Published : 01 Dec 2013 12:00 AM
Last Updated : 01 Dec 2013 12:00 AM
கம்பளி நூலில் என்ன செய்யலாம்? குளிருக்கு இதமாக ஸ்வெட்டர் பின்னலாம் என்பது பொதுவான பதில். ஆனால் கம்பளி நூலில் விதவிதமான கலைப்பொருட்களைச் செய்யலாம் என்பது மேட்டூரைச் சேர்ந்த கைவினைக் கலைஞர் கலைவாணியின் பதில். அச்சடித்ததுபோன்ற இழைக்கோலங்களை வரைவதில் துவங்குகிறது இவரது படைப்பாற்றல். அது அலங்காரப் பொருட்கள், ஓவியங்கள், ஃபேஷன் நகைகள் என தனது எல்லைகளை விரிவாக்கிக் கொண்டே போகிறது. அம்மாவின் கலைத்திறமையும் வழிகாட்டுதலும்தான் இதற்குக் காரணம் என்கிறார் கலைவாணி.
“அம்மாவுக்கு நிறைய கைவினைக் கலைகள் தெரியும். அதனால் அம்மாவே எனக்குக் குருவாகவும் மாறிவிட்டார். நேரத்தை வீணடிக்கக்கூடாது என்பது என் அம்மாவின் அன்புக்கட்டளை. அதனால் பள்ளி விடுமுறை நாட்களில் கையும் கலையுமாகப் பொழுது கழியும். அந்தக் காலத்திலேயே தபால் மூலம் ஓவியப் பயிற்சி எடுத்துக் கொண்டேன். ஒரு முறை காந்தி ஜெயந்தியன்று காந்தியடிகளின் படத்தை வரையச் சொன்னார்கள். அதில் வெற்றி பெற்ற நான், கலெக்டர் கையால் பரிசு வாங்கினேன்.
அந்த வெற்றி தந்த ஊக்கம்தான் கலைகளை ஆர்வமுடன் கற்றுக் கொள்ள கைகொடுத்தது. புதிதாக எந்தக் கலைப்பொருளைப் பார்த்தாலும் வீட்டுக்கு வந்ததும் அதைச் செய்து பார்த்துவிடுவேன்” என்கிறார் கலைவாணி. சில கலைகளை, கற்றுத் தேர்ந்தவர்களிடம் சென்று கற்றுத் தேர்ந்திருக்கிறார். பல கலைகளில் இவர் சுயம்பு. பார்க்கிற அனைத்துப் பொருட்களிலும் கலையம்சத்தைத் தேடுகிற தேடல்தான் பேரன், பேத்தி எடுத்த பிறகும் கலைவாணியை, கைவினைக் கலைஞராக தொடர வைத்திருக்கிறது.
நீங்களும் பங்கேற்கலாம்
பார்த்ததுமே உங்களுக்குள் இருக்கும் கலை உணர்வு மெல்லத் தலைகாட்டுகிறதா? உடனே அதை வெளிப்படுத்துங்கள். அது புகைப்படமோ, ஓவியமோ, ஆடைகளில் வரையும் அலங்கார டிசைனோ எதுவாக இருந்தாலும் உங்கள் படைப்புகளை அனுப்புங்கள், உலகறியச் செய்கிறோம். penindru@kslmedia.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் உங்கள் படைப்புகளை அனுப்பலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment