Last Updated : 16 Sep, 2018 11:01 AM

 

Published : 16 Sep 2018 11:01 AM
Last Updated : 16 Sep 2018 11:01 AM

வானவில் பெண்கள்: இங்கே பூண்டு உரித்துத் தரப்படும்

வாணலியில் கடுகு பொரிந்துவிடுவதற்குள் அடுத்ததாகப் போடவேண்டிய பூண்டை அவசர அவசரமாகத் தரையில் நசுக்கி உரிக்கும்போதுதான் பூண்டு உரிப்பது என்பது எவ்வளவு சிரமமான வேலை என்று தெரியும். யாராவது பூண்டு உரித்துக் கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என நினைப்பவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறார்கள் புதுச்சேரியைச் சேர்ந்த ஸ்ரீ அன்னபூர்ணா மகளிர் சுயஉதவி குழுவினர்.

இந்தக் குழுவில் 27 பேர் உள்ளனர். இவர்கள் கேட்டரிங், மெஹந்தி, சமோசா விற்பனை, தேநீர் விற்பனை ஆகியவற்றுடன் தற்போது பூண்டு உரித்துக் கொடுக்கும் தொழிலையும் செய்துவருகின்றனர்.

“நான் டிப்ளோமா நர்சிங் முடித்ததும் கல்யாணமாகிவிட்டது. இப்போ பிள்ளைகள் எல்லாம் வளர்ந்துவிட்டார்கள். வீட்டுவேலை முடிந்த பிறகு கிடைக்கிற நேரத்தில் ஏதாவது ஒன்றைச்  செய்யலாம் என்பதற்காகத்தான் மகளிர் குழுவைத் தொடங்கினேன். மற்ற குழுக்களைப்  போல் அல்லாமல் குழுவினரின் முயற்சியால்  சிறு நிறுவனங்களில்  ஆர்டர் பிடித்து, குழு உறுப்பினர்களுக்குத் தெரிந்த கைத்தொழிலைத் தொடங்கலாம் என முடிவுசெய்தோம்.

bagyajpg

தற்போது கோயில் நிகழ்ச்சிகள், தனியார் நிறுவன மீட்டிங், வீட்டு விசேஷங்களுக்கு மெஹந்தி போடுவது, சமையல் போன்ற சிறு ஆர்டர்கள் கிடைக்குது.  அப்படித் தோன்றியதுதான் பூண்டு உரித்துக் கொடுக்கும் வேலை. இதற்காக சூப்பர் மார்க்கெட்களுக்குப் போய் ஆர்டர் பிடித்தோம். ஒவ்வொரு முறையும் கடை கடையா ஏறி இறங்க முடியாது. அப்பதான் முகநூலில் எங்கள் குழுவின் சார்பில் பூண்டு உரித்துக் கொடுக்கப்படும்னு என் தம்பி மனைவி ஃபேஸ்புக்ல எழுதினாங்க. அதைப்  பலர் பார்த்ததும் இப்ப நிறைய ஆர்டர் கிடைச்சிருக்கு” என்கிறார் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பாக்யலட்சுமி.

இவர்கள் 100 கிராம் முதல் ஒரு கிலோவுக்கும் மேல் பூண்டு உரித்துத் தருகிறார்கள். இதில் குறைவான தொகையை மட்டுமே லாபமாகப் பெறுவதால் நிறைய ஆர்டர் கிடைக்கிறது. இதில் கிடைக்கும் அந்தச் சொற்ப லாபம், சம்பந்தப்பட்ட குழு உறுப்பினர்களுக்கே கொடுக்கப்படுகிறது.  விநாயகர் சதுர்த்தியன்று ஆர்டர் எடுத்து கொழுக்கட்டை செய்து கொடுத்திருக்கிறார்கள்.

“அரசு வங்கியில் லோன் கேட்டிருக்கிறோம். அது கிடைத்தவுடன் சுற்றுச்சூழலுக்கு உகந்த பேப்பர் கப், தட்டு, சானிட்டரி நாப்கின் இப்படி நிறைய வேலைகளைச் செய்யத் திட்டமிட்டிருக்கிறோம்” என்கிறார் பாக்யா.

பாக்யலட்சுமி

தொடர்புக்கு: sriannapoorna1982@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x