Last Updated : 30 Sep, 2018 03:48 PM

 

Published : 30 Sep 2018 03:48 PM
Last Updated : 30 Sep 2018 03:48 PM

திரை முகம்: திரையில் ஒளிர்ந்த பெண்ணியம்

இந்திய சினிமாவின் முதல் தலைமுறை பெண்ணிய சினிமா இயக்குநர்களில் ஒருவர் கல்பனா லாஜ்மி. அவரது முதல் படமான ‘ஏக் பால்’, எழுத்தாளர் மைத்ரேயி தேவி எழுதிய சிறுகதையை மையமாகக் கொண்டது. ஷப்னா ஆஸ்மி, நஸ்ருதின்ஷா, பரூக் ஷேக் ஆகியோர் முன்னணிக் கதாபாத்திரங்களாக நடித்த இத்திரைப்படம், உறவுகளில் பெண்களின் தேர்வுக்கான இடத்தைப் பற்றி பேசியது.

வர்க்க வேறுபாடு, சாதிய ஏற்றத்தாழ்வு நிலவும் சூழலில் தனது அந்தரங்க வேதனைகளுக்காக அழுவதற்குக்கூட வாய்ப்பற்ற ஒரு பெண்ணின் கதையான ‘ருடாலி’ திரைப்படம்தான் கல்பனா லாஜ்மிக்கு தேசிய அளவில் அங்கீகாரத்தை வழங்கியது. ‘ருடாலி’ திரைப்படம் மகாஸ்வேதா தேவியின் கதையை அடிப்படையாகக் கொண்டது. இத்திரைப்படத்தில் ஒப்பாரி பாடும் பெண்ணாக நடித்த டிம்பிள் கபாடியாவுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.

பாலினம், பாலீர்ப்பு ஆகியவை மையநீரோட்ட சினிமாவிலேயே விவாதப் பொருளாக மாறியிருக்கும் நிலையில் திருநங்கைக்கும் அவரது அம்மாவுக்கும் நிலவும் முரண்பாடுகளைப் பேசிய திரைப்படம் ‘தர்மியான்’.

குடும்ப வன்முறை சார்ந்து ரவீனா டான்டனை நாயகியாக்கி இவர் எடுத்த ‘தாமன்’ படம் போதிய கவனத்தைப் பெறவில்லை. பாலியல் தொழிலாளியாக சுஷ்மிதா சென் நடித்து, புரோகிதர்களின் போலித்தனங்களைத் தோலுரிக்கும் ‘சிங்கரி’ படமும் ஏமாற்றத்தையே தந்தது.

குரு தத்தின் மருமகளான கல்பனா லாஜ்மி, பாலிவுட்டிலும் ஆசிய இந்திய அளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவருடைய அகால மரணம் திரைத்துறைக்கு மிகப் பெரிய இழப்பு. இயக்குநர் ஷியாம் பென்கலின் உதவி இயக்குநராகத் தனது திரை வாழ்வைத் தொடங்கியவர் கல்பனா லாஜ்மி. பிரபல பாடலாசிரியர் குல்சார் இவரது ஆரம்ப காலத் திரைப்படங்களில் திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதியுள்ளார். கல்பனா லாஜ்மியின் வாழ்க்கையில் அசாமிய இசையமைப்பாளர், திரைப்பட இயக்குநர் டாக்டர் புபென் ஹசாரிகா பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவர் வழியாகத்தான் வடகிழக்கு மாநிலங்களின் கலாச்சாரத்தை கல்பனா லாஜ்மி தெரிந்துகொண்டார். கல்பனா எடுத்த தொலைக்காட்சி நெடுந்தொடரான ‘லோஹித் கினாரே’வைத் தயாரித்தவர் புபென் ஹசாரிகா.

ஒருகட்டத்தில் புபென் ஹசாரிகாவின் பணிகளில் உதவிபுரிபவராகத் தனது நிலையை கல்பனா மாற்றிக் கொண்டார். கடந்த ஆண்டு சிறுநீரகப் புற்றுநோய் என்று கண்டறியப்பட்ட நிலையில் மருத்துவமனையில் கடந்த வாரம் காலமானார். பெண்களை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் அரிதாகவே வெளிவந்த ஒரு காலகட்டத்தில் அந்தச் சவாலை ஏற்ற அரிய ஆளுமை கல்பனா லாஜ்மி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x