Last Updated : 16 Jun, 2019 08:58 AM

 

Published : 16 Jun 2019 08:58 AM
Last Updated : 16 Jun 2019 08:58 AM

முகங்கள்: இசையே இலக்கு

இசை மேடைகளில் டிரம்ஸ் இசைக்கும் கலைஞர்களாக ஆண்களை மட்டுமே பார்த்துப் பழகியவர்களைத் தனது அசாத்திய திறமையால் ஆச்சரியப்பட வைக்கிறார் ஸ்ரீசாய் சுதர்சனா. புதுச்சேரியைச் சேர்ந்த டிரம்மரான இவர் இசைமழையால் ரசிகர்களின் காதுகளைக் குளிர்விக்கிறார்.

புதுச்சேரி காந்தி திடலில் வார இறுதி நாட்களில் இசை நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காகக் கடற்கரை காந்தித் திடலில் வரிசையாக 50 டிரம்மர்கள் இசைத்த நிகழ்வில் முன்வரிசையில் நின்றபடி இசைத்த ஒரே பெண் டிரம்மர் ஸ்ரீசாய் சுதர்சனாதான். உடலில் டிரம்மைக் கட்டிக்கொண்டு கூட்டத்தின் நடுவே இசைப்பதும் அவரது பாணி. 11-ம்

வகுப்பு மாணவியான இவரைச் சிறு வயதிலேயே கவர்ந்த இசைக் கருவி  டிரம்ஸ். “எந்த இசை நிகழ்ச்சிக்குச் சென்றாலும் என் கண்கள் முதலில் டிரம்ஸ்ஸைத்தான் தேடும்” என்று சொல்லும் ஸ்ரீசாய் சுதர்சனா, தனது ஆசையைப் பெற்றோரிடம் சொல்லியிருக்கிறார். அவர்களும் அப்போது இரண்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த மகளை  டிரம்ஸ் பயிற்சி வகுப்பில் சேர்த்தனர்.

மூன்று ஆண்டு காத்திருப்பு

வாசிக்கும் நாற்காலியில் அமர்ந்து வாசிக்கப் போதிய உயரம்கூட அப்போது அவருக்கு இல்லை. ஆண்கள்தாம் டிரம்ஸ் வாசிப்பார்கள் என்று சுற்றியிருந்தவர்களும் நண்பர்களும் சொன்னதை அவர் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை.  தான் எப்போது உயரமாக வளர்வோம் எனக் காத்திருக்கத் தொடங்கினாரே தவிர, வேறு இசைக் கருவியைத் தொட விரும்பவில்லை.

மூன்று ஆண்டுகள் காத்திருந்து ஐந்தாவது படித்தபோது மீண்டும் டிரம்ஸ் வகுப்பில் சேர்ந்தார். “டிரம்ஸைத் தொட்டாலே எனர்ஜி வந்துவிடும். ஓரளவு இசைக்கப் பழகியதும் மக்களுக்கு நடுவே நடந்தபடியே சென்று இசைக்கத் தொடங்கினேன். அதன் எடை எனக்குச் சுமையாகத் தெரியவில்லை” என்கிறார் ஸ்ரீசாய்.

தற்போது டிரம்ஸில் ஆறாவது கிரேடு வந்திருக்கிறார். மொத்தம் எட்டு கிரேடு இருக்கிறது. லண்டன் டிரினிட்டி கல்லூரியில் சேர்வதே தன் லட்சியம் என அவர் குறிப்பிடுகிறார். அதன் பிறகு அந்தக் கல்லூரியிலேயே டியூட்டராக வேண்டும் என இலக்கு வைத்திருக்கிறார்.

எந்த இசைக் கருவியும் தன்னை இசைப்பவர் ஆணா பெண்ணா என்று பேதம் பார்ப்பதில்லை. திறமையும் முனைப்புமே எந்தத் துறையிலும் முன்னேறத் தேவை என்பதை உணர்த்துகிறது ஸ்ரீசாய் சுதர்சனாவின் டிரம்ஸ் இசை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x