Last Updated : 22 Jan, 2017 03:44 PM

 

Published : 22 Jan 2017 03:44 PM
Last Updated : 22 Jan 2017 03:44 PM

கமலா கல்பனா கனிஷ்கா: சம வேலைக்கு சம ஊதியம்!

தோழியின் காரை எடுத்துக்கொண்டு வந்தாள் கனிஷ்கா. கமலா பாட்டியும் கல்பனா ஆன்ட்டியும் காரில் ஏறியதும் ‘பொதுவாக என் மனசு தங்கம்’ என்ற பாடல் ஒலித்தது.

“சிச்சுவேஷன் சாங் கனிஷ்கா! ஜல்லிக்கட்டுக்கு மல்லுகட்டும் இளைஞர்களைச் சமூக வலைத்தளங்கள்தான் இணைச்சிருக்கு. அதன் வீச்சும் தாக்கமும் என்னன்னு புரிய வச்சிருக்கு இந்தப் போராட்டம். ஆனா இதே ஊடகத்துலதான் த்ரிஷாவையும் அவமதிச்சிருக்காங்க. ஜல்லிக்கட்டை ஆதரிப்பவர்களுக்கு உள்ள உரிமையும் கருத்து சுதந்திரமும் அதை எதிர்ப்பவர்களுக்கும் இருக்கு. கருத்தைக் கருத்தால் மட்டுமே எதிர்கொள்ளணும். சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துறவங்க நாகரித்தையும் கத்துக்கணும்” என்று படபடத்தார் கமலா பாட்டி.

“கரெக்ட் பாட்டி. கேரளாவில் சமூக வலைத்தளத்தின் உதவியால பழங்குடிப் பெண்களுக்கு நிரந்தர வருமானம் கிடைச்சிருக்கு. வளைகுடா நாடுகளில் வாழற கேரள மக்கள் உதவியோடு ஆரம்பிக்கப்பட்ட குடை செய்யும் தொழிலில் அட்டப்பாடி பழங்குடிப் பெண்கள் ஈடுபட்டிருக்கிறாங்க. ஒருநாளைக்கு 700 ரூபாய்வரை சம்பாதிக்க முடியுது” என்றார் கல்பனா ஆன்ட்டி.

“ஜெர்மனி அமைச்சரவை ஒரு சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிச்சிருக்கு. எல்லா நிறுவனங்களும் தங்களோட ஆண், பெண் ஊழியர்கள் சம வேலைக்குச் சம ஊதியம் பெறுவதை உறுதி செய்யணும் என்பதுதான் அந்த மசோதா. இது நாடாளுமன்றத்துல நிறைவேறுனாதான் சட்டமாகும். இப்படி ஒரு மசோதாவைத் தாக்கல் செஞ்சதுக்காகவே அவுங்களுக்கு ஒரு சபாஷ்! அதுவும் ஜெர்மனி மகளிர் நலத்துறை அமைச்சர் மானூயலா ஷ்வீஸிக், ‘நிதி மேலாண்மையைப் பத்தி பேசறதுக்கு பெண் தகுதியற்றவள்ங்கற மாயையை உடைக்கணும். அதற்கு ஆணுக்கு நிகராகப் பெண்ணுக்கு ஊதியம் கொடுக்கணும்’னு சொல்லியிருக்காங்க. இது வரவேற்கத்தக்கது” என்றாள் கனிஷ்கா.

“ஜாம்பியா நாட்டுப் பெண்கள் இனி தங்கள் மாதவிடாய் காலத்துல ஒருநாள் பணியிலிருந்து விடுப்பு எடுத்துக்கலாம். மாதவிடாய் பற்றி வெளிப்படையா பேசுறதுகூட அசிங்கம்னு நினைச்ச ஒரு நாட்டுல இந்த அறிவிப்பு புரட்சிகரமானது. ஜப்பானில் 1947-ல்

இருந்தே மாதவிடாய் விடுப்பு அமலில் இருக்கு. தென் கொரியா, தைவான், பிரிட்டன் நாடுகளிலும் இது இருக்கு. நம்ம நாட்டுலதான் இன்னும் வரலை” என்றார் கல்பனா ஆன்ட்டி.

“நம்ம நாட்டிலும் இருக்கு கல்பனா. ஹைதராபாத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் இண்டஸ்ட்ரி ஆர்க். இந்த நிறுவனத்தின் பெண் ஊழியர்கள் மாதவிடாயின்போது தேவைப்பட்டால் ஒருநாள் விடுப்பு எடுத்துக்கலாம்” என்றார் கமலா பாட்டி.

“டெல்லி மெட்ரோ ரயிலில் பெண்கள் தங்கள் பாதுகாப்புக்காக நான்கு அங்குலத்துக்குக் குறைவான கத்திகளை எடுத்துட்டுப் போக அனுமதிச்சிருக்காங்க தெரியுமா?” என்றாள் கனிஷ்கா.

“கத்தி எல்லாம் தீர்வாகுமா? இதுக்குப் பதிலா பெண்ணை சக மனுஷியா, கவுரவமா நடத்த ஆண்களுக்குப் பயிற்சியளிக்கலாம்” என்றார் கமலா பாட்டி.

“ஹாலிவுட் நடிகை மெரில் ஸ்ட்ரீப் பேசியதைக் கேட்டீங்களா? 74-வது கோல்டன் குளோப் விருது விழாவில் வாழ்நாள் சாதனையாளருக்கான விருது பெற்றபோது, அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நடவடிக்கைகளை விமர்சித்தார். அவர் பேச்சுக்கு அரங்கம் அதிர்ந்தது. ‘நமது தேசத்தில் அதிகம் மதிக்கப்படும் நாற்காலியில் உட்கார ஒருவர் அழைக்கப்பட்டபோது, அவர் மாற்றுத்திறனாளி பத்திரிகையாளர் ஒருவரைப் போல நடித்துக் காட்டி பரிகாசம் செய்தார். ஒரு அவமரியாதை, அவமரியாதைக்கே வழிவகுக்கும். வன்முறை, வன்முறையையே விதைக்கும். அதிகாரத்தில் இருப்பவர்கள் இப்படிச் செய்யும்போது அங்கு நம்மை நாம் இழக்கிறோம். இந்த நிகழ்வு என்னை மிகவும் பாதித்துவிட்டது’ என்று ஒரே போடாக போட்டார் மெரில் ஸ்ட்ரீப்!”

“அங்கே எல்லாம் எவ்வளவு கருத்து சுதந்திரம் இருக்கு! ஒபாமாவோட இறுதி உரையில், ‘மிஷேல் எனக்குச் சிறந்த தோழியாகவும் இளைய தலைமுறையினருக்கு முன்மாதிரியாகவும் இருந்திருக்கிறார். அவரது பணியை அவரே தீர்மானித்தார். அதற்காக என்னிடம் அனுமதி கேட்கவில்லை. வெள்ளை மாளிகையை அனைத்து மக்களுக்கும் சொந்தமானதாக மாற்றினார். என் மகள்கள் மாலியாவும் சாஷாவும் புத்திசாலிகள், அழகானவர்கள். அதைக் காட்டிலும் அவர்கள் இருவரும் கனவுகளை உடையவர்கள்’ என்று பேசும்போது அவர் கண்கள் கலங்கின. அமெரிக்க அதிபர்களில் ஒபாமா நிச்சயம் வித்தியாசமானவர்” என்றார் கல்பனா ஆன்ட்டி.

“உத்தரகாண்டில் ஹால்ட்வனி மருத்துவமனையில் ஒரு பெண் வயிற்றுவலியுடன் சேர்க்கப்பட்டார். எக்ஸ்-ரே எடுத்துப் பார்த்தபோது ஒன்றும் தெரியவில்லை. குழந்தை பிறக்கவில்லை என்ற கோபத்தில் சப்பாத்தி தேய்க்கும் கட்டையைப் பிறப்புறுப்பில் சொருகிவிட்டார் தன் கணவர் என்று மருத்துவரிடம் அந்தப் பெண் சொல்லியிருக்காங்க. அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து, 40 செ.மீ. நீளமுள்ள சப்பாத்திக் கட்டையை எடுத்திருக்காங்க. ‘இப்படியொரு கொடூரத்தை நாங்க கேள்விப்பட்டதே இல்லை. அந்தப் பெண்ணின் உள் உறுப்புகள் ரொம்ப மோசமா பாதிக்கப்பட்டிருக்கு. காவல்துறைக்குத் தகவல் சொல்லிட்டோம். இந்தப் பெண்ணின் கணவர் மாயமாகிவிட்டார்’னு தலைமை மருத்துவர் சொல்லிருக்கார்”

“ஐயோ… கேட்கும்போதே குலை நடுங்குது பாட்டி. ஒருபக்கம் மக்கள்தொகை அதிகரிச்சிட்டே போகுது. இன்னொரு பக்கம் குழந்தையின்மை பிரச்சினை விஸ்வரூபம் எடுக்குது. எவ்வளவு ஆதரவற்ற குழந்தைகள் இருக்காங்க… அவங்களைத் தத்தெடுத்து வளர்க்கிற அளவுக்கு நம்ம மக்களுக்கு இன்னும் பரந்த மனசு உருவாகலை போல” என்றாள் கனிஷ்கா வேதனையுடன்.

அப்போது ரேடியோவில் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சேலம் வானவன் மாதேவி மரணமடைந்தார் என்ற செய்தி ஒலிபரப்பானது.

“மஸ்குலர் டிஸ்ட்ராபி என்ற தசைச் சிதைவு நோயால் பத்து வயதில் பாதிக்கப்பட்ட வானவன் மாதேவியின் 27 வருடப் போராட்டம் ஓய்ந்தது. தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவங்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் சேலத்துல அவங்க நடத்தின ஆதவ் அறக்கட்டளை மூலம் மருத்துவமும் தன்னம்பிக்கையும் கொடுத்தாங்க. ரொம்ப தைரியமான பெண். சின்னப் பிரச்சினைகளுக்கெல்லாம் கவலைப்படறவங்க, வானவன் மாதேவியைப் பார்த்துத் தங்களை மாத்திக்கிட்டதாகச் சொல்லியிருக்காங்க. உதாரண மனுஷி. சமூகத்தில் தனக்கென ஒரு முத்திரையைப் பதிச்சிட்டுப் போயிருக்காங்க” என்றார் கமலா பாட்டி.

யாரும் பேசிக்கொள்ளவில்லை. கமலா பாட்டியையும் கல்பனா ஆன்ட்டியையும் அவரவர் வீட்டில் இறக்கிவிட்டுவிட்டுக் கிளம்பினாள் கனிஷ்கா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x