கள். எளிதில் கணக்கு போடும் முறை, தொடுதிரை மூலம் அட்வான்ஸ் ஆங்கிலம், பிரிட்டிஷ் ஆங்கிலம் என மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்திவருகிறார் அன்னபூர்ணா.
“அரசுப் பள்ளி மாணவர்கள் கல்லூரிக்கோ, வெளியிடங்களுக்கோ செல்லும்போது, ஆங்கிலம் என்பது மிகப் பெரிய தடையாகவே இருக்கிறது. என் மாணவர்கள் ஆங்கிலம் தெரியவில்லையே என்று கூனிக் குறுகக் கூடாது என்ற எண்ணத்தில் எனக்குத் தெரிந்தவற்றை, கற்பிக்கும் முறையில் சற்று மாற்றத்தை ஏற்படுத்தி கற்றுத் தர ஆரம்பித்தேன். வகுப்பறையில் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தேன். ஆறு மாதங்களில் என் சிறு சிறு ஆங்கிலக் கேள்விகளுக்கு மாணவர்கள் பதில் சொல்ல ஆரம்பித்தார்கள்.
மெள்ள மெள்ள மாணவர்களுக்கு ஆங்கிலம் வசப்பட்டது. இது ஒன்றும் செய்ய முடியாத காரியம் இல்லை. முதலில் ஆசிரியர்கள் ஆங்கிலம் கற்க வேண்டும். அதற்கு அவர்கள் மனரீதியாகத் தயாராகவேண்டும். ஆங்கிலம் அறிவல்ல, மொழிதான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதைக் கற்றபின் கிடைக்கும் நம்பிக்கை, எதையும் எதிர்கொள்ளும் உத்வேகத்தைத் தரும். அதுவே தாழ்வு மனப்பான்மையில் இருந்து மாணவர்களை விடுவிக்கும்” என்கிறார் அன்னபூர்ணா.
தலைமை ஆசிரியர் பிரேமலதா, “மூன்றாம் வகுப்பு போலவே மற்ற வகுப்பறைகளை ஸ்மார்ட் கிளாஸாக மாற்ற தொகுதி எம்.எல்.ஏ., எம்.பி., போன்றவர்களிடம் நிதி பெற்று, இந்தப் பள்ளியை ஸ்மார்ட் பள்ளியாக மாற்றிக் காட்டுவோம்” என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT