Last Updated : 24 Sep, 2018 11:23 AM

 

Published : 24 Sep 2018 11:23 AM
Last Updated : 24 Sep 2018 11:23 AM

பெண்கள் 360: எளிய கவிதை நாயகி

எளிய கவிதை நாயகி

1890-ல் ரஷ்யாவில் ரேச்சல் பிறந்தார். சிறுவயது முதலே அவருக்கு நுரையீரல் பாதிப்பு இருந்தது. 19 வயதில் பாலஸ்தீனத்துக்கு வந்தவர் அங்கேயே தங்கிவிட்டார். ஹீப்ரு மொழியைக் கற்றவர், பிழைப்புக்காகப் பலதரப்பட்ட பணிகளைப் பார்த்தார். அவரது வாழ்க்கையில் மகிழ்ச்சி நிரம்பிவழிந்த காலகட்டம் அது. முதல் உலகப்போரால் 1913-ல் மீண்டும் ரஷ்யாவுக்குச் சென்றார். ஆறு வருட வறுமை வாழ்வுக்குப் பின்  அகதியாக மீண்டும் பாலஸ்தீனம் வந்தார். அப்போது அவரைக் காசநோய் தாக்கியது. வேலைக்குச் செல்ல முடியவில்லை.

மீண்டும் வறுமை. 1920-ல் Mood எனும் அவரது கவிதை ஹீப்ரு நாளிதழ் ஒன்றில் வெளியானது. அதன்பின் நடந்தது வரலாறு. ஹீப்ரு கவிதை உலகின் முகமானார். மனித உணர்வு நிரம்பிய அவரது கவிதையைத் தனிமையின் வேதனையே ஆக்கிரமித்திருந்தது. 40 வருடங்களுக்குள் அவர் வாழ்வு முடிந்துவிட்டது. எளிய மொழியில் அமைந்த நடையே அவரது பாணி.

என்னிலிருந்து வெகுதொலைவிலிருக்கும் என் அன்பே?

நீ நலமாக இருக்க விரும்பும்

நீ அருகில் இருக்க விரும்பும் நான் உரக்க அழுவது

உனக்குக் கேட்கிறதா அன்பே?

என் நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன

பிரிவின் கண்ணீருடன்

என் வாழ்க்கையின் இறுதிவரை

உனக்காகக் காத்திருப்பேன்

- இந்தக் கவிதை அதை உணர்த்தும். அவரது 128-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக செப்டம்பர் 20 அன்று சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டது.

 

கோட்டேஸ்வரம்மா: பாயும் ஒளி

பெண்ணியச் செயற்பாட்டிலும் கம்யூனிச சித்தாந்தத்திலும் எழுத்துலகிலும் அழுத்தமான தடத்தைப் பதித்த மிகப் பெரும் ஆளுமை, கொண்டபள்ளி கோட்டேஸ்வரம்மா. கடந்த வியாழன் அன்று 100-வது வயதில் தனது களப்பணிகளுக்கு நிரந்தர ஓய்வைக் கொடுத்துச் சென்றுவிட்டார். ஆந்திராவில் உள்ள பம்மாரு என்ற குக்கிராமத்தில் பிறந்தார். நான்கு வயதிலேயே மனைவியாக்கப்பட்டார். ஆறு வயதுக்குள் கணவனை இழந்தார்.

சமூக எதிர்ப்புகளை மீறி கொண்டபள்ளி சீதாராமய்யாவை 18 வயதில் திருமணம் செய்துகொண்டார். இருவரும் கொள்கையால் ஒன்றிணைந்தாலும் தனிப்பட்ட காரணங்களுக்காகக் கணவரைப் பிரிந்தார். கையில் குழந்தைகளுடன் வாழ்வைத்  தனித்து எதிர்கொண்டார். 35 வயதில் எழுதப் படிக்கக் கற்றார். கம்யூனிசக் கட்சியில் இணைந்து தீவிரமாகச் செயல்பட்டார். பெண் விடுதலைக்காக இறுதி மூச்சுவரை குரல்கொடுத்தார்.

அடித்தள மக்களுக்காகத் தொடர்ந்து போராடினார். மக்கள் பிரச்சினைகளைக் களைவதையே தன் சுவாசமாகக் கொண்டிருந்தார். தெலங்கானாவின் உதயத்துக்கு இவரும் ஒரு காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. தனது அரசியல் செயற்பாட்டுக்குத் துணையாக இலக்கியத்தைத் தேர்ந்தெடுத்தார். எண்ணற்ற கட்டுரைகள், பாடல்கள், நாவல்கள் என எழுதிக் குவித்து, மக்கள் உரிமை குறித்த விழிப்புணர்வைப் பரப்பினார்.

‘நிர்ஜன வாரிதி’ என்ற தலைப்பில் வெளிவந்த அவரது சுயசரிதையில் பெண்ணுலக வாழ்வே பொதிந்து கிடக்கிறது. சமூகத்துக்குக் குறிப்பாக, பெண்களின் பாதையில் பாயும் ஒளி அது!

 

நடிகை என்றால் இளக்காரமா?

உதவி இயக்குநர் லலித்குமார், நடிகை நிலானியைத் திருமணம் செய்ய விரும்பியுள்ளார். நிலானி அதற்கு மறுப்பு தெரிவித்ததால், ஷூட்டிங் ஸ்பாட்டுக்குச் சென்று நிலானியை மிரட்டியுள்ளார். அப்போது நிலானி, மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். காவல்துறை இருவரையும் விசாரித்துச் சமரசப்படுத்தி அனுப்பியது. அதன் பின்னரும் அவருடைய தற்கொலை மிரட்டல்கள் தொடர்ந்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் லலித்குமார் தற்கொலை செய்துகொண்டார். நிலானி ஏற்கெனவே திருமணமாகி, கணவனைப் பிரிந்தவர். இரண்டு குழந்தைகளுக்குத் தாய். தன் வருங்காலத்தைக் கருத்தில்கொண்டு, லலித்குமாரின் காதலை ஏற்றுள்ளார். இரண்டு ஆண்டுகள் கழித்துத் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தனர். இதனிடையே லலித்குமாரின் நடவடிக்கைகள் பிடிக்காததால், அதிலிருந்து பின்வாங்கியதாக நிலானி சொல்கிறார்.

இரண்டு தனிப்பட்ட நபர்களின் வாழ்வில் நடந்தது என்ன என்பது யாருக்கும் தெரியாது. ஆசிட் வீச்சு, கொலை போன்ற பழிவாங்கும் நடவடிக்கைகளில் தற்கொலையும் சேர்ந்துவிட்டதா என எண்ணும் விதமாகத் தற்கொலைக்கு நிலானியே காரணம் என்ற பொது பிம்பம் ஊடகங்களால் கட்டமைக்கப்படுகிறது. அவர்களது தனிப்பட்ட வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றன. இந்த நிலையில் நிலானியும் தற்கொலைக்கு முயன்று மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

லலித் குமாரின் மரணமும் நிலானிக்கு எற்படுத்தப்பட்ட மன உளைச்சலும் அவரது தனிப்பட்ட வாழ்வும் இன்று வெறும் காட்சிப்பொருட்களாகக் கடந்து செல்கின்றன.

 

சாதி வெறியால் மடிந்த இன்னுமொரு உயிர்

பிரணாய் (24), அம்ருதா (21) இருவரும் தெலங்கானாவைச் சேர்ந்தவர்கள். பத்தாம் வகுப்பு முதல்  ஒன்றாகப் படித்தவர்கள். நண்பர்களாக இருந்தவர்கள், சில ஆண்டுகளுக்குப் பின்பு காதலர்களானார்கள். அம்ருதாவின் அப்பா மாருதி ராவ், தொழிலதிபர். ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவரான அவர், மகளின் காதலை எதிர்த்தார். பிரணாய் மிரட்டப்பட்டார்.

saadhijpg

ஆனால், அம்ருதாவும் பிரணாயும் மிரட்டலைப் புறந்தள்ளி திருமணம் செய்துகொண்டனர். கருவுற்றிருந்த அம்ருதாவைக் கடந்த வாரம் மருத்துவப் பரிசோதனைக்கு பிரணாய் அழைத்துச் சென்றார். மருத்துவமனையிலிருந்து திரும்பும் வழியில் பிரணாய் கொல்லப்பட்டார்.

இவர்கள் செய்த ஒரே குற்றம் சாதியை நம்பாமல் காதலை நம்பியது. கொலைக்கான காரணத்தையும் சாதி வெறியின் வீரியத்தையும் பற்றியெல்லாம் கவலைப்படாமல், தீர்வுகளைப் பற்றியும் சிந்திக்காமல், அவர்களது திருமண வீடியோவே சமூக வலைத்தளங்களில் தற்போது பகிரப்பட்டுவருகிறது. இந்தச் சம்பவத்தின் ரத்தச் சுவடு காயும் முன்னே ஹைதரபாத்தில் மற்றொரு ஆணவக்கொலை முயற்சி நடந்துள்ளது.

21 வயது மாதவியும் அவருடைய 23 வயது கணவர் சந்தீப்பும் படுகாயத்துடன் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிவருகின்றனர். மாதவியை அவர் தந்தைதான் கொல்ல முயன்றதால் இந்தக் கொலை முயற்சி ஆணவக் கொலயின் கீழ் வராது என இந்தச் சம்பவத்துக்குப் பின் பேட்டியளித்த உதவி ஆணையர் கூறியுள்ளார்.

 

பெண்கள் நடத்தும் போர்

பிரேசிலில் அதிபர் பதவிக்கான முதல்சுற்றுத் தேர்தல் அடுத்த மாதம் நடக்கவுள்ளது. அந்தத் தேர்தலின் முக்கிய வேட்பாளர்களில் ஜேர் போல்சானாரோவும் ஒருவர். செப்டம்பர் 6-ம் தேதி நடந்த ஒரு நிகழ்ச்சியில் மனநிலை பாதிக்கப்பட்ட நபர் ஒருவரால் அவர் கத்தியால் குத்தப்பட்டார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவரின் செல்வாக்கு அனுதாபத்தால், உயர்வதாகக் கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. பெண்கள் குறிப்பாகக் கருப்பினத்தவர், பாலியல் சிறுபான்மையினர் ஆகியோர் மீது மோசமான கருத்துகளைக் கூறிப் பிரபலமடைந்தவர் ஜேர் போல்சானாரோ.

இடதுசாரி கட்சியான தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மரியா டோ ரொசாரியோவைப் பார்த்து, “உன்னை வல்லுறவு  செய்ய மாட்டேன். ஏனென்றால், நீ அதற்குத் தகுதியானவர் இல்லை” என்று சொன்னது அதில் ஒன்று. பெண்கள் மத்தியில் ஜேருக்கு மிகப் பெரிய எதிர்ப்பு நிலவுகிறது. பெருகிவரும் இவரது செல்வாக்கை மட்டுப்படுத்தும் வகையில் பிரேசிலின் பிரபலப் பெண்கள் பலர் ஒன்று சேர்ந்து இவருக்கு எதிராக #EleNao (#NotHim) என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி பிரச்சாரம் தொடங்கியுள்ளனர். கிட்டத்தட்ட இரண்டு லட்சத்துக்கும் மேலானோர் இதுவரை ட்வீட் செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x