Published : 27 Oct 2014 06:19 PM
Last Updated : 27 Oct 2014 06:19 PM
நாமக்கல் மாவட்டம் புதுப்பாளையம் பஞ்சாயத்தில் இருக்கும் சாணார் புதூர் கிராமத்தைச் சேர்ந்த அமுதா காலையில் எழுந்ததும் வீட்டு வேலையை அவசர அவசரமாக முடிக்கிறார். பிறகு அந்த ஊரில் உள்ள குழந்தைகள், பெண்களைப் பார்க்கச் செல்கிறார். குழந்தைகளிடம் தன் சுத்தம் பற்றியும் கழிப்பறை பற்றியும் பேசுகிறார். திறந்தவெளியில் மலம் கழிப்பதில் உள்ள கேடுகளை எடுத்துச் சொல்கிறார். வீட்டில் கழிப்பறை இருக்க வேண்டியதன் அவசியத்தையும் விளக்குகிறார். அமுதா மட்டுமல்ல, அவரைப் போல் பல பெண்கள் இதுபோன்ற சுகாதார சேவையைச் செய்துவருகிறார்கள்.
சுகாதாரம் என்பது பெயரளவுக்கும் இல்லாத கிராமங்களில் கழிப்பறையின் அத்தியாவசியம் குறித்து எடுத்துச் சொல்வது இவர்களுடைய வேலை. இந்தியாவில் 13 கோடி வீடுகளில் கழிப்பறை வசதி கிடையாது. இன்றும் பல கிராமங்களில் புதர்களை நோக்கிச் செல்வது நடந்துகொண்டுதான் இருக்கிறது.
காத்திருக்கும் ஆபத்துகள்
வீட்டில் கழிப்பறை இல்லாததால் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தைத் தேடிச் செல்லும் பெண்களுக்காகக் காத்திருக்கும் ஆபத்துக்கள் குறித்து சொல்லித் தெரியவேண்டியதில்லை. திறந்தவெளி கழிப்பிடங்களால் ஏற்படுகிற சுகாதார சீர்கேடுகளும் அதிகம். கழிப்பறை இல்லாதது எல்லோருக்குமே சுகாதாரக் கேடு என்றாலும் பெண்களுக்கு இதனால் கெடுதலும் தர்மசங்கடங்களும் அதிகம். சிறுநீரக நோய்தொற்றில் ஆரம்பித்து பல நோய்கள் காத்திருக்கும். இதை எல்லாம் கிராம மக்களுக்குப் பிரச்சாரங்கள் மூலம் எடுத்துச் சொல்லும் வேலையைத்தான் இந்தப் பெண்கள் செய்துவருகிறார்கள்.
சுகாதாரத்தை பரப்பும் பணியையும் சுகாதாரப் புரட்சியையும் நடத்தி வரும் இந்தப் பெண்களின் பணி அளப்பரியது. இவர்கள் நாமக்கல் பகுதியைச் சுற்றியுள்ள கிராமப்புரங்களில் சுகாதாரப் பரப்பாளர்களாக செயல்பட்டு வருகிறார்கள். இந்தப் பெண்கள் கிராமங்களில் வீடு வீடாகச் சென்று அங்குள்ளவர்களிடம் கழிப்பறை பற்றியும் ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை இருக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் பேசுகிறார்கள்.
“பேசிப் பேசியே நாங்கள் மாற்றத்தை கொண்டுவருகிறோம்” என்கிறார் அமுதா. “ஆரம்பத்தில் இது ரொம்பக் கடினமாக இருந்தது” என்று சொல்கிறார் நாமக்கல் மாவட்டம் திப்ரமஹாதேவி கிராமத்தைச் சேர்ந்த பானு. “என்னதான் குழந்தைகளிடம் பேசினாலும் பெற்றோரை ஒப்புக்கொள்ள வைப்பது கொஞ்சம் கஷ்டமான வேலைதான்” என்கிறார் அவர்.
சாதிக்கும் கூட்டமைப்பு
இந்தக் கிராமங்களில் பெண்கள் சுயஉதவி குழுக்கள் போல ‘பெண்கள் சொசைட்டி’ ஏற்படுத்த இந்தப் பெண்கள் முயற்சி எடுக்கிறார்கள். ‘சானிடேஷன் கூட்டமைப்பு’ என்று இந்தக் குழுவுக்கு பெயர். அதன் மூலம் மாதம்தோறும் பணம் சேமித்து, அந்தப் பணத்தில் கழிப்பறை கட்ட அறிவுறுத்துகிறார்கள். அத்துடன் லீஃப் சொசைட்டி போன்ற அமைப்புகள் கழிப்பறை கட்ட அவர்களுக்குக் கடன் வசதியைப் பெற்றுத் தருகின்றன.
வாட்டர் அண்ட் சானிடேஷன் ப்ரோமொட்டர்கள் என்று இவர்களுக்குப் பெயர். இந்தப் பெண்களின் துணையோடு சாணார் புதூரில் இது வரை 68 கழிப்பறைகள் லீஃப் சொசைட்டி சார்பில் கட்டப்பட்டிருக்கின்றன. திப்ரமஹாதேவி மற்றும் அருகருகே இருக்கும் குக்கிராமங்களில் 200க்கும் அதிகமான கழிப்பறைகள் லீப் சொசைட்டி மூலம் கட்டப்பட்டிருக்கின்றன.
கழிப்பறை மட்டும் கட்டப்பட்டால் போதுமா? அதனை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க வேண்டுமே. இந்தப் பயிற்சியையும் இந்தப் பெண்கள் அளிக்கிறார்கள்.
லீஃப் சொசைட்டியில் 20 வாட்டர் அண்ட் சானிடேஷன் ப்ரோமொட்டர்கள் இருக்கிறார்கள். “பெண்கள் தாங்கள் சேமிக்கும் பணத்தில் வீட்டு உபயோகப் பொருட்கள்தான் வாங்க வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர கழிப்பறை கட்டிக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதில்லை. அதை நாங்கள் மாற்றி வருகிறோம்” என்று சொல்கிறார் லீஃப் சொசைட்டியின் இயக்குநர் எஸ்.எல். சத்திய நேசன்.
பெண்கள் நினைத்தால் எதையும் நடத்திக் காட்டலாம் என்பதை இந்தக் கிராமத்துப் பெண்கள் நிரூபித்திருக்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT