Published : 16 Sep 2018 11:17 AM
Last Updated : 16 Sep 2018 11:17 AM

வானவில் பெண்கள்: ஓங்கியடித்த ஒசாகா

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இருபது வயதான நவோமி ஒசாகா இன்று டென்னிஸ் உலகில் அதிகம் உச்சரிக்கப்படும் பெயர். இந்த வருட அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியின் இறுதியாட்டத்தில் செரினா வில்லியம்ஸ் உடன் அவர் மோதினார். செரினாவின் அனுபவமும் அவர் வென்ற கிராண்ட் ஸ்லாம்களும் ஒசாகாவின் வயதைவிட அதிகம். செரினா எளிதில் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

போட்டியின் முடிவு செரினாவுக்கு மட்டுமல்லாமல் டென்னிஸ் உலகுக்கே அதிர்ச்சியை அளிக்கும்விதமாக இருந்தது. ஆம், டென்னிஸ் உலகில் முடிசூடா ராணியாகத் திகழும் செரினா வில்லியம்ஸை வீழ்த்தி முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை ஒசாகா வென்றார்.

இறுதிப் போட்டியின் நடுவே பல்வேறு இடையூறுகள். நடுவருடன் செரினாவின் மோதல், விவாதம் எனப் பல சச்சரவுகள் நடந்தன. ஒசாகாவோ நிதானமாக வெற்றியை மட்டும் நோக்கமாகக்கொண்டு விளையாடி, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் செரினாவை வீழ்த்திப் பட்டத்தை வென்றார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸில் ஜப்பான் வீராங்கனை ஒருவர் பட்டம் பெறுவது இதுவே முதல்முறை. போட்டிக்குப் பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ‘‘கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெற்ற முதல் ஜப்பான் வீராங்கனை நான் என்பது பெருமையாக உள்ளது. ஜப்பானிய மொழியில் இதை எப்படிக் கூறுவது எனத் தெரியவில்லை” எனக் கூறினார் ஒசாகா. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை ஜப்பானிய ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

ஜப்பான் தாய்க்கும் ஹைதி நாட்டைச் சேர்ந்த தந்தைக்கும் பிறந்த நவோமி ஒசாகா மூன்று வயதில் அமெரிக்காவில் குடியேறினார். ஜப்பான் டென்னிஸ் அசோசி யேஷனில் ஒசாகாவை அவருடைய தந்தை சேர்த்தார். டென்னிஸ் மீதான ஒசாகாவின் காதலுக்கு செரினா வில்லியம்ஸ்தான் காரணம்.

செரினா, தன்னுடைய முதல் கிராண்ட்ஸ்லாம் வென்றபோது, ஒசாகாவுக்கு ஒரு வயது. டென்னிஸ் ராக்கெட்டை ஒசாகா கையில் பிடித்த காலத்திலிருந்தே தனக்கு முன்னுதாரணமாக செரினாவைத்தான் எடுத்துக்கொண்டார்.

செரினாவின் ஆட்டத் திறமையை வியந்த ஒசாகா அவரைப் போலவே டென்னிஸ் விளையாட்டில் சாதிக்கத் துடித்தார். அதனையடுத்து பதினாறு வயதில் தொழில்முறை வீராங்கனையாக விளையாடத் தொடங்கினார் ஒசாகா. 2016-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முதன்முறையாகக் கலந்துகொண்டார் ஒசாகா. அந்தப் போட்டியில் அவருடைய ‘செர்வ்’-ன் வேகம் 200 கிலோ மீட்டர்.

அதன்பிறகு 2014-ம் ஆண்டு WTA Tour போட்டியில் உலகின் 19-ம் நிலை வீராங்கனையான சமந்தா ஸ்டோசரை (Samantha Stosur) வென்று கவனத்தை ஈர்த்தார். பிரெஞ்சு ஓபன், அமெரிக்க ஓபன், ஆஸ்திரேலிய ஓபன் எனப் பல கிராண்ட் ஸ்லாம்களில் கலந்துகொண்டார். கிராண்ட்ஸ்லாம் போட்டிக்கு இணையான இண்டியன் வெல்ஸ் போட்டியில் அவர் பெற்ற வெற்றி முக்கியத்துவம் வாய்ந்தது.

டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் 70-வது இடத்திலிருந்த ஒசாகா தன்னுடைய தொடர் வெற்றிகள் மூலமாக 19-வது இடத்துக்குத் தற்போது முன்னேறி உள்ளார். நிதானமும் வேகமும் திருப்பி அடிக்கும் லாகவமும் ஒசாகாவின் வெற்றி மந்திரங்கள். டென்னிஸ் அரங்கில் அடுத்த செரினாவாக ஒசாகா மாறுவாரா என்பது மில்லியன் டாலர் கேள்வி. அந்தக் கேள்விக்கான பதிலைக் காலம்தான் சொல்ல வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x