Last Updated : 09 Sep, 2018 11:54 AM

 

Published : 09 Sep 2018 11:54 AM
Last Updated : 09 Sep 2018 11:54 AM

பெண்கள் 360: பாசிசத்துக்கு எதிரான குரல்

தூத்துக்குடியைச் சேர்ந்த 22 வயது லூயி சோபியா, கனடாவில் கணித ஆராய்ச்சிக் கல்வி பயின்றுவருகிறார். அவர் தூத்துக்குடிக்கு வந்த விமானத்தில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் பயணித்தார். விமானத்தை விட்டிறங்கிப் பைகளைப் பெற்றுக் கொள்ளும் இடத்தில், “பாசிச பா.ஜ.க. அரசு ஒழிக” என்று தமிழிசையைப் பார்த்து சோபியா முழக்கமிட்டுள்ளார். அப்போது அமைதியாக இருந்த தமிழிசை, விமான நிலையத்தில் கட்சித் தொண்டர்களிடம் இதைத் தெரிவித்தார். அவர்கள் சோபியாவைக் கும்பலாகச் சூழ்ந்துகொண்டு இழிவான வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

காவல்துறையின் சமரச முயற்சியை ஏற்க மறுத்த தமிழிசை, “அறிவு முதிர்ச்சியும் பக்குவமும் இருந்ததால்தான் ‘பாசிச பா.ஜ.க. அரசு ஒழிக’ என்று சோபியா கோஷமிட்டார்” எனக் கோபத்துடன் சொன்னார். பின்னர், அவர் அளித்த புகாரின் அடிப்படையில் சோபியாவைக் காவல்துறை கைதுசெய்தது. விமான நிலையத்தோடு முடிந்திருந்தால் சோபியாவின் முழக்கத்தோடு மட்டும் போயிருக்கும். ஆனால், தமிழிசையின் நடவடிக்கையால் பல லட்சம் மக்களின் முழக்கமாக சோபியாவின் குரல் மாறியது. சம்பவம் நடந்த அன்று டிவிட்டரில் ‘#பாசிச பாஜக ஒழிக’ என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி இந்திய அளவில் முதலிடத்தைப் பெற்றது.

எழுத்துலகின் வழிகாட்டும் ஒளி

எழுத்தாளர், நாடகாசிரியர், கவிஞர் எனப் பன்முகம் கொண்டவர் ஃபாத்திமா சுரய்யா பாஜியா. 1930-ல் ஹைதராபாத் மாகாணத்தில் பிறந்தார். உருது செவ்வியல் நாவல்களைத் தழுவி, பல நாடகங்களை எழுதியுள்ளார். பாஜியா என்றால் ‘அக்கா’ என்று அர்த்தம். பத்துக் குழந்தைகள் கொண்ட குடும்பத்தில் மூத்தவர் இவர். இலக்கிய உலகிலும் ஊடக உலகிலும் அழுத்தமாகத் தடம்பதித்த பெண்களிலும் மூத்தவர் இவரே. ஊடக உலகில் புழங்கும் பெண்களுக்கு இன்றும் இவரே வழிகாட்டும் ஒளி. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது பாகிஸ்தானில் குடியேற நேர்ந்தபோது ஒரு நூலகத்தையே தன்னுடன் சுமந்து சென்றுள்ளார்.

வறுமைக்கு நடுவே ஒன்பது குழந்தைகளை வளர்த்தெடுக்கும் பொறுப்பு அவர் மீது விழுந்தது. 1960-ல் பாகிஸ்தான் நாளிதழான ‘ஜங்’கில் எழுதத் தொடங்கினார். அவரது எழுத்துக்கு அழகான நடையுண்டு. அதில் அங்கதமும் அறிவும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கும். நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார். பெண்களின் இருப்பும் குழந்தைகளின் உலகுமே அவர் எழுத்தின் முக்கிய கருப்பொருட்கள். அவரது 88-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாகக் கடந்த வாரம் சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டது.

உணர்ச்சிகளற்ற அதிபர்

பிலிப்பைன்ஸ் அதிபராக ரோட்ரிகோ டியூட்ரெட் பதவி வகிக்கிறார். போதைப் பொருள் கடத்தலைத் தடுப்பதற்காக ஆயிரக்கணக்கானோர் அவரது ஆட்சியில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தப் படுகொலைகள் உலகெங்கும் பெருத்த அதிர்வலையையும் கடும் சர்ச்சையையும் ஏற்படுத்தின. கடந்த ஆண்டு, சிறுமிகள் வன்புணர்வு தொடர்பான அவரது பேச்சு மிகுந்த கண்டனத்துக்குள்ளானது. தற்போது அவரது சொந்த ஊரான தவாயோவில் நடந்த விழாவில் அவர் ஆற்றிய உரை அவருக்குள் ஒளிந்திருந்த வன்மத்தை உலகுக்கு வெட்ட வெளிச்சமாக்கியது.

அந்த விழாவில் பேசும்போது, “தவாயோ நகரில் பல வன்புணர்வு வழக்குகள் பதிவாகியுள்ளன. இங்கு பல அழகிய பெண்கள் உள்ளனர். அதனால்தான் அதிக அளவில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. முதலில் பெண்கள் சம்மதிக்க மாட்டார்கள். வேண்டாம் என்பார்கள், மறுப்பு தெரிவிப்பார்கள். அதனால்தான் வன்புணர்வு சம்பவம் நடக்கிறது” என்று பலமாகச் சிரித்தபடி அவர் சொன்னார். அதிபரின் பேச்சுக்கு மகளிர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. “அதிபர் அடித்த ஜோக் ஏன் இந்த அளவுக்குப் பெரிதாக்கப்படுகிறது எனத் தெரியவில்லை” என அவரது செய்தித் தொடர்பாளர் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். உணர்ச்சியற்றவர்களுக்குப் பிறர் வலியும் வேதனையும் எப்படிப் புரியும்?

penmaijpg100 

பெண்மையைக் காக்கும் பெண்கள்

பெண்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள இயலாத நிலையே இன்றும் உள்ளது. 50 வயது அங்குரி தகாடியா, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக்கும் வரதட்சிணைக் கொடுமைக்கும் எதிராகப் பசுமைப் படையை உத்தரப் பிரதேசத்தில் உருவாக்கியுள்ளார். அவரது வீட்டை ஒரு கும்பல் அபகரித்துக்கொண்டது. அவருடைய கணவர் இறந்துவிட்டார் என்ற தைரியத்தில் வலுக்கட்டாயமாக வீட்டைவிட்டு அவர் வெளியேற்றப்பட்டார்.

தன் மூன்று குழந்தைகளுடன் மிகுந்த கஷ்டங்களை அவர் அனுபவித்தார்;  சாலையோரம் வசித்தார். பூலான் தேவியாக மாறலாம் என்றுதான் முதலில் நினைத்தார். குடும்ப நலனுக்காக அந்த முடிவைக் கைவிட்டு, பெண்களை ஒன்று சேர்த்துப்  பசுமைப் படையை உருவாக்கியுள்ளார். இந்தப் படை அங்குள்ள 14 மாவட்டங்களில் இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்தப் படையில் 14 ஆயிரத்து 400 பெண்கள் அங்கம் வகிக்கிறார்கள். இந்தப் படையினர், பெண்களுக்கு எதிராக எந்த வடிவில் பிரச்சினை எழுந்தாலும் துணிச்சலுடன் சட்டத்துக்கு உட்பட்டுத் தட்டிக் கேட்கிறார்கள்.

ashrafjpg

ஜனநாயகத்தை வலுப்படுத்தும் எதிர்ப்பு

“அரசை எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களை எல்லாம் சிறைக்கு அனுப்ப வேண்டுமென்றால், தேசத்தில் பாதிப் பேர் சிறையில்தான் இருக்க வேண்டும். சோபியாவைக் கைது செய்தது, அதிலும் அவர் ‘பயங்கரவாதி’ என்ற பதத்தைப் பயன்படுத்துவது எல்லாம் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. எதிர்ப்புக் குரல்கள்தாம் ஜனநாயகத்தை வலுப்படுத்தும்.

எதிர்ப்புக் குரல்களை ஒடுக்க நினைப்பது ஜனநாயகத்தைச் சிதைக்கும் செயல். யாரையும் எதிர்த்துப் பேசக் கூடாது என்றே எங்களுக்குப் போதிக்கப்பட்டுவிட்டது. நாங்களும் அதை நம்பிவிட்டோம். அதனால்தான் இத்தனை நாள் அரசியல் புரிதலற்றவர்களாக இருந்துவிட்டோம். இப்போது அனைத்தும் புரிந்து, அதிகாரத்தைக் கேள்வி கேட்கும்போது, அதிகாரம் கோபப்படுகிறது. உங்களுக்கு ஏன் இந்த வேலை என்கிறது”.

- இசைக் கலைஞர் சோபியா அஷ்ரப். யுனி லிவருக்கு எதிராக இவர் பாடிய ‘Kodaikanal Won't’ என்ற பாடல் இவரது அடையாளம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x