Published : 11 Jun 2017 03:05 PM
Last Updated : 11 Jun 2017 03:05 PM
யானையைக் கட்டித் தீனி போட முடியுமா? முடியும் என்கிறார்கள் பாலக்காடு சகோதரிகள்.
“டேய் பாபு, எந்தடா ஒனக்கு வேணும்?” என்று ஜெயஸ்ரீ கேட்டதும் மண்ணை வாரி முதுகில் போட்டுக்கொண்டிருந்த அந்த யானை, திரும்பிப் பார்த்து துதிக்கையை ஆட்டி சமிக்ஞை செய்தது. யானை கொட்டடியின் மூலையில் குவிந்து கிடந்த பச்சைத் தென்னங்கீற்றுகளைப் போட்டவுடன் வேகமாகச் சாப்பிட்டது.
பாலக்காடு கல்பாத்தி கிராமத்தில் சாத்தபுரம் பாபு யானையையும் அதை வளர்த்துவரும் ஜெயஸ்ரீ, லட்சுமி, சாவித்திரி ஆகியோரையும் அறியாதவர் யாருமில்லை. 40 ஆண்டுகளுக்கு மேலாக யானை வளர்க்கும் இந்தக் குடும்பத்தின் பின்னணி சுவாரசியமானது.
சாத்தபுரம் பிரசன்னமகா கணபதி கோயில் நாராயணய்யருக்கு, ‘யானை அப்பய்யர்’ என்ற பெயரும் உண்டு. இவர்தான் மூன்று சகோதரிகளின் தந்தை. யானை, மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகள் வளர்ப்பதைத் தன் பொழுதுபோக்காக வைத்திருந்தார். 40 ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் சிதம்பரத்துக்குப் புறப்பட்டார்.
மகள்களிடம் சிதம்பரத்திலிருந்து என்ன வாங்கி வரவேண்டும் என்று கேட்டார் அப்பய்யர். “யானை வாங்கிட்டு வாங்க” என்று மூவரும் வேடிக்கையாகச் சொன்னார்கள். அப்பா வாங்கிவரும் யானை எப்படி இருக்கும் என்று சகோதரிகள் பேசிக்கொண்டனர். மண் யானை வாங்கி வருவார் என்றார் ஜெயஸ்ரீ. இல்லை, மரத்தால் செய்த யானைதான் என்றார் லட்சுமி. இரண்டும் இல்லை, பிளாஸ்டிக் யானைதான் என்பது சாவித்ரியின் கருத்து.
சில நாட்கள் கழித்து வீதியில் மணியோசை கேட்டது. சத்தம் கேட்டுச் சகோதரிகள் வீட்டைவிட்டு வெளியே வந்தனர். மணியோசையை எழுப்பியபடி ஒரு யானை வந்துகொண்டிருந்தது. உடன் அப்பய்யர்! சகோதரிகள் ஆனந்த அதிர்ச்சியில் சிலை போல நின்றனர். அன்று முதல் இன்றுவரை யானை இவர்களின் வாழ்வின் அங்கமாகவே மாறிவிட்டது. யானைக்கு பாபு என்று பெயர் வைத்தார்கள்.
“ஆரம்பத்துல யானைகிட்ட போறதுக்கே பயமா இருக்கும். எங்க அப்பா, பாகனை அமர்த்தினார். கோயில் உற்சவம், திருவிழா, திருச்சூர் பூரம்னு யானையோடு அப்பாவும் போயிட்டு வருவார். வருடத்தில் பாதி நாள் ஊர், ஊரா யானை போயிடும். மீதி நாட்கள் கொட்டடியில் இருக்கும். சீக்கிரமே யானைக்கும் எங்களுக்கும் நல்ல புரிதல் வந்துவிட்டது. யானை கோயில் உற்சவத்துக்குப் போனால் நாங்களும் போவோம். சோறு ஆக்கிக் கொடுப்போம். இன்னொரு யானையும் வாங்கினார் அப்பா. அந்த யானைக்குக் கேசவன்னு பேர் வச்சோம். 25 வருஷத்துக்கு முன்னாடி எங்க வீட்ல பொருளாதாரக் கஷ்டம். சமாளிக்க முடியாம ரெண்டு யானைகளையும் வித்துட்டார் அப்பா. யானையில்லாம நாலஞ்சு வருஷம் எங்க மனசு ரொம்பக் கஷ்டப்பட்டது. எத்தனை கஷ்டம் இருந்தாலும் யானை இல்லாமல் இருக்கிறது பெருங்கஷ்டம்னு ஒரு யானையை வாங்கிட்டு வந்தார் அப்பா. அதுதான் இது. அசாம் வியாபாரிகிட்ட வாங்கியது. முதல் யானையின் நினைவா இதுக்கும் பாபுன்னே பேர் வச்சோம். அப்பா பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னால இறந்துட்டார். யானையை மத்தவங்களுக்குக் கொடுக்க மனமில்லை. நாங்களே பராமரிக்க ஆரம்பிச்சோம். ஒரு யானைப் பாகன் வேலைக்கு இருக்கார்” என்று தன் நினைவுகளில் பின்னோக்கித் திரும்பினார் ஜெயஸ்ரீ.
ஐந்தாறு நாட்கள் கோயில் திருவிழாவுக்கு யானையுடன் பாகனை மட்டும் அனுப்பிவிடுகிறார்கள். உள்ளூர் திருவிழா என்றால் சகோதரிகளும் செல்வார்கள். யானைக்கு மஸ்து காணும்போது பாகனே கவனமாகப் பார்த்துக்கொள்கிறார். இதுவரை பாபுவால் எந்தப் பிரச்சினையும் இவர்களுக்கு வந்ததில்லை. சாவித்திரி திருமணமாகிச் சென்றுவிட்டார். லட்சுமிக்கு வயதாகிவிட்டதால், யானைக்கு உணவு மட்டும் சமைக்கிறார். மற்ற வேலைகளை ஜெயஸ்ரீ கவனித்துக்கொள்கிறார்.
“நாங்க ரெண்டு பேரும் ஏன் கல்யாணம் செய்துக்கலைன்னு கேட்கறாங்க. எங்க பிராப்தம் யானையுடன்தான் என்றாகிவிட்டது. யானை இல்லைன்னா இந்த வீடு வெறும் கட்டிடம்தான். யானையோடு ஊனும் உயிருமா வாழற இந்த வாழ்க்கையே போதும்” என்கிறார் ஜெயஸ்ரீ.
படங்கள்: கா.சு.வேலாயுதன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT