Published : 09 Apr 2017 08:27 AM
Last Updated : 09 Apr 2017 08:27 AM
ஓர் ஆணுக்கு, தான் ஆணாக இருப்பதில் தனிப்பட்ட அனுபவமும் பெருமையும் இருக்கிறதென்றால் பெண்ணுக்கும் அவ்வாறே தனித்த அனுபவமும் பெருமையும் உண்டு. உடலளவிலான வேறுபாடு இவ்வுலக வாழ்க்கையை வெவ்வேறாக அமைத்துவிடுகிறது என்று சிலர் வாதிடலாம். ஆனால், இந்த வேறுபாடுகள் உணவு, உடை போன்ற நுகர்பொருள்கள் அளவிலும், இன்பம், துன்பம், காதல், வெறுப்பு, சினம், உள்ளிட்ட உணர்வுகள் அளவிலும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை.
ஆண்மை, பெண்மை என்று வரையறுக்கப்பட்ட குணங்களுக்கு ஆண், பெண் ஆகியோர் உடல் உறுப்புகளோடு தொடர்புள்ளதா என நிரூபிக்க இதுவரை அறிவியல்பூர்வமான எந்த ஆய்வும் இல்லை. இதற்காகவா நாம் ஆண், பெண் வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டு உயர்வு, தாழ்வு கற்பிக்க வேண்டும்? ஒரு பெண் காலங்காலமாக வரலாறு, பண்பாட்டின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட பிளவுகளையும், ஒடுக்குமுறைகளையும் சமூகக் கட்டுப்பாடுகளையும் தாண்டி பல துறைகளில் சாதனைகள் படைத்துத் தான் ஆணுக்குச் சமமானவள் என்று நிரூபிக்கும்படியான கட்டாயம் நிலவுகிறது.
சாதனைகள் ஒரு பக்கம் இருக்கட்டும், அன்றாட வாழ்வில் பொதுவெளியில் ஒரு சாதாரணப் பெண் மிக மிகச் சாதாரணச் செயலைச் செய்யக்கூட மிகப் பெரிய துணிச்சல் தேவைப்படுகிறது. சாலையில் எதுவும் சிந்திக்காமல் பராக்கு பார்த்துக்கொண்டு நடப்பது என்பது ஒரு சாதனையா? அது ஒரு சாதாரணச் செயல். இதை ஓர் ஆண் செய்வதுபோல் ஒரு பெண்ணால் செய்ய முடியாதா என்ன? ஆனால், இருவருக்கும் ஒரே வகையான அனுபவமாக இருப்பதில்லை. மற்றவர்கள் தன்னைப் பார்க்கிறார்கள் என்ற உணர்வு மனதளவில்கூடப் பதிந்துவிடாத இயல்புநிலை ஓர் ஆணுக்கு இருக்கும்போது, பெண் அதே சாலையில் நடந்து செல்லும்போது பாதுகாப்பு உணர்வுடன் நடக்கும் நிலை உள்ளது. ஒரு பெண்ணுக்கு உடல் குறித்த அச்சம் கொள்ளும் சூழல் இருந்தால் அது பாலியல் பலாத்காரம் குறித்த அச்சமாக மாறிவிடுகிறது.
சாலையில் உள்ள தேநீர்க் கடை பெஞ்சில் ஆண்கள் தினசரியைப் படித்துத் தேநீர் அருந்தும் காட்சி இயல்பானது. ஆனால், பெண்கள் அப்படிச் செய்தால் அதுவே வியப்புக்குரிய காட்சியாகிவிடும். இப்படித்தான் அன்றாட வாழ்வின் சிறிய இன்பம் தரும் செயல்கள்கூட ஏதோ நிலவுக்குச் செல்வது போல் கடினமாகிவிடுகின்றன பெண்களுக்கு. பல சமயங்களில் நான் நினைப்பேன் எந்த வேலையோ காரணமோ இல்லாமல் எதையாவது கொறித்துக் கொண்டும் மனிதர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டும் சாலையில் நடக்க வேண்டும் என்று. சில சமயங்களில் முயன்றும் பார்த்திருக்கிறேன். சில நிமிடங்களிலேயே வெவ்வேறு வகையில் தடங்கல் வந்து நான் ஒரு பைத்தியக்காரப் பெண் என்ற உணர்வை ஏற்படுத்திவிடும்.
