Published : 29 Sep 2014 12:33 PM
Last Updated : 29 Sep 2014 12:33 PM
இசை உலகத்தில் சிறந்த தாள வாத்தியக் கலைஞராக மிகச் சிறு வயதிலேயே தன்னை நிரூபித்திருப்பவர் ஸ்வரூபா அனந்த்.
மறைந்த இசை மேதை உஸ்தாத் அல்லா ரக்கா, உஸ்தாத் ஜாகிர் ஹுசேன் ஆகியோரிடம் முறையாகத் தபேலா வாசிக்கக் கற்றுக்கொண்டவர். தன்னுடைய சொந்த முயற்சியில் டிரம்ஸ், ஜம்பை, தர்பூகா போன்ற உலகின் பல்வேறு பகுதிகளில் வாசிக்கப்படும் தாள வாத்தியங்களை வாசிக்கக் கற்றுக்கொண்டிருக்கிறார்.
இசைக்கும் காபி
புல்லாங்குழல் கலைஞர் ராம் சம்பத்துடன் சேர்ந்து `ஃபில்டர் காபி’ என்னும் பெயரில், இந்தியாவின் பிரபல மேடைகளிலும் வெளிநாட்டிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்திவருகிறார். இந்துஸ்தானி இசையையும் கிராமிய இசையையும் இந்திய மேற்கத்திய வாத்தியங்களில் குழைத்துக் கொடுப்பதுதான் இந்தக் குழுவின் சிறப்பு.
லண்டனின் ஜெர்ஸி ஆர்ட்ஸ் ஃபெஸ்டிவல், சவுத்தாம்டன் மேளா, இந்தோனேசியாவின் பாலி திருவிழா, மலேசியாவின் இளைஞர் திருவிழா, மைசூர் தசரா திருவிழா, தான்சேன் தியாகராஜா திருவிழா போன்ற பிரபல மேடைகளில் விதவிதமான வாத்தியங்களில் இவருடைய தாள மழை பொழிந்திருக்கிறது.
ரஹ்மானுடன்
உஸ்தாத் ஜாகிர் ஹுசேன், உஸ்தாத் ஃபாசல் குரேஷி, டாஃபிக் குரேஷி, ஷங்கர் மகாதேவன், ராம் சம்பத், பிரீத்தம், கைலாஷ் கேர், ஹரிஹரன், சலீம் சுலைமான் ஆகிய இசைப் பிரபலங்களுடன் இணைந்து தாள வாத்தியங்களை வாசித்திருப்பதைத் தனக்குக் கிடைத்த பேறாக நினைக்கிறார் ஸ்வரூபா. ஆஸ்கர், கிராமி விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து வழங்கிய `ஐ பிளீவ்’ இசை நிகழ்ச்சியைப் பற்றி நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார்.
எம்.டிவியில் புகழ்பெற்ற இசை அமைப்பாளர்கள் ராம், சம்பத் தயாரித்த நிகழ்ச்சியிலும் இவர் பங்கெடுத்திருக்கிறார். எண்ணற்ற விளம்பரப் படங்களுக்கு இசை அமைத்துள்ளார். `ஆஷ்வாலி தூப்’ என்னும் இசை ஆல்பத்துக்காகப் புகழ்பெற்ற மேற்கத்திய இசைக் கலைஞரான ஜார்ஜ் புரூக், உஸ்தாத் ஜாகிர் ஹுசேன், டாஃபிக் குரேஷி, உஸ்தாத் சுல்தான் கான் ஆகியோருடன் இணைந்து பலதரப்பட்ட தாள வாத்தியங்களை வாசித்திருக்கிறார்.
இந்தியாவின் இளம் இசைக் கலைஞர்களை அடையாளம் காணும் `கலர்ஸ் டிவி’ நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து ஷான், வசுந்தரா தாஸ் போன்ற நடுவர்களின் பாராட்டைப் பெற்றிருக்கிறார். அப்படி அடையாளம் காணப்பட்ட இசைக் கலைஞர்களைக் கொண்ட `ஜாஸன்’ குழுவிலும் இவர் இடம்பெற்றிருப்பது சிறப்பு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT