Last Updated : 23 Sep, 2018 04:07 PM

 

Published : 23 Sep 2018 04:07 PM
Last Updated : 23 Sep 2018 04:07 PM

ஆடும் களம் 20: வட்டெறியும் வேங்கை!

சில விளையாட்டுகளில் இந்திய வீராங்கனைகள் இருப்பதோ சாதிப்பதோ யாருக்குமே தெரியாது. அப்படிப்பட்ட ஒரு விளையாட்டுதான் வட்டெறிதல். தடகளப் பிரிவில் இடம்பெற்றுள்ள இந்த விளையாட்டில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்து தேசத்தைத் திரும்பிப் பார்க்கவைத்தவர் கிருஷ்ண பூனியா.

சிறு வயது வேதனை

கிருஷ்ண பூனியாவின் சொந்த ஊர், ஹரியாணாவில் உள்ள அக்ரோஹா. ஒன்பது வயது ஆவதற்குள்ளாகவே தந்தை, பாட்டி, தாய் என உறவுகளை அடுத்தடுத்துப் பறிகொடுத்தவர். மிகப் பெரிய இழப்பிலிருந்து மீண்டுவந்த பூனியா, சிறுவயதிலிருந்து வேலையைச் செய்தபடி படித்தார்.

அவரது வீட்டில் 60-க்கும் மேற்பட்ட மாடுகள் இருந்ததால், மாடுகளைப் பராமரிப்பது அவர்களது முழுநேரத் தொழிலாக இருந்தது. பால் கறந்து விற்பதில் உதவியாக இருந்துவந்தார் பூனியா. அவருக்கு 15 வயதாகும்போது தினமும் எட்டு மாடுகளின் பாலைக் கறக்கும் அளவுக்கு அந்தத் தொழிலில் துடிப்போடு இருந்தார்.

படிக்கும் வயதிலேயே திருமணம்

பள்ளியில் படித்தபோது படிப்பைத் தாண்டி விளையாட்டு, உடற்பயிற்சியில் எல்லாம் அவர் அவ்வளவாக ஈடுபட்டதில்லை. கல்லூரியில் காலடி எடுத்து வைத்தபோது அவருடைய தோழிகள் அவரை விரும்பி விளையாட அழைத்தார்கள். காரணம், பூனியாவின் உயரம். நல்ல உயரத்தில் இருந்த அவர் அதற்கேற்ற எடையுடன் இருந்தார்.

எந்தப் பந்தையும் லாவகமாகத் தூக்கியெறிவதிலும் அபாரமாக இருந்தார். இவையெல்லாம் சேர்ந்து கல்லூரியில் பூனியாவுக்கு விளையாட்டு வாய்ப்புகளை உருவாக்கி தந்தன. ஆனால், கல்லூரியில் விளையாட்டில் மிகப் பெரிய அளவில் வளரும் அளவுக்குக் காலம் காத்திருக்கவில்லை. கல்லூரியில் படிக்கும்போதே பூனியாவுக்குத் திருமணம் நடந்தது. பூனியாவைக் கரம் பிடித்தவர், ஒரு விளையாட்டு வீரர்.

பயிற்சி கொடுத்த கணவர்

பூனியாவின் கணவர்  வீரேந்தர் சிங், சம்மட்டி எறிதல் என்றழைக்கப்படும் ‘ஹாமர் த்ரோ’ வீரர். காயம் காரணமாக  விளையாட்டிலிருந்து ஓய்வுபெற்றுத் திருமண வாழ்க்கைக்குள் நுழைந்திருந்தார். தன்னால் பெரிய அளவில் சாதிக்க முடியாமல் போய்விட்ட வருத்தம் அவருக்கு அதிகம் இருந்தது. அந்த வருத்தத்தைப் போக்கிக்கொள்ளத் தன் மனைவி கிருஷ்ண பூனியாவை வீராங்கனையாக்க முடிவுசெய்தார். சற்றும் யோசிக்காமல் பூனியாவின் பயிற்சியாளராக மாறினார் கணவர்.

கிருஷ்ண பூனியாவின் உயரம், எடைக்கு ஏற்ப வட்டெறிதல் எனப்படும் ‘டிஸ்கஸ் த்ரோ’ விளையாட்டை முறைப்படி கற்றுக்கொடுத்தார். தன் கணவர் மூலம் அந்த விளையாட்டின் நுணுக்கங்களை விரைவாகவே கற்றுக் கொண்டார் பூனியா. ஆனால், அடுத்தடுத்துக் களத்துக்கு வரமுடியாத சூழ்நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.

முதலில் அவருக்கு முதுகில் ஏற்பட்ட காயம் அவரது விளையாட்டுக் கனவுக்கு முட்டுக்கட்டையாக வந்தது. அதிலிருந்து தேறிவந்தபோது, அவருக்குக் குழந்தை பிறந்தது. இந்த இரண்டு நிகழ்வுகளும் பூனியாவின் வாழ்க்கையில் ஐந்தாண்டுகளை எடுத்துக்கொண்டன.

முதல் வாய்ப்பு

பின்னர் மாநில, தேசிய அளவிலான  போட்டிகளில் பங்கேற்றுவந்தபோதே சர்வதேசப் போட்டிகளிலும் களம்கண்டார் பூனியா. 2006-ல் தோஹாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க பூனியாவுக்கு முதன்முறையாக வாய்ப்புக் கிடைத்தது. பூனியா இந்தப் போட்டியில் பெரிதாகச் சாதிப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. பெயரளவுக்குத்தான் இந்த விளையாட்டில் ஒரு போட்டியாளராக பூனியா சேர்க்கப்பட்டிருந்தார்.

ஆனால், அப்போது அதிர்ஷ்டமும் களமும் அவர் பக்கம் இருந்தன. சீன வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்திய இந்தப் போட்டியில், 61.53 மீட்டர் தூரம் வட்டெறிந்து கிருஷ்ண பூனியா வெண்கலப் பதக்கத்தை வென்றார். இந்த வெற்றி தடகள விளையாட்டில் அவரது பெயரை அழுத்தமாகப் பதிவுசெய்தது. அதே ஆண்டில் தேசிய தடகள விளையாட்டுப் போட்டியிலும் பூனியா தங்கப் பதக்கம் வென்றபோது புகழ்பெற்றார்.

ஒலிம்பிக் கனவு

தேசிய அளவிலும் ஆசிய அளவிலும் கிருஷ்ண பூனியா பதக்கங்களை வென்ற போதும், ஒலிம்பிக் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதை  லட்சியமாகக் கொண்டிருந்தார். 2008-ல் பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் பங்கேற்க அவருக்கு வாய்ப்பும் கிடைத்தது. தகுதிச் சுற்றில் 10-வது இடத்தைப் பிடித்ததால், அவரால் இறுதிச் சுற்றுக்குள் நுழைய முடியாமல் போனது. 2010-ல் சீனாவின் குவாங்ஷு நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. அந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடி, வெண்கலப் பதக்கத்தை கிருஷ்ண பூனியா வென்றார்.

புதிய சாதனை

அடுத்தடுத்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்றதால், ஒலிம்பிக் கனவுடன் பயிற்சியைத் தொடர்ந்தார். இடையே 2010-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் அவருடைய திறமையை நிரூபிக்க ஒரு வாய்ப்பாக வந்தது. டெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் அபாரமாக விளையாடி 61.5 மீட்டர் தொலைவுக்கு வட்டெறிந்து,  தங்கப் பதக்கத்தை வென்றார்.

காமன்வெல்த் போட்டியில் வட்டெறிதல் விளையாட்டில் இந்திய வீராங்கனை ஒருவர் பெற்ற முதல் தங்கப் பதக்கம் இதுதான். இந்திய தடகள டிராக் அண்ட் ஃபீல்ட் வரலாற்றில் 1958 காமன்வெல்த் போட்டியில் மில்கா சிங் செய்த சாதனைக்குப் பிறகு கிருஷ்ண பூனியா அந்தச் சாதனையைச் சமன் செய்து அசத்தினார். இந்த வெற்றி பூனியாவைச் சிகரத்துக்குக் கொண்டு சென்றது.

லண்டன் ஒலிம்பிக்

காமன்வெல்த் போட்டியில் கிருஷ்ண பூனியா பதக்கம் பெற்றதால், அவரது தன்னம்பிக்கை மேலும் அதிகரித்தது. நம்பிக்கையோடு 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்குக்குத் தயாராகத் தொடங்கினார். பெய்ஜிங் ஒலிம்பிக்கைப்போல கோட்டை விடாமல் இருக்க, தீவிரப் பயிற்சி செய்தார்.

அதன் பயனாகத் தகுதிச் சுற்றைத் தாண்டி இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார் பூனியா. ஒலிம்பிக் தடகளம் டிராக் அண்ட் ஃபீல்ட் பிரிவில் மில்கா சிங், பி.டி. உஷா, ஸ்ரீராம் சிங், குருபட்சன் சிங், அஞ்சு பாபி ஜார்ஜ் ஆகியோரை அடுத்து இறுதிச் சுற்றுவரை முன்னேறிய ஆறாவது வீராங்கனை என்ற பெருமை பூனியாவுக்கு அப்போது கிடைத்தது.

இறுதிச் சுற்றில் அபாரமாக விளையாடினார். நான்கு வாய்ப்புகளைப் பயன்படுத்தி 62.42 மீ, 61.61 மீ, 61.31 மீ தூரம் வட்டெறிந்த பூனியா,  நான்காவது வாய்ப்பில் 63.63 மீ தொலைவுக்கு வீசினார். சிறப்பாக விளையாடியும் அவரால் 6-வது இடத்தைத்தான் பிடிக்க முடிந்தது. ஒலிம்பிக் பதக்கத்தை பூனியா கோட்டைவிட்டிருந்தாலும்,  6-வது இடம் பிடித்தது அவருக்கு மிகப் பெரிய ஸ்டார் அந்தஸ்தை இந்தியாவில் பெற்றுத்தந்தது.

அரசியல் நுழைவு

தடகள விளையாட்டுப் பிரிவுகளில் ஒன்றான வட்டெறிதலில் தொடர்ந்து சாதித்துவந்த கிருஷ்ண பூனியாவின் சாதனையைப் பாராட்டி 2010-ல் அர்ஜுனா விருதையும் 2011-ல் பத்மஸ்ரீ விருதையும் மத்திய அரசு வழங்கிக் கவுரவித்தது. தொடர்ந்து விளையாட்டுக் களத்தில் விளையாடியபோதும், அரசியல் களத்திலும் அவர் காலடி எடுத்துவைத்தார். தற்போது 36 வயதாகும் கிருஷ்ண பூனியா, காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரகராக இருக்கிறார்.  பெண் கல்வி, வரதட்சணை ஒழிப்பு போன்ற சமூகப் பிரச்சினைகளுக்காகவும் குரல் கொடுத்துவருகிறார்.

(வருவார்கள் வெல்வார்கள்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: karthikeyan.di@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x