ஒரு நாள் டெல்லி நேரு பூங்காவில் மாலை மங்கிவரும் நேரம் நடை பயின்று கொண்டிருந்தேன். அப்போது சில ஆண்கள் புல்தரையில் கை, கால்களைச் சர்வ சுதந்திரமாகப் பரப்பியவாறு படுத்து ஓய்வெடுத்துக்கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்ததும் எனக்கு அப்படிப் படுத்து, பரந்து மிதந்த வானவெளியைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. கொஞ்சம் நடமாட்டம் இல்லாத பகுதியைத் தேர்வு செய்து மிகவும் அதிகமாகக் கைகால்களைப் பரப்பாது ஓரளவு வசதியாகப் படுத்துக்கொண்டேன். வானம் அடர் நீலமாகிக் கருமை கொள்ளும் நேரம் என்பதால் நட்சத்திரங்கள் மிக மங்கலாகத் தோன்றத் தொடங்கின. இன்னும் சிறிது நேரம்தான் அப்படிப் படுத்திருக்க முடியும் என்பதை அவை உணர்த்தின.
ஆனால், அதுவரை கண்களுக்குப் புலப்படாதிருந்த பூங்கா காவலாளி என் பக்கம் வந்து குனிந்து உற்றுநோக்க, திடுக்கிட்ட நான் எழுந்து என்னவென்று கேட்டேன். அவர், நான் யார் எங்குத் தங்கியிருக்கிறேன் என விசாரித்தார். பிறகு, “உங்களுக்குத் தெரியாதது அல்ல, ஒரு பெண் தனியாகப் பொது இடங்களில் இப்படிப் படுக்கக் கூடாது” என்று பணிவாகச் சொன்னார். எனக்கும் விரைவில் அங்கிருந்து கிளம்ப வேண்டியிருந்ததால் நான் அவரிடம் அதிகம் பேசாமல் கிளம்பிவிட்டேன். அப்போது அங்கிருந்த பலர், சில பெண்கள் உட்பட, நான் ஏதோ செய்யக் கூடாத செயலைச் செய்துவிட்டதுபோல் ஏளனப் பார்வையை வீசினார்கள்.
நான் ஜப்பானில் மூன்று ஆண்டுகள் வசித்தேன். அந்த நாடு பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நாடு என்று கேள்விப்பட்டிருந்தேன். அங்கு சென்ற சில மாதங்களிலேயே அது உண்மை என்று தெரிந்துகொண்டேன். ஜப்பானிய நண்பர் ஒருவர் தன் மகனுடன் இரவு நடக்கச் சென்றுவிடுவார். எனது பணிக்காலம் முடியும் தறுவாயில் எனது குடும்பத்தினர் முன்னதாக இந்தியா திரும்பிவிட்டனர். தனிமையில் கிடைத்த நேரம், என்னை இரவு நடைக்கு உந்தியது. இரவு உணவுக்குப் பின் சுமார் பதினோரு மணியளவில் ஃபுஜிமிகவோக்கா மலையை இலக்காகக் கொண்டு அந்தத் திசையில் நடக்க ஆரம்பித்தேன்.
ஒன்றரை மணி நேரம் நடந்த பின்பு நதிக்கரை வந்தது. சிறிது நேரம் அருகில் இருந்த பூங்காவில் அமர்ந்து சற்று இளைப்பாறினேன். எனது பெஞ்சுக்கு அருகில் ஓர் உருவம் குளிரால் நடுங்கிக்கொண்டிருந்தது. பின்பு மீண்டும் நடக்கத் தொடங்கினேன். சற்று நேரத்தில் என்னை யாரோ பின்தொடர்வது போல் தோன்றியது. பின்னர் அந்தச் செருப்பு சத்தம் மிக அருகில் வருவதுபோல் தோன்றியது. ஓடலாம் என எண்ணியபோது செருப்பு சத்தத்துக்குரியவர் என்னைக் கடந்து வேகமாகச் சென்றதைப் பார்த்து நிம்மதி அடைந்தேன். ஒரு நல்ல சூழலிலும்கூடக் காலங்காலமாகப் பீடித்திருக்கும் அச்சம் பெண்களை விட்டு விலகுவதாயில்லை.
பொதுவெளியைப் பெண்கள் எப்போது இயல்பாக அச்சமற்றுப் பயன்படுத்த முடியும் என்ற கேள்வி இயல்பாக எழுந்தது. பெண்கள் சாதிக்க வேண்டும் என்று நினைப்பதுகூடத் தனக்கான சுதந்திரத்தை, வெளியை உருவாக்கிக்கொள்ளத்தான். வெற்றியும் சாதனைகளும் ஓரளவு நம்பிக்கையை அவர்களுக்குக் கொடுக்கின்றன. ஆனால், இன்னும் கடக்க வேண்டிய தொலைவு எவ்வளவோ இருக்கிறது.
ஆண்களைவிடப் பெண்கள் கல்வியறிவில் 20% பின்தங்கியிருக்கின்றனர். மேலும், கலாச்சாரத் தடைகள், பழமைவாதம் ஆகியவை சேரும்போது ஆணாதிக்கத்துக்கு அவை ஆணிவேராகிவிடுகின்றன. அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பெண்கள் சாதித்தால் மட்டும் போதாது. பெண் என்ற சாராம்சமே மாற வேண்டும். பெண், ஆணைவிட எவ்விதத்திலும் குறைந்தவள் அல்ல என்பதுதான் அந்தச் சாராம்சம்.
படித்த மேல்தட்டுப் பெண்கள், வர்க்கத்தினாலும் சாதியினாலும் உயர்ந்தவர்கள் என்று தங்களைக் கருதிக் கொண்டாலும், ஆண் பெண் குறித்த கருத்தாக்கம் அவர்களை ஆணுக்குக் கீழே தள்ளிவிடுகிறது. கல்வியறிவற்ற ஏழை, ஒடுக்கப்பட்ட பெண்களை மையத்தில் நிறுத்தாமல் வர்க்கம், சாதி அளவில் தங்களுக்கான வாய்ப்புகளைப் பெற்றால் போதும் என்று பெண்கள் சுயநலமாகச் செயல்பட்டால் நிபந்தனைகளற்ற சுதந்திரம் வாய்ப்பது கடினமே.
ஒன்றுபட்ட பெண்கள் இயக்கம், பெண்களின் வாழ்வாதாரமாக நிலம், கல்வி, வேலைவாய்ப்பு, அடித்தட்டுப் பெண்களின் பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றில் கவனத்தைக் குவித்தால் மட்டுமே ஒற்றுமையும் வெற்றியும் சாத்தியமாகும். ஆனால், இப்போதுள்ள சூழலில் சுயநலத்தின் அடிப்படையில் பிளவுகள் வலுப்பெற்று, அடித்தட்டுப் பெண்கள் முற்றிலும் புறக்கணிக்கப்படுகின்றனர். எனவேதான், ஒரு சாதாரணச் செயலைச் செய்வதுகூட ஒரு பெண் நெருப்பாற்றில் நீந்துவதைப் போல் கடினமாகி விடுகிறது.
கட்டுரையாளர்,
பெண்ணியச் செயல்பாட்டாளர்
தொடர்புக்கு: oviacs2004@yahoo.co.uk
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT