Published : 05 Jun 2016 03:15 PM
Last Updated : 05 Jun 2016 03:15 PM
களையெடுக்க வந்தவர்கள் உபசரிக்கிறார்கள் என்பதற்காக, தக்காளிப் பழத்துடன் பச்சை மிளகாயையும் உப்பையும் சேர்த்துப் பிசைந்து எவ்வளவுதான் சாப்பிடுவது? வயிறு பிடிக்க வேண்டுமே! சுட்ட சீனிக்கிழங்கோடு கிராமத்து மக்களிடம் விடைபெற்று, அவர்கள் காட்டிய குறுக்குப் பாதை வழியாக நடந்தார்கள். வழிநெடுக ஆடு மேய்க்கிறவர்களும், மாடு மேய்க்கிறவர்களும், பிஞ்சையில் கோடை உழவு உழுகிறவர்களுமாக ஆட்கள் நடமாடிக்கொண்டிருந்தார்கள். சுழி சுழியாகப் பயிரிட்டிருந்த கோடை வெள்ளாமை, பசுமையோடு கண்களுக்குக் குளிர்ச்சியைத் தந்தது.
குறுக்குப் பாதை வழியாக நடந்ததால் முள் கோர்வையிட்ட இலந்தைச் செடிகளில் கனி சொக்கையாகப் பழுத்துக் கிடந்தன. சங்கனியும் வீராயியும் மடிகூட்டி இலந்தம்பழத்தைப் பிடுங்கிக்கொண்டார்கள். கத்தாழைகள் ஆங்காங்கே கும்மென்று படர்ந்திருக்க, அதன் பழத்தைப் பிடுங்கி, முள் உரசித் தின்றதில், ஏற்கெனவே வெற்றிலையால் சிவந்த வாய் இந்தப் பழத்தால் இன்னும் சிவந்துவிடும். வேலியில் படர்ந்திருந்த மிதுக்கம் பழங்களும், காரம் பழங்களும் இவர்களின் நாவுக்கு ருசி சேர்த்ததோடு வயிற்றுப் பசியையும் கொஞ்சமாக மந்தப்படுத்தியது.
வெறும் நரிவிலாஞ்சாவிகளும், சாமிப் புற்களும், சிறு சிறு செடிகளும் இவர்கள் போகும் பாதையில் அடர்ந்து கிடந்ததால் காடைகளும் கதுவாலிகளும் (கவுதாரி) தங்கள் குஞ்சுகளோடு இவர்களின் இட வலமாக விருட்டென்று தாவிக்கொண்டு போயின. அவற்றை எட்டிப் பிடிக்க அவர்கள் கைகள் பரபரத்தன.
“கோயிலுக்குப் போறோமின்னுதேன் இந்தக் காட, கதுவாலிகளைப் புடிக்காம போறோம். அதேன் அதுகளும் நம்மளோட தொக்கக் (இயலாமை) கணக்கிட்டு நம்ம காலுக்குள்ள எம்புட்டுத் தெம்பா போவுது அபரு” என்று அங்கலாய்க்கும்போது முத்தையா சொன்னான்,
“நீ எதுக்குத்தா விசாரப்படுத. சாமியத் கும்புட்டுட்டு இந்த வழிதான வருவோம்? அப்ப வெறும் கலயத்தத்தேன் கொண்டுக்கிட்டு வருவோம். அப்ப இதுகளை யாரு விடுதா? கலயத்தை நிரப்பிடுவோமில்ல” என்றான்.
சற்று தூரத்தில் வழுக்கையான பாறையும் அதையொட்டிக் கிளை பரப்பிய அத்தி மரமும் தெரிய, அந்த அத்தி மரத்தில் இரண்டொரு தொட்டில்கள் குழந்தைச் சுமையோடு தொங்கிகொண்டிருந்தன. பாறையில் சுற்றிலும் விளிம்புக்கட்டி ஆழமான தானியம் குத்துகிற உரல் ஒன்றும் அடிக்கப்பட்டிருந்தது. ஊரை விட்டு இந்தக் காடு தள்ளியிருந்ததால் மத்தியானம் கஞ்சி குடித்துவிட்டு ஓய்வாக இருக்கும்போது தானியத்தை இந்த உரலில் இட்டுக் குத்துவார்கள் போலிருக்கிறது. அதற்கு அடையாளமாக பாறையிலேயே வரகும், குதிரைவாலியும் காய்ந்துகொண்டிருந்தன. அதோடு அத்தி மரத்தின் ஓரத்தில் பூணும், களுந்தும் கொண்ட இரு உலக்கைகள் சாய்த்து வைக்கப்பட்டிருந்தன. இந்தப் பூணும் களுந்தும் இரும்பினால் செய்யப்பட்டவை. பூண், ஒரு பெரிய டம்ளரை உலக்கையில் நுனியில் கவுத்திவைத்ததுபோல இருக்கும். களுந்து என்பது அதே டம்ளரை, உலக்கையின் மறு நுனியில் செருகிவைத்ததுபோல இருக்கும்.
களுந்துப் பக்கம் மாவு, வற்றல் இவற்றை இடிப்பார்கள். பூண் பக்கம் தானியங்களைக் குத்துவார்கள். இப்படி நாள் முழுக்க வீட்டிலும் சரி, காட்டிலும் சரி எப்போதும் தானியங்களைக் குத்திக்கொண்டேயிருப்பதால் இரும்பால் போட்ட பூணும் களுந்தும் வெள்ளிபோல பளபளவென்று இருக்கும். அப்போதெல்லாம் நினைத்த உடனே சோறாக்கிவிட முடியாது.
எல்லா தானியங்களையும் இரண்டு அல்லது மூன்று முறை குத்தி, புடைத்துத்தான் அரிசியாக்க வேண்டும். அப்போதுகூட ‘கப்பி’ இருக்கும். கடைசியாக மூன்றாம் முறையாகக் குத்த வேண்டும்.
இந்தத் தானியங்களில் சாமைக்கு இரண்டு உமி, குதிரைவாலிக்கு நான்கு உமி. தினை, காடகண்ணிக்கு ஒரே உமி என்பதால் சீக்கிரம் குத்துப்பட்டுவிடும். ஆனால் வரகு இருக்கிறதே, அதற்கு ஏழு உமி. அதைக் குத்துகிறவர்கள் தவித்துத்தான் போவார்கள். அதனால் குத்தமுடியாதவர்கள் திருகை கொண்டு திரிப்பார்கள். அதற்கென்று தனியாகப் ‘பட்டு’ போட்டு திருகை இருக்கும். பட்டு என்றால் நிஜப்பட்டு அல்ல. திருகை அளவுக்கு முரட்டுச் சாக்கை வெட்டிக்கொள்வார்கள். பிறகு திருகையைச் சுற்றிலும் கரைத்த கரம்பையை குளுகுளுவென்று தடவி, அதன் மீது இந்தச் சாக்கை விரித்துவிடுவார்கள். பிறகு அதன் மீது கரம்பையைப் பூசி, மேலும் ஒரு சாக்கை விரித்துக் காயவைத்துவிட்டால் அது கப்பென்று பசை போட்டதுபோல் ஒட்டிக்கொள்ளும். பிறகு பொட்டாகத் தெள்ளிய சாம்பலை லேசாகத் திருகையில் உள்ள சாக்கு மீது போட்ட பிறகு, மேல் திருகையை அதன் மீது வைப்பார்கள்.
கட்டுரையாளர், எழுத்தாளர். தொடர்புக்கு: arunskr@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT