Published : 29 Jan 2017 01:06 PM
Last Updated : 29 Jan 2017 01:06 PM
நாகை மாவட்டம் தரங்கம்பாடிக்கு அருகே இருக்கிறது தில்லையாடி கிராமம். சுதந்திரப் போராட்டத் தியாகி வள்ளியம்மையால் உலகறிந்த கிராமம், இன்று இன்னுமொரு பெண்ணால் பெருமையடைந்திருக்கிறது. 2016-ம் ஆண்டின் செம்மொழி விருதுக்காக மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் மு. இரா. தேவகி.
தமிழுக்காகவும் தமிழ் இலக்கிய மேன்மைக்காகவும் பங்காற்றிவரும் தமிழறிஞர்களைக் கவுரவிக்கும் வகையில் செம்மொழி விருதுகள் வழங்கப் படுகின்றன. மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்பான செம்மொழித் தமிழாய்வு, விருதுக்குரியோரைத் தேர்வுசெய்கிறது. இந்த விருது பெற பதினெண் கீழ் கணக்கு, பதினெண் மேல் கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை, தொல்காப்பியம் உள்ளிட்ட 41 நூல்களை உள்ளடக்கிய செவ்வியல் இலக்கியங்களில் குறிப்பிடத்தக்க ஆய்வுக் கட்டுரைகள் எழுதியிருக்க வேண்டும்.
தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் பங்காற்றியிருக்க வேண்டும். 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் இளம் தமிழறிஞர்களுக்கான விருதுக்குத் தேர்வு செய்கிறார்கள். மூன்று பிரிவுகளாக வழங்கப்படும் இந்த விருதில், இளம் தமிழறிஞர்களுக்கான விருதுக்காகத் தேர்வு செய்யப்பட்ட ஐந்து பேரில் தேவகியும் ஒருவர். இவருக்கு விருதுடன் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமும் வழங்கப்பட்டது.
தமிழில் முனைவர் பட்டம் பெற்றுள்ள தேவகி, மொழியியல் துறையில் அகராதியியலில் பட்டயப் படிப்பும் முடித்துள்ளார். இதுவரை 75 ஆய்வுக் கட்டுரைகளைத் தேசிய அளவிலும் உலகளவிலும் சமர்ப்பித்துள்ளார். சிங்கப்பூரில் 2010-ம் ஆண்டு நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கிலும், 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் மலேசியாவில் நடைபெற்ற 9-வது உலகத் தமிழ் மாநாட்டிலும் பங்கேற்று, ஆய்வுக் கட்டுரைகளை வாசித்துள்ளார்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிவரும் இவர், நாலடியார், இன்னிலை, சூளாமணி ஆகியவற்றுக்கு எளிய உரை நூல்களை எழுதியிருக்கிறார். “சிலப்பதிகாரத்தில் படைக்கப்பட்டுள்ள பெண் கதாபாத்திரங்கள் குறித்து ‘சிலம்பில் மகளிர்’ என்ற நூலையும் எழுதியுள்ளேன்” என்று சொல்லும் தேவகி, இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வியில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
“சிறிய கிராமத்திலிருந்து தொலைதூரக் கல்வியில் படித்து இத்தகைய நிலையை எட்டுவேன் என்று நான் நினைக்கவேயில்லை. என் பள்ளி ஆசிரியர்கள் சிவப்பிரகாசமும் கிருஷ்ணமூர்த்தியும் தமிழார்வத்தை ஊட்டினார்கள். சிந்தனையை வளப்படுத்தினார்கள். டெல்லியில் குடியரசுத் தலைவரின் கையால் விருதைப் பெற்றபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அப்போது பெற்றோரையும், பிறந்த மண்ணையும், தாய் மொழியையு நினைத்துக் கொண்டேன்” என்கிறார் தேவகி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT