Published : 30 Sep 2018 03:47 PM
Last Updated : 30 Sep 2018 03:47 PM
வில்லுக்குப் பேர் போன அர்ஜுனனின் பெயரில் அமைந்துள்ள அர்ஜுனா விருதைப் பெற்ற முதல் இந்திய வில்வித்தை வீராங்கனை அவர். அவர் விளையாடத் தொடங்கிய காலத்தில் இந்த விளையாட்டில் சொல்லிக்கொள்ளும் அளவுக்குப் பெண்கள் இல்லை. சிறுமியாக இருந்தபோது வில்வித்தைப் போட்டிகளில் காலடி எடுத்துவைத்த அந்த வீராங்கனை, ஒலிம்பிக் போட்டிவரை பங்கேற்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தார். சர்வதேச அளவில் புகழ்பெற்றார். அவர், டோலா பானர்ஜி.
கொல்கத்தாவுக்கு அருகே உள்ள பாராநகர்தான் டோலா பானர்ஜியின் சொந்த ஊர். சிறு வயதில் மற்ற பிள்ளைகளைப் போல அல்லாமல் டோலாவுக்கு அம்பெய்தும் விளையாட்டு மீதே ஆர்வம் இருந்திருக்கிறது. அந்த விளையாட்டில் அவர் ஆர்வமாக இருக்கவே, பாராநகரில் உள்ள வில்வித்தைப் பயிற்சி மையத்தில் அவருடைய பெற்றோர் டோலாவைச் சேர்த்தனர்.
படிப்புக்குப் பங்கம் வராமல் வில்வித்தை விளையாட்டைக் கற்றுக்கொண்ட டோலா, மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்குபெறத் தொடங்கினார். படிப்படியாக முன்னேறிவந்த டோலா, 1996-ல் முதன்முறையாகத் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்றார். அதற்கு அடுத்த ஆண்டே டோலாவுக்குச் சர்வதேசப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.
அப்போது டோலாவுக்கு 17 வயதுதான். 1996-ல் சான்டியாகோவில் நடைபெற்ற இளையோர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றதுதான் இவரது சர்வதேச அறிமுகப் போட்டி. இந்தப் போட்டியில் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும், அங்கே பெற்ற அனுபவம் மற்ற போட்டிகளில் அவருக்குப் பலமாக இருந்தது. அடுத்த ஆண்டே லாங்க்வி ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றுத் தன் திறமையை வளர்த்துக்கொண்டார்.
இடைவிடாத பங்கேற்பு
சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கிய காலத்தில், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்பதை எக்காரணம் கொண்டும் நிறுத்திக்கொள்ளவில்லை. 1999-ல் ஷில்லாங்கில் தேசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் அவர் சாம்பியன் பட்டம் வென்றார். ஒரு வகையில் இது தேசிய அளவில் அவர் பெற்ற முதல் வெற்றியும்கூட. புத்தாயிரத்தில் தொடங்கி அடுத்த சில ஆண்டுகள்வரை சர்வதேச அளவிலும் தேசிய அளவிலும் மாறிமாறிப் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றார் டோலா.
இதில் குறிப்பிடும்படியாக 2001-ல் அமராவதியில் நடந்த தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். வில்வித்தையில் ரெகர்வ் பிரிவில் தேர்ச்சிபெற்றவராக விளங்கிய டோலா, 2002-ல் நடந்த தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கத்துக்கு வைத்த குறி தப்பவில்லை. இந்தப் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார் டோலா. 2007-ல் விஜயவாடாவில் நடந்த தேசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும் தங்கப் பதக்கம் இவர் வசமானது.
முதல் ஒலிம்பிக் வீராங்கனை
தேசிய விளையாட்டுப் போட்டிகள் மட்டுமல்ல; இந்தக் காலகட்டத்தில் தொடர்ச்சியாகச் சர்வதேசப் போட்டிகளிலும் டோலா பங்கேற்றார். 2001-ல் ஹாங்காங் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி, 2003-ல் மியான்மரில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் பங்கேற்றபடி இருந்தார். 2001-ல் பெய்ஜிங்கில் நடந்த உலக வில்வித்தைப் போட்டி பெரிய அளவில் அவரைச் சோதிக்க, 2003-ல் நியூயார்க்கில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டி அவருக்குக் கைகொடுத்தது. தனி நபர் பிரிவில் சிறப்பாக விளையாடி 13-வது இடத்தைப் பிடித்தார் டோலா. அவருடைய இந்தச் சிறப்பான செயல்பாடு, 2004-ல் ஏதென்ஸில் நடந்த ஒலிம்பிக்குக்குத் தகுதி பெற உதவியது.
ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் டோலா பங்கேற்றதன் மூலம் ஒலிம்பிக் வில்வித்தைப் பிரிவில் பங்கேற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பை அவர் பெற்றார். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 13-வது இடத்தைப் பிடித்திருந்ததால், அவர் மீது ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், எதிர்பாராதவிதமாக பரிச்சயமில்லாத தென்னாப்பிரிக்க வீராங்கனையிடம் தோல்வியடைந்து முதல் சுற்றிலேயே வெளியேறினார் டோலா. ஆனால், குழுப் பிரிவில் இந்தியா 8-வது இடத்தைப் பிடிக்க பெரிதும் உதவினார். ஒட்டுமொத்தமாக ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் 52-வது இடத்தைப் பிடித்து ஏமாற்றமடைந்தார் டோலா.
ஆட்டத்தில் முன்னேற்றம்
இந்தத் தோல்விக்குப் பிறகு அவர் முன்பைவிடப் பயிற்சியில் தீவிரம் காட்டத் தொடங்கினார். அதன் பலனாக, 2005-ல் டெல்லியில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வெல்ல முடிந்தது. இதே ஆண்டில் மாட்ரிட் நகரில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில், தனி நபர் பிரிவில் 15-வது இடத்தைப் பிடித்தபோதும், குழுப் பிரிவில் இந்திய அணி அரையிறுதிவரை செல்லப் பேருதவியாக இருந்தார் டோலா. இந்தப் போட்டியில் வெறும் இரண்டு புள்ளிகள் கணக்கில் இந்திய அணி வெண்கலத்தைத் தவறவிட்டது.
இந்தக் காலகட்டத்தில் டோலாவின் வில்வித்தை ஆட்டம் மெருகேறியிருந்தது. 2006-ல் உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டிகளில் கால் இறுதிவரை டோலா முன்னேறினார். ஆனால், தென் கொரிய வீராங்கனையிடம் 109 - 105 என்ற புள்ளிக் கணக்கில் போராடித் தோற்றார். இதேபோல ஷாங்காயில் நடைபெற்ற உலகக் கோப்பையில் இவர் அங்கம் வகித்த இந்திய அணி 4-வது இடத்தைப் பிடித்து அசத்தியது.
2006-ல் கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். சக இந்தியப் போட்டியாளர் ரீனா குமாரியைத் தோற்கடித்து இந்தப் பதக்கத்தை வென்றார்.
உலக சாம்பியன்
டோலாவின் பயணத்தில் மறக்க முடியாத ஆண்டு 2007. அந்த ஆண்டு இங்கிலாந்தில் உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டி நடைபெற்றது. தனிநபர் பிரிவில் சிறப்பாக விளையாடி, தங்கப் பதக்கம் வென்று அசத்தினார் டோலா. இந்த வெற்றியின் மூலம் உலக சாம்பியனாக வலம்வந்தார்.
இதனால் 2008-ல் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் பெரிய அளவில் சாதிப்பார் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் இருந்தது. ஆனால், அந்த ஒலிம்பிக்கில் தனி நபர் பிரிவிலும் அவர் அங்கம் வகித்த குழுவும் தகுதிச் சுற்றுக்குக்கூட முன்னேறாமல் மூட்டை கட்டியது பெரும் சோகம்.
காமன்வெல்த் சாதனை
இந்தத் தோல்விக்குப் பிறகு அடுத்த இரு ஆண்டுகள் பெரிய அளவில் சர்வதேசப் போட்டிகளில் டோலா பங்கேற்கவில்லை. 2010-ல் டெல்லியில் காமன்வெல்த் போட்டி நடந்தபோதுதான் களத்துக்கு வந்தார். தாய்நாட்டில் நடைபெற்ற இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் அங்கம் வகித்த வில்வித்தைக் குழு, தங்கப் பதக்கம் வென்று அசத்தியது. தனி நபர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுத் தன் பெயரை நிரூபித்தார் டோலா.
வில்வித்தைப் போட்டிகளில் இந்திய அளவிலும் உலக அளவிலும் குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்த டோலா பானர்ஜியை அங்கீகரிக்கும்வகையில் 2005-ல் மத்திய அரசு அர்ஜுனா விருது வழங்கிக் கவுரவித்தது. இந்த விருதைப் பெற்ற முதல் வில்வித்தை வீராங்கனை டோலாதான்.
டோலா பானர்ஜியின் வில்வித்தைப் பயணம் ஏற்ற இறக்கம் கொண்டதுதான். ஆனாலும், இந்த விளையாட்டில் சாதனைகள் பல படைத்த முதல் இந்தியப் பெண் என்ற வகையில் அவர் பதித்த தடங்கள் அழியாப் புகழ்பெற்றவை.
(வருவார்கள் வெல்வார்கள்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: karthikeyan.di@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT