Published : 01 Jan 2017 02:08 PM
Last Updated : 01 Jan 2017 02:08 PM
“வறுமையும் ஏதாவது சாதிக்க ணும்ங்கிற உந்துதலும்தான் வீட்டுக்குள் அடைந்து கிடந்த என்னை வெளியே வரவைத்தன” என்று தன்னம்பிக்கையுடன் பேசுகிற சரஸ்வதி, திருச்சி வாளாடியைச் சேர்ந்தவர்.
பருத்தியிலும் சணலிலும் ஹேண்ட் பேக், பர்ஸ், பைகள், ஃபைல்கள், எக்சிக்யூடிவ் பைகள், ஃபோல்டர்கள் போன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட பொருட்களைச் செய்து, விற்பனை செய்துவருகிறார். இதுவரை 700-க்கும் மேற்பட்ட பெண்களுக்குப் பயிற்சியளித்து, அவர்கள் தொழில்முனைவோராக மாற வழிகாட்டியிருக்கிறார்.
“என் சொந்த ஊரான நாகர்கோவிலில் பெண்கள் சும்மா இருக்க மாட்டாங்க. வீட்டு வேலை முடிந்ததும் வயர் கூடை, அலங்காரப் பொருட்கள்ன்னு ஏதாவது ஒரு கைத்தொழிலைப் பொழுதுபோக்காகச் செய்துகிட்டே இருப்பாங்க. அப்படித்தான் நானும் கூடை, சேர், சோஃபா போன்றவற்றை வயரில் பின்னக் கத்துக்கிட்டேன். கணவர் டெய்லர். மூணு குழந்தைகள். வருமானம் போதவில்லை. வீட்டுக்குள்ளேயே இருந்தா முன்னேற முடியாதுன்னு நினைச்சேன். வாளாடி வந்து கூடை, சேர், சோஃபா செய்து விற்றேன். அப்படியும் பொருளாதாரப் பிரச்சினை தீரலை. குழந்தைகளை எப்படிப் படிக்கவைக்கப் போறோமோன்னு பயம் வந்துடுச்சு. புதுசா ஏதாவது தொழில் செய்யலாம்னு முடிவு பண்ணி, சணலில் பை செய்யத் தொடங்கினேன். வாழ்க்கைக் கொஞ்சம் மாறத் தொடங்குச்சு” என்று சொல்லும் சரஸ்வதி, கணவரின் உதவியால் குடும்பத்தையும் தொழிலையும் சமாளித்துக்கொண்டே முதுகலை பட்டத்தைப் பெற்றிருக்கிறார்.
மேடு பள்ளம்
“தொழில் தொடங்கும்போது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லை. செய்கிற பொருளெல்லாம் விற்பனையானால் போதும்னு நினைச்சேன். அப்போ தேசிய சணல் வாரியம் சார்பில் கண்காட்சி நடத்தினாங்க. அதில் எனக்கும் வாய்ப்பு கொடுத்தாங்க. அங்கே நிறைய ஆர்டர் கிடைச்சுது. புதிய டிசைன்களின் அறிமுகமும் கிடைச்சுது. நபார்டுல லோன் வாங்கினேன். கொல்கத்தாவுல நடந்த தேசிய கண்காட்சியில், என் பைகளோட நேர்த்தியைப் பாராட்டி சான்றிதழ் கொடுத்தாங்க. அப்படியே டில்லி, மும்பைன்னு போனேன். குடும்பம் கொஞ்சம் உயர்ந்துச்சு. டில்லியில் கண்காட்சி முடிஞ்சு ஊருக்கு ரயில் ஏறினப்போ, பர்ஸைத் திருடிட்டாங்க. கண்காட்சியில் கிடைச்ச லாபம், ஊருக்குத் திரும்ப வச்சிருந்த பணம் எல்லாம் போச்சு. மொழி தெரியாத ஊர்ல ரொம்ப திண்டாடிட்டோம். ஆனாலும் தைரியத்தோட அந்த நஷ்டத்தையும் கடந்துவந்துட்டேன். முடிந்த அளவுக்குப் பெண்களுக்கு உதவணும்ங்கற எண்ணத்துல எனக்குக் கிடைக்கும் ஆர்டர்களைப் பலருக்கும் பிரிச்சி கொடுக்கறேன்” என்று சொல்லும் சரஸ்வதி, மாவட்ட மகளிர் திட்டம், நபார்டு வங்கி சார்பில் தமிழகம் முழுவதும் பயணம் செய்து, பெண்களுக்குப் பயிற்சிளித்துவருகிறார்.
பொறுமை அவசியம்
“எந்தத் தொழிலிலும் நிலைக்கக் கொஞ்ச நாளாகும். அதுவரை பொறுமை அவசியம். எதிர்பாராத விதமாக வர்ற நஷ்டத்தைச் சமாளிக்க தைரியம் வேணும். ஒருமுறை 300 பைகளுக்கு ஆர்டர் வந்தது. டிசைனில் நேராக வர வேண்டிய கோடு குறுக்காக வந்துடுச்சி. அந்த ஆர்டரை வாங்க மறுத்துட்டாங்க. நிறைய நஷ்டம். அதிலிருந்து மீண்டு வருவதில்தான் நம் திறமையே இருக்கு. பெண்களுக்குப் பயிற்சி கொடுக்கும்போது இந்த மாதிரி அனுபவங்களையும் சொல்லி, விழிப்புணர்வு ஏற்படுத்துவேன். நிறையப் பேர் என்னைப் பார்த்து சணல் பை தயாரிக்கறாங்க. புத்தாண்டில் தமிழ்நாடு திறன் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப் போறேன். இந்தத் தொழில் மூலம் என் பிள்ளைகளைப் பட்டதாரிகளாக்கிட்டேன். உழைப்பு எப்பவுமே நம்மைக் கைவிடாதுங்கற பாடத்தை எனக்கு வாழ்க்கை கத்துக்கொடுத்திருக்கு” என்கிறார் சரஸ்வதி.
படங்கள்: ஜி. ஞானவேல் முருகன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT