Published : 18 Sep 2016 11:49 AM
Last Updated : 18 Sep 2016 11:49 AM
பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் தீபா மாலிக். ரியோ நகரில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் வீல் சேரில் உட்கார்ந்தபடியே அநாயசமாக பங்கேற்று, குண்டு எறிதல் போட்டியில் இவர் வெள்ளிப் பதக்கம் வென்றபோது பார்வையாளர்கள் இமைக்க மறந்தனர்.
டெல்லியைச் சேர்ந்த 45 வயதான தீபாவுக்கு, கடந்த 14 ஆண்டுகளில் முதுகில் மூன்று அறுவை சிகிச்சைகள் செய்தபோதும் மார்புக்குக் கீழ் உடல் இயங்கவில்லை. அதற்காக அவர் சோர்ந்துவிடவும் இல்லை. மோட்டார் ஸ்போர்ட்ஸ், நீச்சல், ஈட்டி எறிதல் வீராங்கனையாகத் தன்னை மாற்றிக்கொண்டு, தன்னம்பிக்கையூட்டும் பேச்சாளராகவும் மாறினார்.
வேண்டாம் வெளிநாட்டுப் பயிற்சி
வெளிநாடுகளில் பயிற்சிகள் பெற வாய்ப்பு கிடைத்தபோதும் அதை மறுத்து டெல்லியிலேயே பயிற்சியைத் தொடர்ந்தார் தீபா. விளையாட்டில் சாதிக்க வெளிநாடுதான் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை என தீவிரமாக நம்பியவர், பயிற்சியாளர் வைபவ் சிரோஹி வழங்கிய கடும் பயிற்சிகளையும் தட்டாமல் செய்து இந்த உயரத்தைத் தொட்டிருக்கிறார்.
“என் உடலில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டபோது, அனைத்துத் தேவைகளுக்கும் பிறரைச் சார்ந்து இருக்க வேண்டும் என்பதால், நான் வீட்டோடு முடங்கிப் போவேன் என்று பலரும் நினைத்தார்கள். அதைப் பொய்யாக்க வேண்டும் என்பதற்காகவே நீச்சல், குண்டு எறிதல் என நிறையப் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினேன். அறுவை சிகிச்சை தந்த வலியும் வேதனையும் என்னை நானே உணரும் புதிய பாதையில் என்னை இட்டுச் சென்றன. பாராலிம்பிக் போட்டிக்குத் தேர்வான பின், கண்டிப்பாகப் பதக்கம் வென்றுதான் வீடு திரும்ப வேண்டும் என்று முடிவெடுத்தேன். சரியான திட்டமிடல் இந்த வெற்றியைச் சாத்தியமாக்கியிருக்கிறது. மீதமுள்ள வாழ்க்கை முழுவதும் நினைவுகூர இந்த வெற்றி போதும்” என்று சொல்லும் தீபா, தான் பெற்ற இந்த வெற்றி, நாட்டில் உள்ள பிற மாற்றுத் திறனாளிப் பெண்கள் சமூகத் தடைகளை உடைத்து, அவர்களின் கனவை நோக்கிப் பயணிக்க உந்து சக்தியாக இருக்கும் என நம்புவதாகச் சொல்கிறார். அவரது நம்பிக்கை இன்னும் பல வீராங்கனைகளை உருவாக்கும்!
“எனக்காக என் கணவர் தன் வேலையைக்கூட விட்டுவிட்டார். பைக்கராகத் தொடர்வதே என் விருப்பம். விளையாட்டு வீராங் கனையாக இருப்பது இன்னும் சவால்தான். ஆனால் நாம் பெறும் வெற்றிதான் அந்தச் சவாலுக்குக் கிடைக்கிற பரிசு!” என்கிறார் தீபா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT