Last Updated : 07 Aug, 2016 11:49 AM

 

Published : 07 Aug 2016 11:49 AM
Last Updated : 07 Aug 2016 11:49 AM

முகம் நூறு: வில்லுக்கு ஒரு கன்யாகுமாரி!

பக்கவாத்தியக் கலைஞராக, பிரதானக் கலைஞராக, புதிய முயற்சிகளில் ஈடுபடுபவராக, அடுத்த தலைமுறைக்குப் பயிற்றுவிக்கும் ஆசிரியராக (எம்பார் எஸ். கண்ணன், கீபோர்ட் சத்யநாராயணா, ‘கிடார்’ பிரசன்னா ஆகியோர் இவருடைய சீடர்கள்)… இப்படி சகல கோணங்களிலும் சுடர் விட்டுப் பிரகாசிக்கும் அரிதான கலைஞர்களில் ஒருவர் ஏ. கன்யாகுமாரி. பத்ம விருது உட்பட பல விருதுகளைப் பெற்றிருக்கும் வயலின் வாத்தியக் கலைஞரான இவர், சங்கீத உலகின் மிகப் பெரிய கவுரவமாக மதிக்கப்படும் மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி விருதுக்கு இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்த விருதைப் பெறவிருக்கும் முதல் பெண் வயலின் கலைஞர் கன்யாகுமாரிதான். இவரது இசைப் பங்களிப்புக்கு வயது 50.

துவார மங்கதாயாரு, டி.ருக்மணி, லால்குடி பிரம்மானந்தம் ஆகிய மூத்த பெண் வயலின் கலைஞர்களின் தொடர்ச்சியாகக் கர்னாடக இசை உலகில் வயலின் கலைஞராகத் தடம்பதித்தார் கன்யாகுமாரி. அவரின் வில்லிலிருந்து புறப்பட்ட ஆனந்த ராகங்கள், இசையில் ஆழமான ஈடுபாடு கொண்டிருப்பவர்களை மட்டுமல்ல சாமானியர்களையும் ஒருங்கே மெய்மறக்கச் செய்தன.

“மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி விருதுக்கு உங்களைத் தேர்வுசெய்திருக்கிறோம் என்று அதன் தலைவர் என். முரளி என்னிடம் தொலைபேசியில் கூறியபோது மிகவும் சந்தோஷப்பட்டேன். என்னுடைய குருமார்களின் கருணையாலும் இறைவனின் அருளாலும்தான் இது நிகழ்ந்திருக்கின்றது” என்று அமைதியாகச் சொல்கிறார் கன்யாகுமாரி.

இசையின் தொடக்கம்

ஆந்திர மாநிலத்தின் விஜயநகரம் பகுதியில் பாரம்பரியமாக இசையை ஆராதனை செய்யும் குடும்பத்தில் பிறந்தார் கன்யாகுமாரி. இவரின் தந்தை ராமரத்னம், ஜெயலஷ்மி இருவரும் கன்யாகுமாரியை இவதூரி விஜயேஷ்வர ராவிடம் வயலின் கற்பதற்கு அனுப்பினார்கள். இவர்தான் கன்யாகுமாரியின் முதல் வயலின் குரு. அதன்பின் சங்கீத கலாநிதி எம். சந்திரசேகரிடமும் வயலின் பயிற்சியை எடுத்துக்கொண்டார். அடுத்து, டாக்டர் எம்.எல். வசந்தகுமாரியிடம் 19 ஆண்டுகளுக்கும் மேலாக பக்கவாத்தியமாக வயலின் வாசித்தார். “எம்.எல்.விக்கு வயலின் வாசிப்பதே அவரிடம் கற்றுக்கொள்வதற்குச் சமம்” என்று சொல்லும் கன்யாகுமாரி, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கதிரி கோபால்நாத்தின் சாக்ஸபோன் நிகழ்ச்சிகளிலும் பக்கவாத்தியமாக வயலின் வாசித்துவருகிறார்.

கன்யா பாணி

பாடுவதைப் போலவே வயலினை வாசிக்கும் திறமை பெற்றவர் கன்யாகுமாரி. “எப்போதும் சுடர்விட்டுக் கொண்டிருக்கும் அந்தக் கன்னியாகுமரி அன்னையின் மூக்குத்தியைப் போன்றது இந்தக் கன்யாகுமாரியின் இசையும்” என்று புகழ்ந்திருக்கிறார் புகழ்பெற்ற இசை விமர்சகரான சுப்புடு.

“சென்னைக்கு வந்த ஆரம்ப காலத்தில் சாருமதி ராமச்சந்திரன், பம்பாய் சகோதரிகளுக்கு முதலில் வாசிக்கத் தொடங்கி, பட்டம்மாள், பாலமுரளி கிருஷ்ணா ஆகிய மூத்த கலைஞர்கள், டாக்டர் ரமணி, டாக்டர் எஸ்.கல்யாணராமன், ஓ.எஸ்.தியாகராஜன், சிக்கில் சகோதரிகள், வேதவல்லி உட்பட பல கலைஞர்களுக்கும் பக்கவாத்தியமாக வயலின் வாசித்திருக்கிறேன்” என்றார் கன்யாகுமாரி.

வயலினுக்குக் கிடைத்த முக்கியத்துவம்

பிரதான வயலின் கலைஞராக அமெரிக்காவுக்குப் பயணமான முதல் பெண் வயலின் கலைஞர் என்னும் பெருமையும் கன்யாகுமாரிக்கு உண்டு. இங்கிலாந்து, மெக்ஸிகோ, சுவிட்சர்லாந்து, கனடா, துபாய், மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, இலங்கை என உலகின் பல நாடுகளிலும் தன்னுடைய வயலின் இசையால் ரசிகர்களை மயங்க வைத்துக்கொண்டிருக்கும் கன்யாகுமாரிடம், ‘நம்முடைய பாரம்பரியமான வீணைக்குப் பதிலாக அயல்நாட்டு இசைக் கருவியான வயலின் பக்கவாத்தியத்துக்கு வந்தது எப்போது?’ என்றால், “முத்துசுவாமி தீட்சிதரின் சகோதரர் பாலுசாமி தீட்சிதர்தான் வயலினை முதன்முதலாகப் பக்கவாத்தியமாக பயன்படுத்தியிருக்கிறார்” என்று சொன்னார். “வீணையில் ஃபிரட் இருப்பதால் அதில் தொடர்ச்சியாக நாதத்தைக் கொண்டுவர முடியாது. வயலினில் பாட்டு பாடுபவரின் ஸ்ருதியில் ஒரு தொடர்ச்சியைக் கொண்டுவர முடியும். இந்த வசதியால்தான் வயலின் கர்னாடக இசை மேடைகளில் பக்கவாத்தியமாக இடம்பிடித்தது” என்றும் விளக்கினார்.

ஏழு மலை ஏழு ராகம்

கர்னாடக இசையைக் கற்றுக்கொள்வதற்கு உதவும் சிடிக்களை வெளியிட்டிருக்கும் கன்யாகுமாரி, திருப்பதியில் இருக்கும் சேஷாத்ரி, நீலாத்ரி, கருதாத்ரி, அஞ்சனாத்ரி, விருஷாபாத்ரி, நாராயணாத்ரி, வெங்கடாத்ரி ஆகிய ஏழு மலைகளின் பெயரில் ஏழு புதிய ராகங்களை உருவாக்கி அந்த ராகங்களில் அன்னமாச்சார்யாவின் ஏழு கிருதிகளைப் பிரபலப்படுத்தினார். கர்னாடக இசை உலகுக்கும், ஆன்மிகத்துக்கும் கன்யாகுமாரியின் மிகச் சிறந்த பங்களிப்பு இது.

எம்.எஸ். அளித்த பட்டம்

எம்.எஸ்.சுப்புலட்சுமி-சதாசிவம் தம்பதியுடன் கன்யாகுமாரி அமர்ந்திருக்கும் ஒரு ஒளிப்படத்தை அவரிடம் காண்பித்து, “இது எந்த சந்தர்ப்பத்தில் எடுத்த படம் என நினைவிருக்கிறதா?” என்றோம்.

“கர்னாடக இசைத் துறையில் என்னுடைய 25 ஆண்டு கால சேவையைப் பாராட்டி சர்வாணி சபா ஒரு விழா நடத்தியது. அந்த விழாவுக்கு வந்திருந்த எம்.எஸ். சுப்புலட்சுமியம்மா அவர்கள் என்னைப் பாராட்டிப் பேசி ‘தனுர்வீணா பிரவீணா’ என்னும் பட்டத்தை எனக்கு அளித்தார். அந்தச் சமயத்தில் அவர்களுடன் எடுத்துக்கொண்ட படம்தான் இது. அவருடைய நூற்றாண்டு விழா இது. அவரின் நினைவைப் போற்றும் வகையில் மும்பை ஷண்முகானந்தா சபையில் பல்வேறுபட்ட 100 வாத்தியங்களைக் கொண்டு சத வாத்திய சம்மேளனம் என்னும் நிகழ்ச்சியை நடத்தவிருக்கிறேன்” என்றார்.

கிரிக்கெட் இசை

இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டுக்கு இருக்கும் அபரிமிதமான வரவேற்பு கன்யாகுமாரியின் கவனத்தைக் கவர்ந்தது. கிரிக்கெட் விளையாட்டில் பேட்ஸ்மேன் சிக்ஸர் அடிப்பது, பந்து வீசுபவரின் தவறால் நோ-பால் ஆவது, பேட்ஸ்மேன் போல்டாவது… இப்படி கிரிக்கெட்டின் 13 விதமான செயல்களுக்கு 20 விதமான இசை நறுக்குகளை கிரிக்கெட் குறித்த ஒரு அனிமேஷன் படத்துக்கு உருவாக்கி வைத்திருக்கிறார் கன்யாகுமாரி.

ஃபியூஷனும் வாசிக்கலாம்

1980-களிலேயே கன்யாகுமாரி நடத்தியிருக்கும் வாத்தியலஹரி நிகழ்ச்சிகள் மிகவும் பிரபலமானவை. ‘ஃபியூஷன் எனப்படும் கலப்பிசையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்றால், “கர்னாடக இசை வசப்பட்டவர்களுக்கு எந்தப் பாணி இசையும் வசப்படும். மேற்கத்திய இசை, இசைக்குறிப்புகளையும், ஸ்தாயியையும் (octaves) அடிப்படையாகக் கொண்டவை. கர்னாடக இசையின் தனித்தன்மை அதன் கமகமும், மனோ தர்மமும்தான் (கற்பனை வளம்). அதனால்தான் மேற்கத்திய இசை தெரிந்தவர்களும் இன்றைக்கு கர்னாடக இசையை ஊன்றிப் படிக்கிறார்கள்” என்று புன்னகையுடன் முடித்தார் கன்யாகுமாரி.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x