Published : 11 Sep 2016 11:42 AM
Last Updated : 11 Sep 2016 11:42 AM
உலகின் எந்தப் பகுதியில் இருக்கும் இந்தியர்களும் தங்களின் கலாச்சார அடையாளத்தை, கலையின் மேன்மையை நிரூபிக்க சென்னையை நோக்கியே படையெடுக்கின்றனர். சமீபத்தில் அப்படி வந்த இருவர் – ஸ்ரேயா சுரேஷ் (பரதநாட்டியம்), அன்விதா ஹரிஹரன் (சாக்ஸபோன் கலைஞர்). இருவேறு அரங்கங்களில் ஒலித்த சலங்கை ஒலியும் சாக்ஸபோன் ஒலியும், வரி வடிவமாக உங்களின் கண்களுக்கு இங்கே!
சலங்கை ஒலி
சுதா, சுரேஷ் இருவருமே இங்கிலாந்தில் பணிபுரியும் இந்திய மருத்துவர்கள். இவர்களின் மகள் ஸ்ரேயா சுரேஷ். அங்கு செயின்ட் ஃபிரான்சிஸ் கல்லூரியில் 6-வது ஃபார்ம் படிக்கும் ஸ்ரேயா, புகழ்பெற்ற நடனமணியான திவ்யா கஸ்தூரியிடம் ஏழு வயதிலிருந்தே பரதநாட்டியத்தையும் கர்னாடக இசையையும் முறையாக பயிற்சி பெற்றுவருகிறார்.
45 டிகிரியில் உபதேசம்
அன்றைய நிகழ்ச்சியின் அலாரிப்பைத் திருப்புகழ் அழகு செய்தது. தயானந்த சரஸ்வதியின் ‘போ சம்போ’ பாடலில் கருணை, ரவுத்திரம் என அடுத்தடுத்து ஸ்ரேயாவின் முகத்தில் நவரசங்களும் வெளிப்பட்டன. முருகனின் அற்புதங்களை விவரிக்கும் வர்ணத்தை ஆடினார். முழுக்க முழுக்க ஆங்கிலேய நாட்டில் அந்த நாட்டுக்குரிய கலாச்சார பின்னணியில் வாழ்ந்தாலும், இந்திய தத்துவங்களின் சாரமாக விளங்கும் புராண சம்பவங்களின் அர்த்தங்களை முழுவதுமாக அனுபவித்து ஆடினார் ஸ்ரேயா. இந்த வர்ணத்தைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்த திவ்யா கஸ்தூரியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஸ்ரேயாவுக்குத்தான் கூடுதல் பொறுப்பு. ஏனென்றால் அந்த வர்ணம் அவருடைய குருவின் குருவான உடுப்பி லஷ்மிநாராயண் அவர்களின் தயாரிப்பு. முருகன் தனக்குக் கீழே அமர்ந்திருக்கும் சிவனுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசிக்கும் காட்சியை மேடையில் ஸ்ரேயா 45 டிகிரி சாய்ந்து அபிநயித்த விதத்துக்கு அரங்கில் கிடைத்தது பலமான கைத்தட்டல்.
சாக்ஸபோன் இசை
தென் அமெரிக்காவில் சிகாகோ பகுதியில் வசிப்பவர் அன்விதா ஹரிஹரன். பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிக்குச் செல்லவிருக்கும் அன்விதா, தென் அமெரிக்காவின் சிகாகோ பகுதியில் நடக்கும் இந்தியர்களின் திருமண நிகழ்ச்சிகள், கோயில் திருவிழாக்களில் தன்னுடைய சாக்ஸபோன் இசையால் கேட்பவர்களை மகிழ்வித்துவருபவர்.
இசைக்காக வலசை வரும் பறவை
“பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது ஸ்கூல் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் கிளாரிநெட் வாசிப்பதற்குச் சொல்லிக் கொடுத்தார்கள். ஒருமுறை நாங்கள் வசிக்கும் பகுதியில் டாக்டர் சுமந்த் சுவாமிநாதன் சாக்ஸபோன் வாசிக்கும் நிகழ்ச்சியைப் பார்த்தேன். அவரிடம், “கிளாரிநெட் வாசிக்கும் என்னால் சாக்ஸபோன் வாசிக்க முடியுமா?” என்று கேட்டேன். அவர் எனக்கு சாக்ஸபோன் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினார். அப்போது எனக்கு 11 வயது” என்கிறார் அன்விதா.
தொடக்கத்தில் அன்விதாவுக்கு சாக்ஸபோன் சொல்லிக்கொடுத்த டாக்டர் சுமந்த் இனிமேல் அவரின் குரு கதிரி கோபால்நாத்திடமே பயிற்சியைத் தொடரச் சொன்னார். கடந்த ஏழாண்டுகளுக்கும் மேலாக சாக்ஸபோன் இசையைக் கற்றுக் கொள்வதற்கு சென்னைக்கு வலசைவரும் ஓர் அயலகப் பறவையாகிவிட்டார் அன்விதா.
எட்டாண்டுகளாக நடக்கும் சென்னை மார்கழி திருவிழா, சிகாகோவில் நடக்கும் தியாகராஜர் உற்சவம், கிளீவ்லேண்ட் தியாகராஜர் திருவிழாவிலும் தொடர்ந்து இசை நிகழ்சசிகளை நடத்தியிருக்கிறார். சிகாகோ தியாகராஜர் உற்சவத்தின்போது நடத்தப்படும் போட்டிகளில் பங்கெடுத்து வெற்றிபெற்றிருக்கும் இவர், கிளீவ்லேண்ட் தியாகராஜா ஆராதனையில் பங்கெடுத்து இசை சார்ந்த பயிற்சிகளைப் பெறுவதற்கான ஊக்கத் தொகையைப் பெற்றிருக்கிறார்.
இசைப் பாலம்
“திருமண நிகழ்ச்சிகளில் கனமான ராகங்களில் அமைந்த வர்ணங்களையும், கீர்த்தனைகளையும் வாசிப்பேன். அதேநேரத்தில் சாமான்ய ரசிகர்களை மகிழ்விப்பதற்காக டூயட் படத்தில் என்னுடைய குருநாதர் வாசித்த ‘அஞ்சலி… அஞ்சலி புஷ்பாஞ்சலி’ பாடலையும் வாசிப்பேன். சாமானியர்களையும் இசை அறிந்தவர்களையும் இணைக்கும் பாலமாக என்னுடைய இசை இருக்க வேண்டும்” என்கிறார் அன்விதா. அன்விதா என்றால் பாலம் என்று பொருள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT