Published : 08 Dec 2013 04:41 PM
Last Updated : 08 Dec 2013 04:41 PM
வாழ்க்கையில் எத்தனையோ தடைகளைத் தாண்டித்தான் முன்னேற வேண்டியிருக்கிறது. அதையே விளையாட்டிலும் கடைப்பிடிக்கிற ஹேமா, தமிழகத்தின் நட்சத்திர தடகள வீராங்கனை. தொடரோட்டம், தடைதாண்டுதல் என தான் தேர்ந்தெடுக்கும் பிரிவுகளில் எல்லாம் அச்சு பிசகாமல் வெற்றி வாகை சூடிவிடுகிறார். கோயம்புத்தூர் நேரு ஸ்டேடியத்தில் பயிற்சி செய்தபடியே பேசுகிறார்.
“அப்பா, அம்மா, நான் இதுதான் என் குடும்பம். அப்பா ஜெயபால், மில் தொழிலாளி. அம்மா ராஜாமணி, இல்லத்தரசி. நான் ஸ்கூல் படிக்கும்போது என் அப்பா கபடி விளையாடுவதைப் பார்த்திருக்கிறேன். இதுதான் விளையாட்டுக்கும் எங்கள் குடும்பத்துக்கும் உள்ள உறவு. மற்றபடி எந்தப் பின்னணியும் இல்லாமல் நானேதான் இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தேன். போட்டிக்களத்தில் ஓடும்போது ஒரு உத்வேகமும் ஜெயிக்க வேண்டும் என்கிற வெறியும் வரும். அதுதான் என்னை எப்போதும் வெற்றியின் வழிநடத்துகிறது” என்று அறிமுகம் தருகிறார் ஹேமா.
தோல்வியால் கிடைத்த வெற்றி
தான் பங்கேற்ற முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியதுதான் வெற்றிக்கான முதல்படி என்கிறார்.
“என் முதல் போட்டியில் எனக்குப் பரிசு கிடைக்கவில்லை. அது என்னை பாதிக்கவும் இல்லை. ஒரு போட்டியில் பங்கேற்கும் அனைவரும் வெற்றிபெறுவது இல்லையே. ஒரு வெற்றியாளர் இருக்கும்போது என்னைப்போல தோற்றுப்போனவர்களும் இருப்பதுதானே இயல்பு? அடுத்தமுறை நிச்சயம் ஜெயித்தே ஆகணும் என்கிற உறுதியோடுதான் மைதானத்தைவிட்டு வெளியே வந்தேன். அடுத்தப் போட்டியில் நான் வெற்றியும் பெற்றேன்” என்கிற ஹேமா, இதுவரை நான்கு சர்வதேசப் போட்டிகளிலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட தேசிய அளவிலான போட்டிகளிலும் வெற்றிபெற்றிருக்கிறார்.
சமீபத்தில் புனேயில் நடந்த ஆசிய தடகளப்போட்டியில் வெண்கலப் பதக்கம் வாங்கியது, இவரது வெற்றிப்பாதையின் அடுத்த மைல்கல்.
தேவை புரவலர்கள்
2014ஆம் ஆண்டு நடக்க இருக்கும் காமன்வெல்த் போட்டியிலும் ஆசியப்போட்டிகளிலும் வெற்றிபெறுவதுதான் தன் அடுத்த இலக்கு என்று உத்வேகத்துடன் சொல்கிறார். போட்டி இருக்கிறதோ இல்லையோ தினமும் கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் பயிற்சியில் ஈடுபடுகிறார். இந்த இடைவிடாத ஈடுபாடும் முனைப்பும்தான், ஹேமாக்கு வெற்றிக்கனியை எளிதாக எட்டிப்பிடிக்கும் ஆற்றலைத் தருகிறது.
போட்டிகளில் பங்கேற்பதற்கான செலவைச் சமாளிக்க முடியாத நிலையில் புரவலர்களும் (ஸ்பான்ஸர்ஸ்) இல்லாமல் போராடி வெற்றிபெறுவது சவால் நிறைந்ததாக இருக்கிறது என்று சொல்கிறார் இவர்.
“நான் கோயம்புத்தூர் எல்.ஐ.சி டிவிஷனல் அலுவலகத்தில் அசிஸ்டெண்ட் கிளர்க்காகப் பணிபுரிகிறேன். போட்டிகளில் கலந்து கொள்ள என் வருமானத்தை மட்டுமே நம்பியிருக்கிறேன். ஸ்பான்ஸர்கள் கிடைத்தால் பணம் குறித்த கவலையின்றி போட்டியில் முழுகவனத்தையும் செலுத்தமுடியும்” என்று வருத்தத்தைப் பகிர்ந்துகொள்கிறார் ஹேமா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT